

விவசாயி தற்கொலை, வயலில் மயங்கி விழுந்து அதிர்ச்சி சாவு போன்ற பத்திரிகைச் செய்திகளைக் கடந்துகொண்டே இருக்கிறோம். செய்திகளின் வருத்தத்தை இன்னும் அதிகமாக்கி, கண்கலங்கச் செய்திருப்பதுடன் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்களின் கோபத்தையும் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறது ‘கொலை விளையும் நிலம்’ ஆவணப்படம்.
கடன்சுமையால் இறந்துபோன விவசாயிகளில் ஆதிச்சபுரம் அழகேசன், நீர்முளை ஜெகதாம்பாள், கீழப்பூந்துருந்தி ராஜேஷ், நுனாக்காடு கோவிந்தராஜ், பிரிஞ்சிமூலை முருகையன், நுனாக்காடு கோவிந்தராஜ், திருக்கண்ணபுரம் கண்ணன் ஆகியோரின் குடும்பத்தினரை நேரில் கண்டு பதிவுசெய்திருக்கிறது இந்த ஆவணப்படம். மரணமடைந்தவர்களின் குடும்பத்தினர் இழப்பின் வலியோடு எதிர்காலத்தைப் பற்றிய அவநம்பிக்கையையும் சுமந்துகொண்டிருக்கிறார்கள். அரசு அறிவித்த நிவாரணத்தைப் பெறுவதற்குத் தினம் ஒரு சான்றிதழ் கேட்டு அலையவிடப்படுகிறார்கள்.
அந்த நிவாரணமும் அவர்களது கடன்சுமையை வேண்டுமானால் குறைக்குமே ஒழிய அவர்களது வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. கணவனை இழந்து வாடும் பெண்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைக் குறித்த அச்சத்தில் இருக்கிறார்கள். வாழ்வளித்த பூமியைக் கைவிட்டு கேரளாவுக்கும் திருப்பூருக்கும் பஞ்சம் பிழைக்கப் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆட்கள் மாறலாம். இடங்கள் மாறலாம். ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரது நிலையும் இதுதான். ஏழெட்டு விவசாயிகளின் மரணங்களைப் பதிவுசெய்துள்ள இந்தப் படத்தின் வழியாகத் தஞ்சை விவசாயிகளின் தற்போதைய ஒட்டுமொத்த அவல நிலையும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆவணப்படத்தில் கருத்துரைக்கும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த வெ.ஜீவகுமார், “தற்கொலையால் அல்லது அதிர்ச்சி மரணத்தால் இறந்துபோன விவசாயிகளின் எண்ணிக்கை 250க்கும் மேல் இருக்கும். ஆனால் மாநில அரசு அவர்களின் எண்ணிக்கையை 82 என்று காட்டுகிறது. வறட்சியாலோ கடன்சுமையாலோ அல்ல, சொந்தக் காரணங்களாலேயே விவசாயிகள் இறக்கிறார்கள் என்று தனது பொறுப்பிலிருந்து நழுவப் பார்க்கிறது. காவிரி படுகையான ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் 6 கிளையாறுகளும் 25,000 வாய்க்கால்களும் இருக்கின்றன. இன்னும் குளங்கள், ஏரிகள் என நீர்நிலைகள் பல உண்டு. காவிரி நீரைப் பெற்றுத்தர முடியாத அரசாங்கம், நீர்நிலைகளைப் புனரமைக்கவும்கூடத் தயாராக இல்லை” என்கிறார்.
விவசாயிகள் தற்கொலைகளைப் பற்றிய நேரடி கள ஆய்வில் பங்கெடுத்துக்கொண்ட வெ.ஜீவகுமார், மரணமடைந்த விவசாயிகளின் பட்டியலை ‘அம்புப்படுக்கையில் விவசாயிகள்’ என்று ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், “நீராதாரங்கள் பராமரிப்பைக் கைவிட்டு, இந்தப் பகுதியில் வசிக்கும் விவசாயிகளை வெளியேற்றி, எண்ணெயும் எரிபொருளும் எடுக்க சதி நடப்பதாக” குற்றம்சாட்டுகிறார். விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்களின் கருத்துகள் இந்த ஐம்பது நிமிட ஆவணப்படத்துக்கு வலுச்சேர்த்திருக்கின்றன.
க.ராஜீவ்காந்தி இயக்கியுள்ள இந்தப் படத்துக்குப் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. ராஜூமுருகன் பாடல் எழுத ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். திரைக் கலைஞர்கள் ஆவணப்பட உருவாக்கத்தில் பங்கெடுத்திருப்பது நல்லதொரு முன்னுதாரணம். தொடர வேண்டும். ‘மாட்டைக் காப்பாத்தும் அய்யாவே, மனுசனை எப்ப காப்பீங்க?’ என்று கேள்வி கேட்டிருக்கிறது ராஜூ முருகனின் பாடல்.
வழக்கமான ஆவணப்படங்களைப் போன்றே பத்திரிகைச் செய்திகளும் காட்சிப் பதிவுகளும் இடம்பெற்றிருக்கின்றன. படத்தின் முடிவாக, தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்டு அய்யாக்கண்ணு பேசிய ஆவேச உரையின் பதிவு முத்தாய்ப்பு. மொத்தத்தில், விவசாயிகளின் இயலாமையும் ஏமாற்றமும் இணைந்து உள்ளக் குமுறல்களாக வெளிப்பட்டிருக்கின்றன.
எழுத்தாளரும் விவசாயியுமான சு.வேணுகோபால் ‘ஒரு துளி துயரம்’ என்ற தலைப்பில் சிறுகதையொன்று எழுதியிருப்பார். அந்தத் தலைப்பே இந்தப் படத்துக்கு மிகவும் பொருத்தம் எனத் தோன்றுகிறது. ஒரு துளி துயரத்தின் உவர்ப்பே நெஞ்சை நடுங்கவைக்கிறது. ஆட்சியாளர்களின் கல்நெஞ்சம் கரைய வேண்டும். இறந்துபோன ஒரு விவசாயி வீட்டின் சுவரில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டிருக்கிறது. ஆவணப்படங்கள் நேரடியாகச் சொல்வதைக் காட்டிலும் இப்படிச் சொல்லாமலே புரியவைக்கிற காட்சிகள் அதிகம்.
அதிகார நாற்காலிகளில் அமர்ந்திருப்பவர்களே, உங்களை நம்பித்தானே அவர்கள் வாக்களித்தார்கள், நீங்கள் செய்துகொண்டிருப்பது பச்சைத் துரோகம் என்பதை எப்போது உணரப் போகிறீர்கள் என்று அதட்டிக் கேட்கிறது இந்த ஆவணப்படம்.