

எம்.கேசவன், சென்னை-20.
‘கஸ்மாலம்’ என்பதற்கு ‘கிரேசி டிக்ஸ்னரி’ என்ன அர்த்தம் சொல்கிறது?
உங்களை யாராவது ‘கஸ்மாலம்’ என்றால் அவரை கட்டித் தழுவுங்கள். நல்ல வார்த்தைகளைக் கெட்ட வார்த் தைகளாக உபயோகிப்பது இப்போது நாகரிகமாகிவிட்டது. எதுவுமே தெரியாதவனைக் கேலியாக ‘எல்லாம் தெரிஞ்ச’ தேவகுரு ‘பிரஹஸ்பதியின்’ பெயரால்… அவன் சுத்த ‘பிரஹஸ்பதி’ என்பார்கள். அதே போல் அகராதி படிச்சவன் என்பதுதான் ‘அகராதி புடிச்சவன்’ என்று மாறிவிட்டது.
வாமன அவதாரத்தில் சப்த ரிஷிகளில் ஒருவரான கஸ்யப மகரிஷிக்கு மாலவன் மகனாகப் பிறந்தார். ஆக, கஸ் + மால் + ஓம்(AUM) = கஸ்மாலம் என்றானது. இதில் ‘கஸ்’ என்பது தந்தையின் இனிஷியல். ‘ஓம்’ என்பது தெய்வத்தின் இனிஷியல். ‘மால்’ மகனாகப் பிறந்த திருமால்! இது எனக்கே எனக்கு உதித்த அர்த்தம்.
ஆர்.ஜெயந்தி, மதுரை.
அது என்ன ‘தாவு தீந்துடுச்சு’?
இளமையில் தாவிக் குதித்துத் துள்ளினோம். முதுமையில் அந்தத் ‘தாவு’ தீர்ந்து போய் முடங்கிவிட்டோம். உங்கள் கேள்விக்கு விடை கண்டு பிடிப்பதற்குள் எனக்குத் ‘தாவு’ தீந்துடுச்சு சார்!
லெ.ரகுநாதன், சென்னை-17.
சினிமா, டிராமாக்கள் எழுதும் நீங்கள் ‘கே.பி.டி சிரிப்பு ராஜன்’, ‘அமெரிக்காவில் கிச்சா’ போல பத்திரிகைகளில் தொடர் எழுதலாமே?
அடியேன் பிறந்து, படித்து, வளர்ந்தது எல்லாமே மைலாப்பூரில்தான். மாம்பலம் போனால்கூட ‘ஹோம் சிக்’ வரும் அளவுக்கு அடியேன் மைலாப்பூர்வாசி. கபாலி குளத்து மீன் நான். வெளியே போனால் நான் ‘Fish out of Water.’
எனது அனுபவங்களை ‘மை-Loveவாப்பூர் - டைம்ஸ்’ என்று ‘தி இந்து’ தமிழில் ‘Column’ எழுத ஆசை. ஸ்ரீரங்கத்துத் தேவதை’ எழுதிய சுஜாதாவின் வியாபகமும், ‘இரட்டைத் தெரு’ எழுதிய இரா.முருகனின் நியாபகமும் பெறக் காத்திருக்கிறேன். வந்தால் ‘Column’ காலத்தின் கட்டாயமாகும்!
கே.ரமேஷ், சின்ன சேலம்.
சரியா சொல்லுங்கோ…. ‘மெட்ராஸ் ஐ’ பெயர் காரணம்?
செந்தாமரையில் வீற்ற மகாலட்சுமியை ‘செந்திரு’ என்கிறோம். நெல்லுக்கு இன்னொரு சிறப்புப் பெயர் ‘செந்நெல்’. அதுபோல சிவந்த கண்ணுக்கு ‘செந்-ஐ’. மெட்ராஸ் சென்னை ஆனது போல செந்-ஐ மெட் ராஸ் ஐ என்றாகிவிட்டது. எப்பூடி?
மு.ராஜ மாணிக்கம், விருதுநகர்.
‘வேலண்டைன் டே’க்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?
என்ன அப்படி கேட்டுட்டீங்க? அது ‘வேலண்டைன் டே’ இல்லை. வள்ளி -தெய்வானை மணவாளர் வேலன் டைம் டே!
‘வானகத்து தேவானை வாய்த்தும் விருத்தனாய்
மான்நிகர்த்த வள்ளி மடமயிலை - கானகத்தில்
வேலன்டைம் பாஸாய்; வெகுவாக நேசிக்க
VELANTINE DAYயாச்சு வே’.
மா.முருகவேல், சென்னை-24.
வாழ்க்கையைப் பற்றி உங்கள் அபிப்ராயம்?
Take thinks Easy... Life is Crazy. வேகமாகச் செல்லும் காரும் நிதானமாகச் செல்லும் சைக்கிளும் சிக்னலில் சமமாக காத்திருப்பார்கள். வாழ்க்கையில் வெற்றியை நோக்கி வேகமாகச் செல்லும் முயலும், அடிப் பிரதட்சணம் செய்யும் ஆமையும் வயதாகி வழுக்கையாம் சிக்னலில் ஒன்றாகக் காத்திருப்பார்கள். பள்ளி வாத்தியார் பாடம் சொல்லித் தந்து பரீட்சை வைப்பார். வாழ்க்கை... பரீட்சை வைத்துவிட்டு பாடம் புகட்டும் வாத்தியார்!
ஹெச்.அகல்யா, கிருஷ்ணகிரி.
சென்ற வாரம் ‘ரத்தத்தின் ரத்தம்’ போல உங்கள் ‘குருவுக்கு குரு’ இயக்குநர் சிகரத்தைப் பற்றி ஒரு கேள்வி கேட்டிருந்தேன். பதில் எழுத மறந்துவிட்டீர்களே?
‘எதிர் நீச்சல்’ சினிமாவில்… திருட்டுக் குற்றம் சாற்றப்படும்போது மாது (நாகேஷ்) வெகுளியாகச் சொல்வார்: ‘நாயர் (முத்துராமன்) வாட்சை மறந்துட்டீங்களே…’ என்று. அது போல கே.பாலசந்தரை மறந்த அடியேன், அவருடைய மோதிரக் கைகளால் என் தலையில் குட்டிக் கொண்டு இதோ எழுதுகிறேன்:
இரண்டே நாடகங்கள் எழுதிவிட்டு, எழுத்தைப் பொறுத்தமட்டில் குழந்தையாக இருந்த என்னை ‘மழலைப் பட்டாளங்கள்’ படத்துக்கு வசனம் எழுத வைத்து, அறிமுகப்படுத்த முடிவுசெய்து, கனவுத் தொழிற்சாலையின் மெயின் -கேட்டை திறந்துவிட்டவர் இயக்குநர் சிகரம்.
மெயின் கேட்டில் நுழைந்த நான், அனுபவமின்மை காரணமாக ஏனோ மிரண்டுபோய் ‘விக்கெட் கேட்’ வழியாக வெளியேறி, வந்த நல்ல வாய்ப்பை நழுவவிட்டேன். அதன் பிறகு 5 ஆண்டுகள் கே.பாலசந்தர் படங்களைப் பார்ப்பது மட்டுமே எனது ஒரே சினிமா சம்பந்தமான நடவடிக்கையாக இருந்தது. ஏனோ சினிமா எனும் அந்தக் கனவுத் தொழிற்சாலையில் ஆள் எடுப்பதாக எந்த விளம்பரமும் வரவே இல்லை. எனக்கு சினிமா பிள்ளையார்ச் சுழியை பாலசந்தர்தான் போடவேண்டும் என்பது பகவான் சித்தம் போலும்.
எனது ‘மேரேஜ் மேட் இன் சலூன்’ நாடகத்தை… பெரிய திரைக்கேற்றாற் போல் அவர் திரைக்கதை அமைத்து ‘பொய்க்கால் குதிரை’ என்கிற பெயரில் டைரக்ஷன் செய்தபோது, அந்தப் படத்துக்கு வசனம் எழுத எனக்கு வாய்ப்பளித்தார். அடியேன் ஒரு சிறு தீவு. ஆனால் கமல், ரஜனி போன்ற ‘அமெரிக்கா’க்களைக் கண்டுபிடித்த அதே கொலம்பஸ்தான் என்னையும் கண்டுபிடித்தார் என்பதில் எனக்கு ஏக திருப்தி.
அவருடைய ‘எதிர் நீச்சல்’ மாதுவால் (நாகேஷ்) கவரப்பட்டுத்தான் எனது நாடக நாயகனுக்கு மாது (பாலாஜி) என்று நாமகரணம் சூட்டினேன். எப்படியாவது எதிர் நீச்சல் போட்டு எனது மாதுவை (பாலாஜியை) ‘எதிர் நீச்சல்’ மாதுவாக்கும் (நாகேஷாக்கும்) வரை நான் நாடகம் போடுவதில் ஓயவே மாட்டேன்.
கே.பி. வெண்பா
‘ABC சினிமாக்(கு), எழுதிய ஆசானே
KBSir கலையுலகைக் காப்பாற்ற - YouBeSir,
தாதாசா கீபே, தமிழ்சினிமா தெய்வமுமாய்
மாதா பிதகுருவு மாய்’
ஆர்.சி.சீமா, கோயம்புத்தூர்.
பற்கள் எல்லோருக்கும் ஏன் 32தான் உள்ளது?
எல்லோருக்கும் பல் இளமையில் முப்பத்திரெண்டு. மூப்பதில் ரெண்டே ரெண்டுதான்!
கெர்வின், சென்னை-5.
பத்து தலை ராவணனுக்கு தலைவலி வந்தால் மாத்திரை சாப்பிடுவானா? தைலம் தடவிப்பானா?
பாட்டி வைத்தியப்படி தலைக்கு ‘பத்து’ போட்டுப்பான்!
பாமா கோபாலன், மயிலாடுதுறை
எனக்கு ‘மறதி’ ரொம்ப ஜாஸ்தியாக உள்ளது. என்ன பண்ணலாம் கிரேசி?
ஒண்ணும் பண்ணாதீங்க... ‘மறதி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’!
வா.கார்த்தி, திருநின்றவூர்.
பிள்ளையாருக்கு முதல் கடவுள் என்றும், முருகனுக்கு குமரக் கடவுள் என்றும் பட்டப் பெயர்கள் உள்ளன. கம்ப்யூட்டர் பாஷையில் நீங்கள் என்ன பட்டம் தருவீர்கள்?
பிள்ளையார்: Mouseக வாகனன். முருகன்: Mailவாகனன்.
- இன்னும் கேட்கலாம்..