

இ
ந்தித் திரைப்பட உலகில், பாடலாசிரியர்களின் எண்ணிக்கை வியப்புதருபவை. திரைப்படம் பேசத் தொடங்கியது முதல் இன்றுவரை எழுதப்பட்ட பல்லாயிரக்கணக்கான இந்திப் படப் பாடல்களை எழுதியவர்கள் நூற்றுக்கணக்கான பாடல் ஆசிரியர்கள். அவர்களைப் பட்டியலிட்டு, அவர்களின் மிகச் சிறந்த சில பாடல்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த நினைத்தால் அதற்குப் பல வருடங்கள் பிடிக்கும். இந்திப் படவுலகின் தலைசிறந்த பாடலாசிரியர்களில் இதுவரை ராஜேந்திர கிஷன், ராஜா மெஹதி அலிகான், ஆனந்த் பக்ஷி ஆகிய மூன்று கவிஞர்களின் கவித்திறனை மட்டுமே நாம் கண்டிருக்கிறோம்.
எதிர் வரும் காலங்களில், சாகிர் லுத்வானி, சாகிர் பதாயினி, மஜ்ரூர் சுல்தான்பூரி, ஹஸ்ரத் ஜெய்பூரி, இந்திவர், அஞ்சான் ஆகிய ஆறு கவிஞர்கள் எழுதிய காலத்தால் அழியாத சில கவிதைப் பாடல்களை நாம் பார்க்கலாம். அதற்கு முத்தாய்ப்பாக இந்தக் கவிஞர்களின் சிறந்த பாடல்களிலிருந்து தலா ஒன்றை ‘ஜலக்’ என்று இந்தியில் அழைக்கப்படும் ‘மாதிரி’யாகப் பார்ப்போம். இந்த வரிசையில் சாகிர் லுத்வானியின் ‘ஹம்ராஜ்’படப் பாடல் முதலில் உங்களுக்குப் படையல். ‘மக்கள் கவிஞர்’என்று போற்றப்பட்ட சாகிர் பாடல்கள் இயற்கை உணர்வை வெகு இயல்பாக உணரச் செய்பவை. சிறந்த இசை அமைப்புக்காக, குடியரசு தின விழாவில் தங்கப்பதக்க விருது பெற்ற ‘ஹம்ராஜ்’ படத்தின் இசை அமைப்பாளர் ரவி எனப் புகழ்பெற்ற ரவிஷர்மா. இப்படத்தில். மகேந்திர கபூர் பாடியுள்ள ‘தும் அகர் சாத் தேனே கி வாதா கரோ, மே யூஹி மஸ்த் நக்மே லுட்டாத்தே ரஹூம்’ என்று தொடங்கும் பாடலின் பொருள்.
என்னுடன் நீ இணைந்து நிற்பது நிச்சயம் என்றால்
கண்ணே இது போன்ற கவிதைகள் கட்டற்று ஓடும்
என்னைப் பார்த்து நீ சிரித்துக்கொண்டே இரு
உன்னைப் பார்த்து நான் பாடிக்கொண்டே இருப்பேன்
எத்தனை அழகு இங்குக் கொட்டி கிடக்கிறது பார்
ஆனால், இதுவரை அவை ஒன்றைக் கூட
நான் ஏறெடுத்தும் பார்க்கவில்லை
உன்னைப் பார்த்த என் விழிகள் இப்படிச் சொல்லும்
நாங்கள் இம்முகம் விட்டு அகல விரும்பவில்லை
நீ என் விழிகளின் அருகில் இருந்தால் போதும்
நான் விரும்பும் யாவும் என் பார்வையில் தெரியும்
நான் வெகு காலம் என் கனவில் செதுக்கியிருந்த
பளிங்குச் சிற்பம் போன்றே இருக்கும் ஓவியம் நீ
உனது காதலனாக நான் இருப்பது உன் விதி என்று
ஒரு கணமும் நீ எண்ணாதே
நீ எனக்குக் காதலியாய் இருப்பது என் பிறவிப்பயன்
என எப்பொழுதும் நான் நினைக்கிறேன்
என்னுடன் நீ இணைந்து நிற்பது நிச்சயம் என்றால்
கண்ணே இது போன்ற கவிதைகள் கட்டற்று ஓடும்.
‘ஹம்ராஜ்’ படத்தின் கதாநாயகன் சுனில் தத் தனது கம்பீரமான உடல் மொழிக்கேற்ற இனிமையான குரல் வளம் கொண்டவர் மகேந்திர கபூர். தனது அளவு கடந்த காதலை
யாசக உணர்வில் வெளிப்படுத்தும் அரிய பாடல்களில் ஒன்றான இதன் பின்னணி சுவையானது. பாடல் ஆசிரியர் சாகிர் இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், பெண் கவிஞர் அமிர்தா, திரை இசை பாடகி சுதா மல்ஹோத்ரா ஆகியோர் அவரது வாழ்வில் காதலிகளாக வலம் வந்தனர். அவர்கள் மேல் காதல் வயப்பட்டு சாகிர் பாடிய பல காதல் கீதங்களில் இதுவும் ஒன்று.