

முன்னமே க்ளூ கொடுத்து தொடர் கொலைகளை அரங்கேற்றும் சீரியல் கில்லரை, நிபுணத்துவத்தோடு அர்ஜுன் கண்டுபிடித்து தண்டிப்பதுதான் ஒருவரிக் கதை.
அர்ஜுனின் 150-வது படம். உடலையும், வசீகரத்தையும் அப்படியே வைத்திருப்பதற்கு முதலில் சபாஷ்! அன்பான மனைவி, அழகான குழந்தை, பிரியமான தம்பி என இனிமையான சூழலில் வாழும் அர்ஜுன், குற்றப் புலனாய்வு டிஎஸ்பி. என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட். தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு, அரசியல் தலையீடுகளால் தப்பிக்கிற சிலரை தீர்த்துக்கட்டும் அசைன்மென்ட், அவருக்கு கொடுக்கப்படுகிறது. பிரசன்னாவும், வரலட்சுமியும் உதவி போலீஸ் அதிகாரிகள்.
அரசியல் தலைவர், பெண் மருத்துவர், வழக்கறிஞர் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். கொலையாளியை தீவிரமாகத் தேடுகிறார் அர்ஜுன். இதற்கிடையில், அவருக்கு பார்க்கின்சன் நோய் ஏற்படுகிறது. கை, கால் அடிக்கடி மரத்துப்போய், இயக்கம் தடைபடுகிறது.
தொடர் விசாரணையில், சீரியல் கில்லரின் அடுத்த குறி தான்தான் என்பதை உணர்கிறார். அதற்கான காரணம் என்ன? உயிரிழந்த மூவருக்கும் தனக்கும் என்ன சம்பந்தம்? சீரியல் கில்லர் யார்? அவரை அர்ஜுன் பிடித்தாரா? அசைன்மென்ட் என்ன ஆனது என்பதுதான் ‘நிபுணன்’.
சீரியல் கில்லர் யார் என்பதை படத்தின் இறுதிவரை சஸ்பென்ஸாக கொண்டு சென்றதில் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் அருண் வைத்தியநாதன். படம் பார்ப்பவர்கள் அதை சிறிதுகூட கணித்துவிட முடியாதபடி அமைத்திருப்பது பாராட்டுக்குரியது. படம் முடிந்ததும் அந்த பாத்திரத்தில் நடித்த கிருஷ்ணாவின் பெயரைப் போடும் நிபுணத்துவம் ஓ.கே!
அர்ஜுனின் குடும்பத்தை அவ்வப்போது காட்டுவது, வேகமாகப் பயணிக்கும் திரைக்கதைக்கு முட்டுக்கட்டை போட்டு, சலிப்பைத் தருகிறது.
காட்சிகளின் பின்னணியில் வரும் தொலைக்காட்சி செய்திகளில்கூட கவனம் செலுத்தியிருப்பது அருமை. ஆருஷி கொலை வழக்கை பின்னணியாகக் கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார். ஆனால், கொலைக்கான காரணம் சினிமாத்தனமாக உள்ளது. காட்சியமைப்புகளும் நம்பும்படி இல்லை.
தன் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு எழும் நேரத்தில், ‘‘கிரிமினல்ஸைக்கூட சமாளிச்சுடலாம். பிரஸ்ஸை சமாளிக்க முடியாது’’ என்று அர்ஜுன் சொல்வது, காவல் துறையின் எதார்த்த நிலையைக் காட்டுகிறது.
போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில், வழக்கம்போல அர்ஜுன் கச்சிதம்! அவரது மனைவியாக வரும் ஸ்ருதி ஹரிஹரன், காவல் அதிகாரியுடைய மனைவியின் நிலை என்ன என்பதை மிக அற்புதமாக வெளிப்படுத்துகிறார். படத்தில் அர்ஜுனுக்குப் பிறகு கவனம் ஈர்ப்பது இவர்தான்.
கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ள பிரசன்னா, வரலட்சுமி சில இடங்களில் காமெடியும் செய்கின்றனர். படத்தின் மொத்த பளுவையும் தூக்கி அர்ஜுன் மீது வைக்காமல் இவர்களும் இடையிடையே ஸ்கோர் செய்கின்றனர்.
இடைவேளை வரை ரசிகர்களுக்கு அறிமுகமே இல்லாமல், திடீரென முளைக்கும் வில்லன் கதாபாத்திரம், திரைக்கதையோடு ஒட்டவில்லை.
நவீனின் இசை சில இடங்களில் தேவைக்கு அதிகமாக ஒலிக்கிறது. பாடல்கள் பரவாயில்லை. அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு நேர்த்தி.
வழக்கமான த்ரில்லர் படங்களைத் தவிர்த்து புதுமையாக சொல்ல முயன்றுள்ளனர். திரைக்கதையில் இன்னும் நிபுணத்துவம் காட்டியிருந்தால், ‘நிபுணன்’ நன்கு ஈர்த்திருப்பான்!