கோலிவுட் கிச்சடி: ரசிகர்களே தெய்வம்!

கோலிவுட் கிச்சடி: ரசிகர்களே தெய்வம்!
Updated on
2 min read

‘அஞ்சலி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ‘அலிபாபா’ படத்தின் மூலம் நாயகனானவர் கிருஷ்ணா. ‘கழுகு’, ‘யாமிருக்க பயமேன்’ என ஏற்கெனவே இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்திருக்கும் கிருஷ்ணாவுக்குத் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘பண்டிகை’ படமும் கைகொடுத்துவிட்டதால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார் கிருஷ்ணா. “ என்னோட இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும்தான் நன்றி சொல்லணும். என்னோட அண்ணன் இயக்குநராவும் அப்பா தயாரிப்பாளராவும் இருந்ததாலதான் என்னால நல்ல கதைகளைத் தேர்வு செய்ய முடியுது.

எது சரியான திரைக்கதை மனசு முடிவு செய்ய இந்தக் குடும்பப் பின்னணி காரணமாக இருந்தாலும் என்னையெல்லாம் நடிகனா ஏத்துக்கிட்ட ரசிகர்கள்தான் என் தெய்வங்கள். அவங்க முகம் சுளிக்காத மாதிரி இனி என் படங்கள் இருக்கிறமாதிரி பார்த்துக்கணும்” என்று சொல்லும் கிருஷ்ணா நடிப்பில் ‘வீரா’, ‘விழித்திரு’, ‘கிரஹணம்’ ‘களறி’ ஆகிய படங்கள் வெளிவர இருக்கின்றன.

மெய்மறந்த இமான்!

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘வனமகன்’ முதலுக்கு மோசமில்லாமல் இன்னும் திரையரங்குகளில் தாக்குப்பிடித்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் அவர் நடித்துவரும் ‘டிக் டிக் டிக்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. தமிழ் சினிமாவின் முதல் முழுநீள விண்வெளி அறிவியல் புனைவு த்ரில்லர் படமாகத் தயாராகிவரும் இந்தப் படத்தின் சாகசக் காட்சிகள் அனைத்தையும் கிராஃபிக்ஸ் மூலம் உருவாக்குகிறார்கள்.

இதற்காகச் சென்னையில் உள்ளரங்கப் படப்பிடிப்பு நடத்திவருகிறார்கள். சக்தி சவுந்தர்ராஜன் இயக்கி வரும் இந்தப் படத்தில் ஜெயம்ரவி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துவருகிறார். படத்துக்கு இசையமைத்துவரும் இமான், “ டிக் டிக் டிக் படத்தின் டீஸரைப் பார்த்தபோது மெய்மறந்து வானத்தில் பறப்பதைப் போன்று உணர்ந்தேன்” எனத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

அக்கறை காட்டிய கௌதம்

ரசிகர்களின் இதயம் கவர்ந்த காதல் படங்களையும், தனித்துவம் மிக்க கதாநாயகிகளையும் கண்டால் குஷியாகிவிடும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற ‘பெல்லி சூப்லு’ என்ற காதல் திரைப்படத்தின் தமிழ் மறு ஆக்க உரிமையை கௌதம் கைப்பற்றி வைத்திருக்கிறாராம். அந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த ரிது வர்மாவையே அந்தப் படத்தின் மறு ஆக்கத்தில் நடிக்கக் கேட்டிருக்கிறார்.

கௌதம் படத்தில் கதாநாயகி ஆக கசக்குமா என்ன? ரிது ஓகே சொன்னாலும் பல காரணங்களால் ‘பெல்லி சூப்லு’ மறு ஆக்கம் தொடங்கப் படவில்லை. ஆனால், ஒப்பந்தம் செய்த கதாநாயகியைத் திருப்பி அனுப்ப மனமில்லை. அந்த அளவுக்கு ‘பெல்லி சூப்லு’ படத்தில் அற்புதமாக நடித்திருந்தாராம் ரிது வர்மா. எனவே, ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரமுக்கு ரிதுவை ஜோடியாக்கிவிட்டார் கௌதம் மேனன்.

கடவுளை நம்பும் நகுல்!

‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்புக்குப் பின் உஷாராகிவிட்டார் நகுல். கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைதிகாத்த அவர், தற்போது தேர்வு செய்து நடித்துவரும் படம் ‘பிரம்மா.காம்’. “இது கணினி யுகத்தின் திருவிளையாடல்’. கடவுளும் மனிதனும் சந்தித்துப்பேசும் ஐடியாவில் பல படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இப்படியொரு ரகளையான படம் வந்ததில்லை” என்கிறார் நகுல். இதில் நகுலுக்கு ஜோடியாக நடிப்பவர் ஆஸ்னா ஜவேரி.

மூன்றாம் முறையாக

விஜய்சேதுபதி நடிக்க ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர் எஸ்.யூ.அருண் குமார். இவர் இயக்கும் மூன்றாவது படத்திலும் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். ‘பாகுபலி-2’ படத்தை வாங்கி தமிழகத்தில் வெளியிட்ட கே.புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ ஆகிய படங்களையும் இதே நிறுவனம் வெளியிடவிருக்கிறது. திரைப்பட விநியோகத்தில் மட்டுமே கவனம் செலுத்திய நிறுவனம், விஜய்சேதுபதி படத்தின் மூலம் தயாரிப்பிலும் களம் இறங்குகிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in