கோடம்பாக்கம் சந்திப்பு: கே.கே.விக்ரம்

கோடம்பாக்கம் சந்திப்பு: கே.கே.விக்ரம்
Updated on
2 min read

கே.கே.விக்ரம்

ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவத்தின் சார்பில், விக்ரம் நாயகனாக நடிக்க, கமல் தயாரித்திருக்கும் 45-வது படம் ‘கடாரம் கொண்டான்’. ராஜ்கமல் நிறுவனத்தின் பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவத்துடன் ‘தூங்காவனம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ராஜேஷ் எம்.செல்வா இயக்கியிருக்கிறார்.

சென்னையில் நடந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய கமல், “விக்ரம், 'சியான்' விக்ரமாக மாற இவ்வளவு காலம் ஆகிவிட்டதே என்று கவலைப்பட்டிருக்கிறேன். ‘சேது’ இன்னும் பல காலத்துக்கு முன்பே வந்திருக்க வேண்டும். ‘கடாரம் கொண்டான்’ படத்தை என்ஜாய் பண்ணிப் பார்த்தேன்.

இனி சியான் விக்ரமை கே.கே.விக்ரம் என்று அழைப்பார்கள். மற்ற நடிகர்களை நடிக்கவிட்டு அழகு பார்ப்பதில்தான் ஒரு நடிகனின் சிறப்பு இருக்கிறது. ‘திருவிளையாடல்’ படத்தில் நாகேஷை நடிக்கவிட்டு சிவாஜி ரசித்துக்கொண்டிருப்பார். விக்ரம் பேசும்போது ‘இது ஆங்கிலம் படம்போல இருக்கும்’ என்றார். அப்படிச் சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும். நிஜமாகவே இது ஆங்கிலப்படம் போலதான். படத்தைப் பார்க்கும்போது அதை உணர்வீர்கள்” என்றார். இந்தப் படத்தில் நாசரின் மகன் அபி, கமலின் மகள் அக்‌ஷரா உட்படப் பலர் நடித்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் அம்மன் கோயில்!

தமிழக அரசியலிருந்து முற்றாக விலகி குடும்பத்துக்காக அமெரிக்காவில் குடியேறிவிட்டார் நடிகர் நெப்போலியன். தமிழில் அரிதாக நடிக்கத் தொடங்கியிருக்கும் அவர் கடைசியாக ‘சீமராஜா’ படத்தில் நடித்திருந்தார். தற்போது ஹாலிவுட்டில் இந்திய வம்சாவளித் தயாரிப்பாளர்கள் தயாரித்திருக்கும் ‘டெவில்ஸ் நைட்’, ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ ஆகிய இரு ஆங்கிலப் படங்களில் நடித்திருக்கிறார்.

அவற்றில் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ படத்தை ஆங்கிலத்திலும் தமிழில் மொழிமாற்றம் செய்தும் தமிழ்நாட்டில் வெளியிடுகிறார்கள். ஏஜெண்ட் குமார் என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் சி.ஐ.டியாக நடித்திருக்கிறாராம். இதைத் தெரிவிக்க சென்னை வந்திருந்த நெப்போலியன், தனது குடும்பத்தின் வேண்டுதலுக்காக அமெரிக்காவில் அம்மன் கோவில் ஒன்று கட்டியிருப்பதாகத் தெரிவித்தார்.

காமெடி போலீஸ்

மீண்டும் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் ஜோதிகா, பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில் சர்ச்சைக்குரிய பெண் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது கல்யாண் இயக்கத்தில் ‘ஜாக்பாட்’ என்ற படத்தில் மீண்டும் காக்கிச் சீருடை அணிந்தாலும் இம்முறை காமெடி போலீசாக நடித்திருக்கிறாராம்.

ஜோதிகாவுடன் படம் முழுவதும் வரும் கதாபாத்திரம் ஒன்றுக்கு கோவை சரளாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குநர். ஜோதிகாவோ, ‘ரேவதி’ மேடம் சிறந்த நகைச்சுவை நடிப்பைத் தரக்கூடியவர். அதைப் பயன்படுத்திக்கொள்வோம் என்று பரிந்துரைத்திருக்கிறார். 40 நாட்களில் படத்தை முடித்து ‘யு’ சான்றிதழும் வாங்கிவிட்டார்கள்.

சுசீந்திரன் வெளியீடு

இயக்கினாலும் தயாரித்தாலும் நல்ல கதைகளை மட்டுமே நாடும் இயக்குநர்களில் ஒருவர் சுசீந்திரன். அறிமுக இயக்குநர் மகாசிவன் இயக்கத்தில் மாதவி தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘தோழர் வெங்கடேசன்’ படத்தைப் பார்த்த சுசீந்திரன், இதை வெளியிடுகிறார்.

“அரசுப் போக்குவரத்துத் துறையில் இருக்கும் அவலங்களைத் துணிந்து பேசியிருக்கும் இந்தப் படம் மக்களுக்கானது. புதுமுக நடிகர்கள் ஏற்கத் தயங்கும் கதாபாத்திரத்தை அறிமுக நாயகன் அரிசங்கர் ஏற்று நடித்திருக்கிறார்” என்று பாராட்டியும் இருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in