

சத்யன் அந்திக்காடின் இயக்கத்தில் ‘மனசின் அக்கறே’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா மிக அபூர்வமாகவே தாய்மொழிப் படங்களில் நடித்துவந்தவர். கடைசியாக மம்மூட்டியுடன் இணைந்து ‘புதிய நியமம்’ படத்தில் நடித்தது 3 ஆண்டுகளுக்குமுன்.
தற்போது நிவின் பாலியுடன் இவர் ஜோடி சேர்ந்திருக்கும் ‘லவ் ஆக்ஷன் டிராமா’ படத்தின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்கள், திரையுலகினர் இடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நடிகர், இயக்குநர் சீனிவாசனின் இரண்டாவது மகன் தயான் இயக்குநராக அறிமுகமாகவுள்ள படம் இது. ஏற்கெனவே இவரது அண்ணன் வினித் முன்னணி இயக்குநராக இருக்கிறார். நடிகராகவும் வெற்றி பெற்றிருக்கிறார்
‘லவ் ஆக்ஷன் டிராமா' படத்தில் ஷோபா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நயன்தாரா. நிவின்பாலி தினேசஷன் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். நயன்தாரா, நிவின்பாலி தவிர துர்கா கிருஷ்ணா, அஜு வர்கீஸ், பாஸில் ஜோசப், ஸ்ரீனிவாசன், மல்லிகா சுகுமாரன் உள்ளிட்ட பலர் இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். காதல் பட ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் இந்தப் படம் வரும் ஓணம் பண்டிகையை ஒட்டி வெளியாக இருக்கிறது.