Last Updated : 14 Nov, 2014 10:55 AM

 

Published : 14 Nov 2014 10:55 AM
Last Updated : 14 Nov 2014 10:55 AM

காதல் படத்துக்கு நடுவே கங்கை ஆவணப்படம்! - இயக்குநர் ராஜசேகர் பேட்டி

விஷால் நடித்த ‘சத்யம்’ படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஏ.ஆர்.ராஜசேகர்.தற்போது சித்து, ஹன்சிகா நடிக்கும் ‘உயிரே உயிரே’ படத்தை இயக்கிவருகிறார். “காதலைக் கொஞ்சமும் குளிர் குறையாமல் ஜில்லென்று பிரதிபலிக்கிற படம் இது. அதற்காகவே வரும் காதலர் தினத்தன்று வெளியிட முடிவு செய்து இறுதிக்கட்ட வேலைகள் நகர்ந்துகொண்டிருக்கின்றன” என்று பேச ஆரம்பித்தார்.

அப்படி என்ன காதல் கதை இது?

காதல் இன்றைக்கு சீரியஸாகப் பார்க்கப்படுகிறது. அது தப்பான விஷயம் என்பதைத்தான் ஒரு பயணமாகக் கூறப்போகிறோம். இந்த லவ் ஸ்டோரி, ஒரு ஃபன் லைவ் ஸ்டோரியாக இருக்கும். ‘இஷாக்’ என்ற பெயரில் தெலுங்கில் வெளிவந்த படத்தின் தமிழ் மறு ஆக்கம். கதை மும்பையில் தொடங்கி போபால் வழியே சென்று சென்னையில் முடியும் ஒரு காதல் பயணம். ஹீரோ, ஒரு இடத்தில் தப்பிப்பதற்காக ஹீரோயினைக் ‘காதலி’ என்று பொய் சொல்வான். பதிலுக்கு, ஹீரோயின், ‘எங்களுக்குக் குழந்தையே பிறக்கப் போகிறது’என்று சொல்வாள். விழுந்து விழுந்து காதலிக்கும் காதலர்கள் அந்தக் காதலில் ஜெயிப்பதற்காக வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்கிறார்கள். அது அவசியமில்லை என்று சொல்கிறது படம். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு காதல், திருமணம் வரைக்கும் வந்தவர்கள், இரு வீட்டைச் சார்ந்த பெற்றோர்களிடம் பேசிப் புரியவைப்பதில்லை. மனதுக்குப் பிடித்த வாழ்க்கையைத் தேடிக்கொள்ளும் ஜோடிகள், குடும்பம் சூழ்ந்து நின்று வாழ்த்தி நடக்க வேண்டிய திருமணத்தின் அருமை பெருமையை ஏன் புரிந்துகொள்வதில்லை என்பதை ஜாலியாகச் சொல்லும் படம். ஆனால் படத்தில் எங்குமே அலசல் இருக்காது.

இந்தப் படத்தின் நாயகன் சித்து ஜெயப்பிரதாவின் மகன் என்று செய்திகள் வெளியானதே?

ஆமாம். சென்னையில் வளர்ந்தவர் சித்து. செம ஸ்மார்ட். இப்போது நடிக்க வந்திருக்கிறார். அவருடைய அம்மா ஜெயப்பிரதா மேடம் தயாரிப்பில்தான் படம் உருவாகிவருகிறது. குடும்பத்தோடு ஒரு முறை ‘கெட் டூ கெதர்’ நிகழ்ச்சியொன்றுக்குப் போனபோது எனது சத்தியம் படத்தின் தெலுங்குப் பதிப்பான ‘சல்யூட்’ படத்தைப் பார்த்திருக்காங்க. அதன் மூலம்தான் இந்தப் படத்தை நான் இயக்கும் பொறுப்பு என் கைக்கு வந்தது. காதல் படம். அறிமுக ஹீரோ படம். இதற்கு ஹன்சிகா மோத்வானி மாதிரி ஒரு முன்னணி ஹீரோயின் இருந்தா படத்தின் மதிப்பு கூடும் என்று கேட்டேன். கொடுத்துட்டாங்க. இப்போது நல்ல டீமூடன் அழகா ஒரு படம் உருவாகியிருக்கு.

நீங்கள் கங்கை நதியைப் பற்றி ஓர் ஆவணப் படம் எடுத்துவருவதாகச் செய்தி வெளியானதே?

உண்மைதான். சினிமா நல்ல வாய்ப்பு. அதையும் தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறேன். அதைவிடச் சுற்றுச்சூழல், அறிவியல் சார்ந்த விஷயங்களை ஆவணப் படமாக இயக்கும்போது கிடைக்கும் நிறைவே தனி. ஓர் இயக்குநராக அங்கே மட்டும்தான் சுதந்திரமாகச் செயல்பட முடியும். மாணவனாக இருக்கும்போது சிவசுப்ரமணியன் என்ற நண்பருடன் இணைந்து சந்தன வீரப்பனைக் காட்டுக்குச் சென்று பேட்டி எடுத்திருக்கிறேன். பத்திரிகையாளன், தொலைக்காட்சியில் பணி என்று படிப்படியான அனுபவம் பெற்றே வளர்ந்தேன். அந்த அனுபவத்தின் அடுத்தகட்ட முயற்சியாகவே ஆவணப் படங்களை இயக்க ஆரம்பித்திருக்கிறேன். கங்கை நதி பற்றிய ஆவணப் படம் என் மனதுக்கு நெருக்கமான ஒன்று. ‘ஐ ஆம் நாட் கங்கா’ என்ற தலைப்பில் உருவாகியிருக்கும் அது கங்கை நதியின் முழுமையான பதிவாக இது இருக்கும். 90 நிமிடப் படம். 64 திரைப்பட விழாக்களுக்கு அனுப்பத் திட்டமிட்டு வருகிறேன். காதல் படத்தை இயக்கிக்கொண்டு கங்கையின் மீது காதலோடு பனிச்சிகரங்களில் சுற்றித் திரிவதும் பிடித்திருக்கிறது.

மறு ஆக்கப் படங்களில் கவனம் செலுத்துவது ஏன்?

அடுத்து இயக்கவிருக்கும் ‘கிங் ஃபிஷர்’ எனது நேரடிக் கதை. இதை நாம் செய்தால் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு வரும் வாய்ப்புகளை மதிக்க வேண்டும் அல்லவா. அதுதான் காரணம். அடுத்து நாகார்ஜூன் மகன் நாக சைதன்யாவின் தெலுங்குப் படத்தை இயக்கத் திட்டமிட்டிருக்கிறேன்.அவருக்குக் கதை பிடித்துவிட்டது.கால்ஷீட் பேச்சுவார்த்தை நகர்ந்துகொண்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x