

முன்னணிக் கதாநாயகி த்ரிஷாவுக்கும், பிரபலத் தொழிலதிபரும், திரைப்படத் தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக வெளியான தகவலால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு நிலவிவருகிறது.
‘சாமி’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘ஆறு’, ‘மன்மதன் அம்பு’ உட்பட ஏராளமான படங்களில் நாயகியாக நடித்துள்ள த்ரிஷா தற்போது அஜித்துடன் கௌதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்து வருகிறார். த்ரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் காதலித்து வந்ததாகச் சில மாதங்களுக்கு முன் கூறப்பட்டது.
இந்நிலையில், வருண் மணியனுடனான திருமணச் செய்தி அடுக்கடுக்கான ஜோடிப் புகைப்படங்களுடன் வெளியானதில் த்ரிஷாவுக்குப் பெரும் சங்கடமாகி விட்டதாகத் தெரியவருகிறது. சமீபத்தில் வெளியான ‘வாயை மூடி பேசவும்’, இயக்குநர் வசந்தபாலனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘காவியத் தலைவன்’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர்தான் இந்த வருண் மணியன். திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக ட்விட்டர் வலைதளத்தில் புகைப்படங்களைக் கசியவிட்டவர்கள் இரு தரப்பின் நட்புவட்டமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
இதுகுறித்த உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள த்ரிஷாவின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவது உண்மைதான். அதை அவர்களே அறிவிப்பார்கள்” என்றனர்.
ஒப்புக்கொள்ளாத த்ரிஷா
ஆனால் தனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என்றும், அப்படி நடக்கும்போது அந்தத் தகவலை நானே முதலில் வெளியிடுவேன் என்றும் ட்விட்டரில் த்ரிஷா தெரிவித்துள்ளார். அதேவேளையில், வருண் மணியன் உடனான திருமணப் பேச்சு குறித்து எந்த விளக்கத்தையும் அவர் அளிக்கவில்லை. ஆனால் வருண் மணியனுடன் இருக்கும் புகைப்படங்கள் அவரது பேச்சுக்கு நேர்மாறாக இருப்பதையே சுட்டிக்காட்டுவதாகச் சமூக வலைதளங்களில் விவாதம் கிளம்பியது. இந்த விவகாரத்தில் உண்மையை ஒளிக்காமல் சொல்லக்கூடியவர் த்ரிஷாவின் தாயார் மட்டுமே என்பதால் த்ரிஷாவின் அம்மா உமாவைத் தொடர்புகொண்டு கேட்டோம். “நிச்சயதார்த்தச் செய்தியில் உண்மையில்லை. த்ரிஷாவின் வாழ்க்கையில் ஏதாவது நடைபெற்றால் கண்டிப்பாக சொல்கிறேன்” என்று மட்டும் தெரிவித்தார்.
மார்ச்சில் திருமணம்
ஆனால் த்ரிஷா மற்றும் வருண்மணியன் இருவருக்கும் நெருக்கமான திரையுலகினருடன் பேசியபோது, “நவம்பர் 16-ம் தேதி மாலை த்ரிஷாவின் செனடாப் சாலையில் உள்ள வீட்டில் வைத்து திருமணப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரு குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டார்கள். எங்களுக்குக்கூட அழைப்பில்லை. ஜனவரிக்குள் நடித்து வரும் படங்கள் அனைத்தையும் முடித்துக்கொடுத்துவிட்டு, த்ரிஷா நிச்சயதார்த்தம் செய்து கொள்ள இருக்கிறார். ஆனால், இரு வீட்டார் பேச்சுவார்த்தையின் போது இருவருமே மோதிரம் மாற்றிக்கொண்டது உண்மைதான். த்ரிஷா கையில் இருக்கும் மோதிரம், வருண் மணியன் பரிசளித்ததுதான். 2015 மார்ச்சில் இருவரும் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டு இருக்கிறார்கள். தொடர்ச்சியாகத் தற்போது படங்கள் நடித்து வருவதால் மட்டுமே இந்தப் பூர்வாங்க திருமண நிச்சய நிகழ்வை ஒப்புக்கொள்ளத் தயங்குகிறார். மற்றபடி ஒன்றும் பிரச்சினையில்லை” என்றார்கள்.