‘கபாலி’ பேசத் தவறிய கதை!

‘கபாலி’ பேசத் தவறிய கதை!

Published on

லேசியத் தோட்டத் தொழிலாளியாக இருந்து, பின் நிழலுலகை ஆட்டிவைக்கும் தாதாவாக ரஜினி உருவெடுக்கும் மசாலா கதையாகச் சுருங்கிப்போனது ‘கபாலி’ திரைப்படம். அந்தப் படத்தில் பேச மறந்த மலேசியத் தோட்டத் தொழிலாளர்களின் இன்றையப் பிரச்சினையை ஆழமாகப் பேச வருகிறது ‘தோட்டம்’ என்ற திரைப்படம். மலேசியத் தமிழ் நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கூட்டணியில் உருவாக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் சீனு.ராமசாமி, நடிகர் ஆரி, பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சிங்கை ஜெகன் கதாநாயகனாகவும் தனா, மலேசிய சீன நடிகை விவியாஷான் ஆகிய இருவர் கதாநாயகிகளாகவும் நடித்திருக்கும் இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அரங்கண்ணல் ராஜ். படம் குறித்து அவர் பேசும்போது,

“பெரும்பாலான வளரும் நாடுகளின் பொருளாதார முன்னேற்றம் அந்த நாட்டின் விவசாய வருமானத்தைச் சார்ந்தே இருக்கிறது. மலேசியாவும் இந்தப் பட்டியலில் அடங்கும். இன்றைய நவீன மலேசியாவின் முன்னேற்றத்தில் விவசாயக் கூலித் தொழிலாளிகளாகப் பயன்படுத்தப்பட்டவர்கள் பெரும்பாலும் இந்தியர்களே! அதிலும் குறிப்பாகத் தமிழர்களின் உழைப்பால் உருவான தோட்டங்கள் பெரும் வணிகச் சந்தையாகிவிட்டன. ஆனால், பல தலைமுறைகளாக உழைத்துவரும் அந்தத் தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கை மட்டும், அதே நிலையில்தான் இருக்கிறது. தமிழர்களின் உழைப்பில் உருவான தோட்டங்களில் பல இன்று ஆதிக்க சக்திகளிடம் கைமாறி வருகின்றன. அப்படிக் கைமாற இருந்த ஒரு தோட்டத்தைத் தொழிலாளர்கள் எப்படிப் போராடி மீட்கிறார்கள் என்பதைப் பேசுகிறது இந்தத் தோட்டம். 200 வருடங்களாக நீடித்துவரும் இந்தப் பிரச்சினையைத் தமிழ் மக்களின் வாழ்வியலோடு அலசியிருக்கிறோம்” என்றார். ‘ப்ளூ ஐ புரொடக்‌ஷன்ஸ்’ என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்துக்கு சதீஷ் பி.சரண் ஒளிப்பதிவு செய்ய, சாய் இசை அமைத்துள்ளார்.

தொகுப்பு: ரசிகா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in