

அங்கமாலி டைரீஸ்’ இயக்குநர் அடுத்து?
மலையாளத்தின் முன்னணி இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி ‘அங்கமாலி டைரீஸ்’ வெற்றிக்குப் பிறகு அடுத்த படத்தை அறிவித்துள்ளார். ‘ஈசோ மரியம் யுசேப்பூ (ஈ.ம.யு)’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ‘மகேஷிண்ட பிரதிகாரம்’, ‘தொண்டிமுதலும் திருக்சாட்சியும்’ ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குநர் திலீஷ் போத்தன் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். போத்தனுடன் செம்பன் வினோத், விநாயகன் ஆகியோரும் நடிக்கவுள்ளனர். கொச்சிக்கு அருகிலுள்ள மீனவக் கிராமத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த வருடம் டிசம்பரில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக் குழு.
பாலிவுட்டில் பாலி
மலையாளத்தின் இளம் சூப்பர் ஸ்டார்களுள் ஒருவரான நிவின் பாலி இந்தியில் அறிமுகமாகிறார். ‘என் பொம்முகுட்டி அம்மாவுக்கு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாகத் தமிழில் அறிமுகமாகி கமல் ஹாசனின் ‘நளதமயந்தி’யில் நாயகியான கீதுமோகன் தாஸ்தான் ‘மூத்தோன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் இயக்குநர். படத்தின் திரைக்கதை பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப். கீதுவின் கணவரும் இந்தியின் பிரபல ஒளிப்பதிவு இயக்குநருமான ராஜீவ் ரவி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். மும்பையில் இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறுகிறது.
ஆதிவாசி லால்
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் புதிய படமான ‘ஒடியன்’ படப்படிப்பு இந்த மாத இறுதியில் வாரணாசியில் தொடங்கப்படவுள்ளது. ஸ்ரீகுமார் இயக்கும் இந்தப் படத்தில் மோகன்லால் ஒடியன் என்னும் பழங்குடியினத்தவராகப் புதிய தோற்றத்தில் நடிக்கவுள்ளார். 30 வயதிலிருந்து 65 வயதுவரையிலான தோற்றத்துக்கான சிறப்பான மேக்-அப் படத்தில் உபயோகிக்கப்படவுள்ளது. இந்தப் படத்தில் மோகன்லால் மலையாளத்தின் சூப்பர் ஸ்டார் நடிகையான மஞ்சு வாரியாருடன் ஜோடி சேர்கிறார். பிரகாஷ் ராஜும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். ‘புலிமுருகன்’ படத்தைப் போல இதிலும் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பீட்டர் ஹெய்ன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வாரணாசி மட்டுமல்லாது ஹைதராபாத், பாலக்காடு பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தொகுப்பு: விபின்