

நியூஸ் 18 சேனலில் கனத்த குரலுடன் செய்தி வாசிப்பாளராக வலம் வருபவர் சப்ரின்ஷா.
‘‘பிறந்து, வளர்ந்து, படித்தது எல்லாம் கோவையில். காட்சித் தொடர்பியலில் பட்டப்படிப்பு முடித்து, தந்தையின் தொழிலை அவருடன் கவனித்து வந்தேன். தமிழ் அவ்வளவாகத் தெரியாது. பள்ளிக்கூடத்தில் உருது, ஹிந்திதான் என் முதல் மொழி. கல்லூரியில் இருந்துதான் தமிழ் படிக்க ஆரம்பித்தேன். ஊடகத் துறை மீதான ஆர்வத்தால், கோவையில் லோட்டஸ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளராகப் பணியைத் தொடங்கினேன்.
பின்னர், நியூஸ் 18 தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்தது. விளம்பரம், திரைத்துறையில் இருந்தும் வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், எனக்குதான் அவற்றில் ஆர்வம் வரவில்லை. ஆல் இந்தியா ரேடியோவில் ரேடியோ ஜாக்கி ஆகவேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. வீட்டில் திருமணத்துக்கான ஏற்பாடு நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகும், என் பணி தொடரும்’’ என்கிறார் சப்ரின்ஷா உற்சாகமாக.
ஆல்பம்அமைக்கப்போறேன்
பெப்பர்ஸ் தொலைக்காட்சியில், வெளிநாட்டு உணவு வகைகளை வித்தியாசமான கோணத்தில் எடுத்துவைக்கும் நிகழ்ச்சியாக ‘குளோபல் கிச்சன்’ஒளிபரப்பாகிகிறது. ஞாயிறுதோறும் காலை 11 மணி முதல் 11.30 மணி வரை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதை தீப்தி தொகுத்து வழங்குகிறார்.
‘‘திபெத்தியன், சைனீஸ், தாய், ஜப்பானீஸ், இத்தாலியன் என்று சர்வதேச அளவில் வரவேற்பை பெற்ற உணவுகள் சென்னையில் எங்கெல்லாம் கிடைக்கிறது என்பதை அலசும் நிகழ்ச்சி இது. நான் இதன் தொகுப்பாளராக மாறிய பிறகு ஏகப்பட்ட புது உணவு வகைகளைத் தெரிந்துகொண்டேன். ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம்.கன்வென்ஷன் இசைப் பள்ளியில் இசைப் படிப்பை இப்போது தான் முடித்தேன்.
நிகழ்ச்சி தொகுப்பதில் இருந்த ஈர்ப்பு காரணமாக, சேனலுக்குள் வந்தேன். இசை ஆல்பம் உருவாக்குவதிலும் கவனம் செலுத்துகிறேன். இசை அமைப்பதைவிட, தனி ஆல்பம் அமைப்பதில்தான் எனக்கு ஆர்வம் அதிகம். நாம் நினைக்கும் விஷயங்களை சுதந்திரமாக, சமூக பொறுப்போடு தனி ஆல்பங்கள் வழியே சிறப்பாக கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்கிறார் தீப்தி.
சூப்பர் டேலன்ட்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில், சாகசக் கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ‘ஜீ சூப்பர் டேலன்ட்ஸ்’ என்ற புதிய சாகச நிகழ்ச்சி வரும் ஞாயிறு முதல் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
‘‘பிரபல திரை நட்சத்திரங்கள், நாட்டின் தலைசிறந்த திறமைசாலிகள், சாமானிய மக்கள் என அனைவரையும் ஒன்றிணைக்கும் இடமாக இந்த நிகழ்ச்சி மேடை மாற உள்ளது.
முதன்முறையாக 100 திறமைசாலிகள் கலந்துகொண்டு சாகசங்களை நிகழ்த்தி, மக்களிடம் இருந்து வாக்குகளைப் பெற உள்ளனர்’’ என்கின்றனர் தொலைக்காட்சி நிர்வாகத்தினர்.
நடிகரும், தொகுப்பாளருமான சஞ்சீவ் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார்.