Published : 25 Jul 2017 08:35 AM
Last Updated : 25 Jul 2017 08:35 AM

திரை விமர்சனம்: விக்ரம் வேதா

என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் விக்ரமுக்கும் (மாதவன்) தாதாவான வேதாவுக்கும் (விஜய் சேதுபதி) இடையில் நடக்கும் ‘விக்கிரமாதித்தன் - வேதாளம்’ துரத்தலே ‘விக்ரம் வேதா’.

16 கொலைகள் செய்த வேதாவை சுட்டுக் கொல்ல வலைவீசித் தேடுகிறான் 18 என்கவுன்ட்டர்கள் செய்த விக்ரம். முதல் காட்சியிலேயே வேதாவின் கூட்டாளிகளைக் கொன்று குவிக்கிறது விக்ரம் குழு. தலைமறைவாக இருக்கும் வேதாவைக் கண்டுபிடித்துக் கொல்ல போலீஸ் படையை அனுப்பும்போது, வேதாவே சரணடைகிறான். அந்தக் கணத்தில் படம் களைகட்டுகிறது. தன் நண்பனும் சக போலீஸ் அதிகாரியுமான சைமனை (பிரேம்) கொன்றது யார் என்பதை தேடும் விக்ரமாக நாமும் மாறிப்போகிறோம். இறுதியில் நல்லவன் யார், கெட்டவன் யார்? இருவரும் என்ன ஆனார்கள்? என்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது படம்.

கனகச்சிதமான திரைக்கதையோடு இயக்கியுள்ளனர் புஷ்கர் - காயத்ரி. ஆரம்பத்திலேயே விக்கிரமாதித்தன் - வேதாளம் கதையை விளக்கி, இது வழக்கமான சினிமா இல்லை என்பதை புரியவைத்துவிடுகின்றனர். வழக்கமான போலீஸ் - ரவுடி கதை என்றாலும், திரைக்கதை வடிவமைப்பில் புதுமையைப் புகுத்தியதற்காக அவர்களுக்கு ஒரு சபாஷ்! மாதவன் - விஜய் சேதுபதி இடையே நடக்கும் ஆடுபுலியாட்டம், கதை சொல்லி தீர்வு கேட்பது, அந்த தீர்வை ஏற்கெனவே செயல்படுத்தி இருப்பது, தர்மம், உணர்வு என நியாயத்தின் பக்கங்களைப் பகிர்வது என திரைக்கதையை செதுக்கி நுணுக்கமான பதிவுகள் மூலம் அழுத்தமாக தடம் பதிக்கின்றனர். ஊகிக்கமுடியாத திடீர் திருப்பங்களை, வித்தியாசமான கோணங்கள் மூலம் நம்பத்தகுந்த வகையில் காட்சிப்படுத்தியிருப்பது கூடுதல் சிறப்பு.

‘போலீஸ் மகன் போலீஸாதான் இருப்பான். கிரிமினல் மகன் கிரிமினலாதான் இருப்பானா? அப்போ காந்தி அப்பா காந்தியா, கோட்சே அப்பா கோட்சேவா?’ என்பது போன்ற மணிகண்டனின் வசனங்கள் பல இடங்களில் கவர்கின்றன.

விஜய் சேதுபதியின் என்ட்ரிக்காக ஒட்டுமொத்த திரையரங்கமும் காத்துக் கிடக்கிறது. மிடுக்கான தோற்றம், கம்பீரமான நடிப்பில் மாதவன் அசத்துகிறார் என்றால் சின்னச் சின்ன உடல் அசைவிலேயே விஜய் சேதுபதி ஸ்கோர் பண்ணுகிறார். அவரது குரலும் அசட்டையான சேட்டைகளும் சுவாரசியத்தைக் கூட்டுகின்றன. வடையை கையில் வைத்துக்கொண்டு காவல் நிலையத்துக்குள் நுழையும் காட்சியில் தொடங்கி படம் நெடுக பார்ப்பவர்களை உடல்மொழியால் வசீகரிக்கிறார். உணர்வுப்பூர்வமான தருணங்களில் நெக்குருகுவது, துரோகம் உணர்ந்து பழிதீர்ப்பது என மிகவும் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். ‘சட்டைல்லாம் ரத்தக்கறை ஆகிட்டே இருக்கு. அதான் துப்பாக்கி இருந்தா டொப்னு சுட்டுடலாம்ல’ என்று நகைச்சுவையைத் தெளித்து ரசிக்க வைக்கிறார்.

எல்லைக்கு உட்பட்டு துப்பறிவது, நியாயத்தைவிட சட்டத்துக்கு உட்பட்டு கடமை ஆற்றுவது, ஆதாரங்களைக் கண்டறிந்து தர்மத்தின் பக்கம் நிற்பது என நேர்த்தியாக நடித்திருக்கிறார் மாதவன். அநாயாசமாக ரத்தம் தெறிக்க என்கவுன்ட்டர் செய்வது, நம்பும்படி அதற்கு திரைக்கதை எழுதுவது, மனைவி ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம் காதல் பொழிவது, விஜய் சேதுபதியிடம் மோதுவது ஆகிய காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.

காட்டன் புடவை, மைதீட்டிய கண்கள், பக்குவமான நடிப்பு என அசல் வழக்கறிஞராகவும், இல்லத்தரசியாகவும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் அசத்துகிறார். கணவன் மாதவனிடம் காதல் கொள்ளும் மனைவியாகவும், தன்பக்க நியாயத்துக்காக குரலை உயர்த்தி வாதாடும்போதும் கவனிக்க வைக்கிறார். சில காட்சிகளில் வந்தாலும் வித்தியாசமான உடல்மொழி, வசன உச்சரிப்பால் மனதில் நிற்கிறார் வரலட்சுமி. கதிர், பிரேம், விவேக் பிரசன்னா, ஹரீஷ் ஆகியோரின் கதாபாத்திரங்களும் மனதில் நிற்கின்றன.

டைட்டிலில் இடம்பெறும் விக்கிரமாதித்தன் வேதாளம் அனிமேஷன் கதையின்போதே இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். தன் முத்திரையைப் பதித்துவிடுகிறார். ‘யாஞ்சி யாஞ்சி’, ‘டசக்கு டசக்கு’ பாடல்கள் இனிமையும் துள்ளலுமாக ஒலிக்கின்றன.

சென்னை வியாசர்பாடியை சமீபகால தமிழ் சினிமாக்கள் உள்ளும் புறமுமாகக் காட்டிவிட்டாலும்கூட, அந்தப் பழுதடைந்த குடியிருப்புகளில் இன்னும் காட்சிப்படுத்த எதார்த்த அழகு ஏராளமாக உள்ளது என்பதை பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு நிரூபிக்கிறது.

கதிர் ஏன் சென்னை வந்தார்? சேட்டா ஹரீஷ் என்ன ஆனார்? மாதவன் ஏன் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவை எடுத்துவிட்டு காரணம் தேடுகிறார்? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. என்கவுன்ட்டர் செய்யப் புறப்படும் போலீஸ் படையின் குறுக்கே விஜய் சேதுபதி அலட்சியமாக நடந்து சென்றாலும், ஒரு போலீஸ் அதிகாரிகூட அவரை அடையாளம் கண்டுபிடிக்கவில்லை. செக்போஸ்ட்டில் மாட்டாமல் கடத்தல் சரக்கை விஜய் சேதுபதி காரில் கொண்டுவருகிறார். இப்படி ஒன்றிரண்டு மைனஸ்கள் இருந்தாலும், காட்சிப்படுத்திய விதம், கதாபாத்திரத் தேர்வு, பார்ப்பவர்களின் புத்திசாலித்தனத்தை பரிசோதிக்கும் வகையிலான திரைக்கதை ஆகியவை மூலம், முருங்கை மர வேதாளம்போல, ரசிகர்கள் மனதில் உச்சாணிக் கொம்பில் ஏறி அமர்ந்துகொண்டு விடுகிறான் ‘விக்ரம் - வேதா’!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x