

கூட்டத்தில் ஒருவனாக இருக்கும் ஒருத்தனை ஆயிரத்தில் ஒருவனாக மாற்றுகிறது காதல். அதுதான் இப்படத்தின் ஒருவரிக் கதை.
படிப்பு, தனித்திறமை, சுறுசுறுப்பு என எல்லாவற்றிலும் சராசரியாக இருக்கும் ஒரு ‘மிடில் பெஞ்ச்’ மாணவன் அசோக் செல்வன். இவர், எல்லாவற்றிலும் சிறந்து விளங்கும் முதல் பெஞ்ச் மாணவி ப்ரியா ஆனந்த் மீது காதலாகிறார். அதற்காகவே, ப்ரியா ஆனந்த் படிக்கும் கல்லூரியிலும் சேர்ந்து, அவரை சுற்றிச் சுற்றி வருகிறார். ‘‘உன்னைப் பத்தி சொல்றமாதிரி ஒரு விஷயம் பண்ணிட்டுவா, அப்புறம் யோசிக்கலாம்’’ என வெடுக்கென்று வெட்டிவிடுகிறார் ப்ரியா. மனமுடையும் அசோக் செல்வன் தற்கொலைக்கு முயல்கிறார். அப்போது, கடலில் தத்தளிக்கும் வாய்பேசாத சிறுவனைக் காப்பாற்றப்போக, பிரபலமாகிறார். அதன் பிறகு அவரது வாழ்க்கையில் நிகழும் சில அசாதாரணத் திருப்பங்கள் அவரைக் கல்லூரியில் முதல் மாணவன் ஆக்குகின்றன. காதலும் கைகூடுகிறது. ஆனால் கூடிய வேகத்திலேயே உடைந்தும் போகிறது. காதல் தோல்வியால் நொறுங்கிப்போகும் அவர், மீண்டு எழுந்தாரா, இல்லையா? அவரது பின்கதை என்ன என்பதுதான் ‘கூட்டத்தில் ஒருத்தன்’.
ஒரு அழகான காதல் கதைக்குள், இதழியல், வன்மம், சமூக அக்கறை ஆகிய 3 அம்சங்களைக் கலந்து திரைக்கதை எழுதியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தா.செ.ஞானவேல். கதைக்குள் கதை, காட்சிக்குள் காட்சி என திரைக்கதையில் அடுக்குகளை உருவாக்குவதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
குடும்பத்தில் 3 குழந்தைகளில் நடுவில் பிறந்தவன், வகுப்பறையில் நடு பெஞ்ச் மாணவனின் உணர்வுகளை மையமாகக் கொண்டு விளையாடியிருக்கிறார். திரைக்கதை, வசனங்களில் அவரது புத்திசாலித்தனம் நன்கு வெளிப்படுகிறது.
‘சுத்தி நூறுபேரு இருக்கும்போது தனிமைய ஃபீல் பண்ணியிருக்கீங்களா?’ என்று கதாநாயகனின் தாழ்வு மனப்பான்மையை சட்டெனச் சுட்டிக்காட்டும் வசனம் ஓர் உதாரணம்.
கிளைமாக்ஸிலும் புதுமையைக் கையாண்டிருக்கிறார். கடைசி 20 நிமிடப் படத்துக்கு முதுகெலும்பாக அமைந்துவிடுகிறது முடிவுப்பகுதி.
ஆனால், முதல் பாதியில் உள்ள சுவாரசியமும், விறுவிறுப்பும் இரண்டாம் பாதியில் இல்லை. குடிக்கிற காட்சியும், தேவையற்ற பாடல்களும் படுத்துகின்றன.
கதாபாத்திரத்துக்கேற்ற முகம், நாயகன் அசோக் செல்வனுக்கு. கதைக்கேற்ற நடிப்பையும் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார். முகம், கண்கள், உடல்மொழி என எல்லாவற்றிலும் தன்னை சராசரி மாணவனாக வெளிப்படுத்துகிறார். உருமாற்றம் நிகழ்ந்துவிடும் இறுதிக்காட்சியிலும் நம்பகமான நடிப்பைத் தந்திருக்கிறார்.
நாயகி ப்ரியா ஆனந்த் அழகு. நடிக்கவும் செய்திருக்கிறார். தனக்குத் தரப்பட்ட கதாபாத்திரத்தை அலட்டல் இல்லாமல் வெளிப்படுத்திச் சென்றுவிடுகிறார்.
நாயகனின் நண்பனாக வரும் பால சரவணனின் நகைச்சுவையும் சிறப்பு. ‘நாயும் மச்சான், நானும் உனக்கு மச்சானா?’, ‘எப்ப நீ படிக்கிற பையனாகிட்டியோ அப்பவே என் நண்பன்கிற தகுதியை இழந்திட்ட’ என்பது போன்ற வசனங்களின்போது தியேட்டரே குலுங்கிச் சிரிக்கிறது.
தாதாவாக வருகிற சமுத்திரக்கனியின் பாத்திரம் படத்துக்கு பெரிய பலம். தாதாவாக, நல்ல மனிதராக, நாயகனுக்கு உதவும் அண்ணனாக, வாய்பேசாத சிறுவனின் தந்தையாக நிறைவான நடிப்பைத் தந்திருக்கிறார். நாசரும் படத்தில் இருக்கிறார், நடிக்க அதிகம் வாய்ப்பு இல்லாத கதாபாத்திரம்.
தாதா, போலீஸ் இன்ஸ்பெக்டர், கல்லூரி நண்பன் ஆகியவை பழகிப்போன வழக்கமான தமிழ் திரையுலக கதாபாத்திரங்கள் என்றாலும், அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் முதல் பெஞ்ச் மாணவரின் வில்லத்தனம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது.
நாயகனுக்குள் காதல் மலரும் தருணம், காதலுக்குப் பிறகு அவரிடம் தோன்றும் மாற்றங்கள் ஆகியவற்றை நிவாஸ் கே.பிரசன்னா இசையின் துணையுடன் பளிச்சென புதுமையாக சித்தரித்திருக்கிறார் இயக்குநர். அதற்கு பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவும் கைகொடுக்கிறது.
முதல் பாடலும் (ஏண்டா இப்படி, எனக்கு ஏண்டா இப்படி) அதைக் காட்சிப்படுத்திய விதமும் ரசிக்கும்படி இருக்கிறது. கதைக்கும் உதவுகிறது.
புதிய கதை, சமூகத்தின் மீதான அக்கறை, நடிகர்கள் தேர்வு, தொழில்நுட்பம், படமாக்கம் என எல்லாம் கச்சிதம். திரைக்கதையில் தொக்கி நிற்கும் ‘ஓவர் டோஸ்’ தன்மை, ரசிகர்கள் எளிதாக ஊகித்துவிடக்கூடிய காட்சிகள் இவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், குடும்பத்துடன் கொண்டாடப்பட வேண்டியவனாக வசீகரிக்கிறான் ‘கூட்டத்தில் ஒருத்தன்’!