சம்பளத்தைத் திரும்பக் கேட்டார்கள்! - விஷ்ணு விஷால் பேட்டி
‘மா
வீரன் கிட்டு’ படத்தைத் தொடர்ந்து நகைச்சுவை, குணச்சித்திர நடிகர் முருகானந்தம் இயக்கத்தில் ‘கதாநாயகன்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஷ்ணு விஷால்.
"வட்டாச்சியர் அலுவலகத்தில் நான் வருவாய் ஆய்வாளர். சூரியும் அங்கே பணிபுரிவார். சிறுவயதுமுதல் நண்பர்கள். படத்தில் சூரிக்குப் பிரச்சினை கொடுத்துக்கொண்டே இருப்பேன். பக்கத்து வீட்டுப் பெண் கேத்ரீனைக் காதலிப்பேன். ஆனால் அவருடைய அப்பா என்னை வேண்டாம் என்று சொல்லிவிடுவார். இதற்கிடையில் எனக்கு சி.ஜே.டி. என்ற நோய் வேறு. எல்லாப் பிரச்சினைகளையும் தாண்டி எப்படி ஜெயிக்கிறேன் என்பதுதான் 'கதாநாயகன்' படம்” என்று மொத்தக் கதையையும் தயக்கமில்லாமல் சொல்லிச் சிரித்தபடி பேசத் தொடங்கினார் விஷ்ணு விஷால்.
நடிகர் என்பதைத் தாண்டி ஒரு தயாரிப்பாளராக வெறும் நகைச்சுவைப் படங்களை மட்டுமே தயாரிக்கிறீர்களே என்ன காரணம்?
என்னிடத்தில் பணம் குறைவுதான். ஒரு படத்துக்காகப் போட்ட பணம், திரும்ப வந்தால் மட்டுமே அடுத்த படம் எடுக்க முடியும். மக்களை எப்படியாவது சிரிக்க வைத்துவிட முடியும் என்பதுதான் என் எண்ணம். நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய சூழல் அனைவரது வாழ்க்கையிலும் வரும். அப்படித்தான் என் வாழ்க்கையில் தயாரிப்பாளராக மாறினேன். திரையுலகில் பல கதாநாயகர்களுக்குத் தனியாகத் தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கின்றன. ஒரு படத்தில் நடித்துவிட்டு, அப்படம் தோல்வியடைந்ததும் என்னைத் திட்டி ‘வாங்கிய சம்பளத்தைத் திரும்பக் கொடுங்கள்’ என்கிறார்கள். இதனால் நானே படம் தயாரிக்கத் தொடங்கிவிட்டேன்.
'மாவீரன் கிட்டு' போதிய வரவேற்பைப் பெறவில்லை என்ற வருத்தமிருக்கிறதா?
அதிகமாக இருக்கிறது. 'ஜீவா' படம் வெளியானபோது, முதலமைச்சர் சிறைக்குச் சென்றதால் திரையரங்குகள் மூடப்பட்டன. 2-வது வாரம் எந்தவொரு திரையரங்கிலும் அப்படமில்லை. 'மாவீரன் கிட்டு' படம் வெளியானபோது முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார். அதைத் தொடர்ந்து புயல். இப்படியிருக்கும்போது அந்தப் படம் எப்படி வசூலிக்கும். இதற்கு யாரைக் குறை சொல்வதென்றே தெரியவில்லை.
அனைத்து விமர்சனங்களையும் படித்துவிடுவேன். ஏனென்றால் ஒவ்வொன்றிலிருந்தும் ஏதாவது ஒரு விஷயம் கிடைக்கும். அதை அடுத்த படத்தில் திருத்திக்கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம். “சிரிங்க.. சிரிக்கவைக்கவில்லை என்றால் என்ன வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள்” என்று ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினேன். அதுதான் நடந்தது. அப்படம் கொடுத்த நம்பிக்கையில்தான், அடுத்து ஜாலியாக இந்தப் படம் நடித்திருக்கிறேன். இயக்குநர் முருகானந்தம் கூறிய மற்றொரு கதையிலும் எக்கச்சக்க நகைச்சுவை இருப்பதால், அந்தக் கதையில் அவரது இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறேன். நான் நடித்த எந்தவொரு படத்தையுமே தவறு என யாருமே கூற முடியாது. படம் ஹிட்டாக வேண்டும் என்பது என் கையில் இல்லை, ஆனால், தவறான படத்தில் நடிக்காமல் இருப்பது என் கையில்தான் இருக்கிறது.
மகன் பிறந்த பிறகு வாழ்க்கை எப்படி மாறியுள்ளது?
மகன் பிறந்து ஆறு மாதங்களாகின்றன. எட்டு மாதங்களில் மூன்று படங்களில் நடித்து முடித்திருப்பதால் மகனோடு நிறைய நேரம் செலவழிக்க முடியவில்லை. மகனுடன் கொஞ்சி விளையாட வேண்டும் என்பதற்காகவே பத்து நாட்கள் சிங்கப்பூர் சென்றோம். அந்த டூரில்தான் நமக்கு மகன் பிறந்துவிட்டான், வயதாகிவிட்டது என உணர்ந்தேன். என்றாலும் குழந்தையோடு தொடர்ச்சியாக விளையாடும் அளவுக்குப் பொறுமையில்லை. நண்பர்கள் அனைவருமே உன் மகன் பேசத் தொடங்கியவுடன் பார், உன் வாழ்க்கையே வேறொரு கலரில் மாறும் என்றார்கள். அதற்காகத்தான் காத்திருக்கிறேன்.
உங்கள் நெருங்கிய நண்பர்களான விஷால் - ஆர்யா ஆகிய இருவரது திருமணமும் எப்போது?
திருமணமெல்லாம் நடக்குமா என்று தெரியாது. எனக்குத் தெரிந்தவரையில் இரண்டு பேருமே திருமணம் செய்ய மாட்டார்கள் என நினைக்கிறேன். அவர்களைத் திருமணத்துக்குச் சம்மதிக்கவைப்பது கடினம். திருமணம் என்பது நமது வாழ்க்கையை முழுமையாக மாற்றும் ஒரு விஷயம். அதை இருவருமே உணர்ந்துவிட்டார்கள். ஆகையால் கொஞ்சம் நேரமெடுத்துச் செய்துகொள்வார்கள் என நினைக்கிறேன்.
