

பூக்கடைக்கும் விளம்பரம் தேவைப்படும் காலம் இது. ‘இந்த வாரம் இந்தப் படம் திரைக்கும் வருகிறது’ என்பதை விளம்பரப்படுத்த, லட்சக்கணக்கில் தயாரிப்பாளர்கள் செலவு செய்தாலும் பெரிய பலன் கிடைப்பது இல்லை. ஆனால், ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தின் புதுமையான விளம்பர உத்திகள், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகின்றன. ‘இந்த எதிர்பார்ப்பை எப்படி உருவாக்க முடிந்தது?’ என்ற கேள்விக்குப் தெளிவான பதிலை அளிக்கிறார் படத்தின் இயக்குநர் த.செ. ஞானவேல்.
‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தைத் திரையரங்கம் வந்து ஏன் பார்க்க வேண்டும்?’ என்ற கேள்விக்கு, பதில் சொல்லும்படியாக புரமோஷன் ஐடியாக்களை உருவாக்கினோம். படத்தில் இடம்பெற்ற ‘மாற்றங்கள் ஒன்றேதான் மாறாதடா’ பாடலுக்கு, சாதாரண மக்கள் முதல் உச்சத்தில் இருக்கும் சினிமா நட்சத்திரங்கள்வரை பலரைப் பங்குபெற வைத்தோம். சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சமுத்திரகனி, விஷ்ணுவிஷால், பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்கள் பெருந்தன்மையோடு எங்களின் புரமோஷனுக்கு உதவினர். அந்த ‘கிஃப்ட் சாங்’ பாடலை 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர், ஃபேஸ்புக்கில் பார்த்தனர். வாட்ஸ்அப் வீடியோவாகப் பகிர்ந்தனர்.
கூட்டத்தில் ஒருத்தராக இருந்து ஆயிரத்தில் ஒருத்தராக மாறிய அப்துல் கலாம், ஜாக்கிஜான், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த், மேரிகோம் போன்ற ஆளுமைகளைப் பற்றி இரண்டு நிமிட வீடியோ செய்தோம். அதற்கும் நல்ல வரவேற்பு. ‘ஏண்டா இப்படி?’ என்ற பாடலை வைத்து, ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி?’ என்று பிரபலங்கள் வாழ்வில் நடந்த சுவாரசியமான விஷயங்களை வீடியோவாக வெளியிட்டோம். இந்த உத்திகள் அனைத்தும் படத்தின் கதையை ஒட்டியே செய்தோம்.
பிரபலங்கள் பெரிய மனதோடு ‘கூட்டத்தில் ஒருத்தன்’ திரைப்படத்துக்கு ஆதரவு அளித்தனர். இன்னும் நிறைய ஐடியாக்கள் உள்ளன. ரிலீஸுக்கு அப்புறம் இரண்டு வாரம் வரை இப்படிப் புதிய உத்திகளில் விளம்பரங்கள் வைத்திருக்கிறோம்” என்று உற்சாகமாகச் சொல்கிறார் த.செ. ஞானவேல். கதைக்கு மட்டுமல்ல; புரமோஷனுக்கும் புதுமையாக யோசிக்க வேண்டிய காலம் இது.