Last Updated : 05 Jul, 2019 11:00 AM

 

Published : 05 Jul 2019 11:00 AM
Last Updated : 05 Jul 2019 11:00 AM

ஹாலிவுட் ஜன்னல்: அறுபதுகளின் ஹாலிவுட்!

ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் க்வான்டின் டொரான்டினோவின் ஒன்பதாம் திரைப்படம் ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்’.  லியனார்டோ டிகாப்ரியோ, பிராட் பிட் இணைந்து நடித்திருக்கும் இந்தப் படம், உலகையே குலுக்கிய அமெரிக்காவின் ‘மான்சன் குடும்பத்தினர்’ கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

1969-ம் ஆண்டு ஒரு நள்ளிரவில் ஹாலிவுட்டின் பிரபல நடிகையும் இயக்குநர் ரோமன் பொலன்ஸ்கியின் மனைவியுமான ஷாரோன் டேட், வயிற்றிலிருந்த எட்டு மாத சிசு, வீட்டில் உடனிருந்த நால்வருடன் பரிதாபமாகக் கொலையானார்.

இது போன்று பலர் கொலையாவது தொடர, போலீஸ் விசாரணையின் இறுதியாக சார்லஸ் மான்சன் என்ற கொடூர சாமியாரும் அவருடைய சிஷ்யர்களும் கைதானார்கள். இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து டொரான்டினோ ஒரு நாவல் எழுதினார். ஐந்தாண்டு உழைப்பில் அதனை பல்வேறு கிளைக்கதைகளுடன் கூடிய திரைக்கதையாக உருவாக்கியே ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்’ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

தொலைக்காட்சியில் நடித்தபடி ஹாலிவுட் வாய்ப்புகளுக்காகப் போராடும் சாமானிய நடிகராக டிகாப்ரியோ தோன்றுகிறார். இவருடைய நண்பராகவும் திரைப்படச் சண்டைக் கலைஞராகவும் பிராட் பிட் வருகிறார். டிகாப்ரியோவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரபல நடிகை ஒரு நாள் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்.

அதே பாணியிலான கொலைகள் தொடர்வதும், கொலையாளிகள் அடையாளம் காணப்படுவதும் கொலைக் கும்பலுக்கு எதிரான போராட்டத்தில் இணைபிரியா நண்பர்களில் ஒருவர் உயிரிழப்பதுமாகத் திரைக்கதை செல்கிறது.

நடிகை ஷாரோன் டேட் வேடத்தில் மார்கோ ராபி நடித்துள்ளார். டிகாப்ரியோ, பிராட் பிட், அல் பசினோ என ஆஸ்கர் விருது நாயகர்கள் இப்படத்தில் இணைந்திருக்கிறார்கள். 60-களின் ஹாலிவுட் திரையுலகம், சமகாலத்தின் அமெரிக்கக் கலாச்சாரம் எனச் சவாலான பின்னணியில், இசை, பாடல், நகைச்சுவை எனப் பல்வேறு சுவாரசியங்கள் திரைப்படத்தில் உள்ளன.

இந்த ஆண்டின் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் ஒன்றாக ரசிகர்களால் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்’, வரும் ஜூலை 26 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

திரைப்படத்தின் முன்னோட்டத்தைக் காண:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x