Last Updated : 05 Jul, 2019 11:14 AM

 

Published : 05 Jul 2019 11:14 AM
Last Updated : 05 Jul 2019 11:14 AM

திரைப் பார்வை: ஒரு ஆஸ்கார் சினிமாவின் கதை (அண்ட் த ஓஸ்கர் கோஸ் டூ - மலையாளம்)

தொடக்கக் கால சினிமா, புராண, இதிகாசங்களைப் பேசியது. பிறகு சமூக அவலங்களைச் சித்தரித்தது. அடுத்து வந்த சினிமாக்கள் தங்களது சோகக் கதைகளையும் சொல்லத் தொடங்கின. அப்படியான ஒரு சினிமாவின் கதைதான் ‘அண்ட் த ஓஸ்கர் கோஸ் டூ’.

‘ஆதாமிண்டெ மகன் அபு’ படத்தின் மூலம் கவனம் பெற்ற சலீம் அகமது இயக்கியிருக்கும் இந்தப் படம், ஒரு நல்ல சினிமா உருவாவதற்குப் பின்னாலுள்ள பாடுகளைப் பேசுகிறது. கொச்சியை மையமாகக் கொண்டு வாழும் சினிமா ஆசையுள்ள ஒரு இளைஞர் கூட்டத்தை இந்தப் படம் முதன்முறையாகச் சித்தரிக்கிறது.

தென்னிந்திய சினிமா தலைநகரமான சென்னை வரை தொடரும் அவர்களது முயற்சிகளையும் சொல்கிறது. தயாரிப்பாளரின் பள்ளி செல்லும் மகளுக்குப் பிடிக்கவில்லை என்பதால் ஒரு உதவி இயக்குநருக்கு சினிமா வாய்ப்பு நழுவிப் போகிறது.

இதுபோல் படம் போகிற போக்கில் சினிமாவின் அவலங்களையும் பதிவுசெய்துள்ளது. சினிமாத் தொழிலில் போஸ்டர் ஒட்டுபவரிலிருந்து தயாரிப்பு நிர்வாகிகள்வரை செய்யும் ஏமாற்று வேலைகளையும் காட்சிப்படுத்தியுள்ளது. அதேநேரம், சினிமாவை உலகின் சிறந்த தீரச் செயல்பாடு எனப் படம் தூக்கிப் பிடிக்கவில்லை.

இந்தப் படத்தை இரு பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கலாம். கதையம்சமுள்ள படத்தை எடுக்க முயற்சிக்கும் ஒரு உதவி இயக்குநர், தானே தயாரிப்பாளர் ஆகிவிடத் தீர்மானிக்கிறார். நிலத்தை, நகைகளை எல்லாம் அடகுவைத்து தன் வேலைகளைத் தொடங்குகிறார்.

சொச்சப் பணத்தை வைத்துக்கொண்டு படமெடுக்கத் துணியும் அவர் படாதபாடு படுகிறார். குழுவிலுள்ள பலருக்கும் இந்தப் படம் பாதியில் நின்றுவிடும் என்ற உறுதியான நம்பிக்கை. இதற்கிடையில் அவர் தன் கனவு படத்தை எடுத்தாரா என்பது ஒரு பகுதி. இது கேரளத்தில் நடக்கும் கதை.

அடுத்த பகுதி அமெரிக்காவில் நடக்கிறது. அது வேறு விதமான சிரமங்களைப் பேசுகிறது. ‘இந்தியா சார்பில் ஆஸ்கார் பரிந்துரைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள படம்’ என்ற செய்திக்கும் பின்னாலுள்ள விஷயங்களை இந்தப் பகுதி திறந்து சொல்லியிருக்கிறது.  இந்த இரண்டும் இயக்குநர் சலீமுக்கு நடந்த அனுபவங்கள்தாம். இது ஏறக்குறைய அவர் கதைதான்.

என்றாலும் இது யாருக்கும் பொருந்தக்கூடிய கதைதான் என அவர் மறுக்கிறார். ‘ஆதாமிண்டெ மகன் அபு’ படத்தை யாரும் தயாரிக்க முன்வராத நிலையில் அவர்தான் அதைத் தயாரித்தார். இந்த இரு பகுதிகளிலும் படம் சற்று உணர்ச்சிவசப்பட்டுள்ளது.

முதல் பகுதியில் சினிமாவுக்குள் ஒரு சினிமா காண்பிக்கப்படுகிறது. தான் கண்டு வளர்ந்த ஒருவரின் கதையைத்தான் உதவி இயக்குநர் படமாக எடுக்கிறார். ‘ஆதாமிண்டெ மகன் அபு’வின் நாயகனான சலீம் குமார்தான் இந்தப் படத்தின் நிஜக் கதாபாத்திரம். அதில் அவரது மனைவியாக நடித்த ஸரினா வஹாப்தான் இதிலும் இணை.

தன் கதாபாத்திரங்களுடன் இயக்குநராக நடித்திருக்கும் டோவினா தோமஸ் காட்டும் பிரியம் உணர்ச்சிமிக்கது. ஒரு எழுத்தாளர் தன் கதாபத்திரங்களை சிநேகிப்பதற்கு ஒப்பானது. இதில் ஒருபடி மேலே போய், கலைஞன், பலகார வியாபாரியான கதாபாத்திரத்துக்காக சுமைதூக்கிவிட்டு உதவுகிறான். கலைஞனும் கதாபாத்திரமும் சந்தித்துக்கொள்ளும் இடங்கள் உண்மைக்கும் கற்பனைக்கும் இடையிலான அற்புதத்தைத் திறந்து காட்டுகின்றன.

‘ஆதாமிண்டெ மகன் அபு’வுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்ததுபோல் இந்தப் படத்தில் இயக்குநர் இயக்கும் படத்துக்கும் விருது கிடைக்கிறது.  அடுத்து அது ஆஸ்காருக்கான இந்தியப் பரிந்துரைப் படமாகவும் தேர்வாகிறது. ‘ஆதாமிண்டெ மகன் அபு’வும் 2012-ம் ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான இந்தியப் பரிந்துரைப் படமாகத் தேர்வானது.

அடுத்த பகுதிகளில் ஆஸ்கர் விருது பெறுவதற்குப் பின்னாலுள்ள உள்ளடி வேலைகளை படம் அம்பலப்படுத்துகிறது. நிஜத்தில் ஆஸ்கர் விருதுபெற்ற ரசூல் பூக்குட்டியை இயக்குநரான நாயகன் சந்தித்து ஆலோசனை கேட்கிறார். அவரது பரிந்துரையின்படி அமெரிக்காவில் இருக்கும் ஆஸ்கார் விருது முகவர்களைத் தேடிப் புறப்படுகிறார். அவர்கள் லட்சங்களில் கட்டணம் வசூலிக்கிறார்கள். 

நடுவர்களுக்கான சிறப்புக் காட்சிகள், அவர்களுக்கான விருந்து உபசாரங்கள் என இன்னும் பல லட்சங்கள் செலவாகின்றன. படத் தயாரிப்புக்கு ஆன செலவைவிட, ஆஸ்கார் விருது முயற்சிக்கு இரு மடங்கு செலவு ஆகிறது.

இன்முகத்துடன் வரவேற்ற முகமை நிறுவனம் தன் கார்பரேட் முகத்தையும் காட்டுகிறது. படம் சிறப்புக் காட்சிகளில் பெரும் வரவேற்பைப் பெறுகிறது. ஆனால் அது ஆஸ்கார் விருதை வென்றதா என்பதை இயல்பாகச் சித்தரித்து படம் யதார்த்தத்துடன் நிறைவடைகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x