திரை விமர்சனம்: யானும் தீயவன்

திரை விமர்சனம்: யானும் தீயவன்
Updated on
1 min read

வம்பு தும்புக்கும் செல்லாமல் காதலியின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கும் கல்லூரி மாணவர், சூழ்நிலை காரணமாக தீயவனாக மாறும் கதை.

யாருடைய பல கொலைகளைச் செய்துவிட்டு சர்வ சாதாரணமாக நடமாடும் சைக்கோ ரவுடி ராஜு சுந்தரம். கல்லூரி மாணவரான அஸ்வின் ஜேரோமும், சக மாணவியான வர்ஷாவும் காதலர்கள். கடற்கரைக்கு செல்லும் இவர்களை, ராஜு சுந்தரத்தின் ஆட்கள் கிண்டல் செய்ய, அவர்களை அஸ்வின் ஜெரோம் நையப் புடைக்கிறார். பொடிப் பையன் தன்னை அடித்ததால் கோபமடையும் ராஜு சுந்தரம், அவர்களை பழிவாங்க துடிக்கிறார். எதிர்பாராத தருணத்தில் ராஜு சுந்தரத்திடம் காதலர்கள் சிக்கிக் கொள்ள, அவர்களை கொடுமைப்படுத் திக் கொல்ல முடிவெடுக்கிறார். இதற் கிடையில் ராஜு சுந்தரத்தை என் கவுன்ட்டர் செய்ய போலீஸார் முடிவெடுக்கின்றனர்.

அப்புறம் என்ன ஆச்சு என்ற 2-வது பாதி விறுவிறுப்பாக இருந்தாலும், முதல் பாதி சொதப்புகிறது.

காதலர்களின் குடும்பம், அவர்களது கல்லூரி வாழ்க்கை, காதல், ரவுடியின் உளவியல் சிக்கல், காவல் துறை அதிகாரியின் நிலைமை ஆகியவற்றை நிறுவுகிறோம் என்ற பெயரில் உப்புச் சப்பில்லாத காட்சிகளால் பொறுமை யைச் சோதிக்கிறார்கள். முதல் பாதியில் நிமிர்ந்து உட்கார வைக்கும் ஒரே இடம், ரவுடிகளை நாயகன் திருப்பி அடிக்கும் சண்டைக் காட்சி.

‘‘குறும்படம் மாதிரி போகுது..” என்று படம் தொடங்கியதுமே ரசிகர்கள் மத்தியில் இருந்து கமெண்ட் வருகிறது. முழுப்படத்தையும் பார்த்த பிறகு, ‘என்னே தமிழ் சினிமா ரசிகர்களின் தீர்க்கதரிசனம்’ என மெச்சாமல் இருக்க முடியவில்லை.

காதல் காட்சிகளும், ஏதோ பழைய படம் பார்ப்பதைப் போல் சலிப்பை தருகின்றன. நாயகி வர்ஷா, நஸ்ரியா சாயலில் பளிச்சிடுகிறார். நன்றாக நடிக்கவும் செய்துள்ளார். நாயகன் அஸ்வின் சண்டை காட்சிகளில் ஈர்க் கிறார்.

காதலித்து திருமணம் செய்து கொண்டால், பெண்ணைப் பெற்றவர்கள் அத்தோடு மகளை தலைமுழுகி விடுவார்கள், பையன் தரப்பில் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள் என்ற ஃபார்முலாவை இன்னுமா இந்த உலகம் நம்புகிறது, மிஸ்டர் இயக்குநர்? சௌமியாவின் அப்பா, ‘அப்பா, அம்மான்னு சொல்லிக்கிட்டு வீட்டுப் பக்கம் வந்தே செருப்பு பிஞ்சிடும்’ என்று சொல்வது; மைக்கேலின் அம்மா, பையனுக்கு பாஸிட்டிவாக அட்வைஸ் தந்துவிட்டுப் போவது, இந்தக் காட்சிகளுக்குப் பிறகு இரு தரப்புமே பிள்ளைகளை அப்படியே மறந்து போவது அத்தனையும் பழைய சினிமாத்தனங்கள்.

பாடல் வரிகள் ரசிக்கும்படி இருந் தாலும் இசை கைகோக்கவில்லை. அச்சு ராஜாமணி இசையில் இன்னும் கொஞ்சம், கவனம் செலுத்தியிருக் கலாம். அதேபோல் படத்தின் எடிட் டிங்கிலும் பல காட்சிகள் தொங்கலாக, தனித்து நிற்கிறது. படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் மட்டுமே ஆறுதல் தருகின்றன. காவல் ஆய்வாளராக பொன்வண்ணன் நிறைவான நடிப்பை தந்துள்ளார்.

முதல் பாதியின் தேக்கத்தைக் களைந்திருந்தால் முழுமையான த்ரில்லராக இன்னும் ஈர்த்திருப்பான் இந்த யானும் தீயவன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in