

‘படிப்பு, வேலை, காதலைவிட இசைதான் லட்சியம்’ என்று மீசையை முறுக்கும் சராசரி இளைஞனின் கதைதான் ‘மீசைய முறுக்கு’.
அன்பான குடும்பம், நட்பு என்று வளரும் ஹிப்ஹாப் ஆதிக்கு சிறு வயதில் இருந்தே இசைதான் கனவு. ஆதியின் விருப்பத்தை உற்சாகப்படுத்தினாலும், மகன் படித்து நல்ல வேலையில் அமரவேண்டும் என்பது அப்பா விவேக்கின் ஆசை. நண்பன் விக்னேஷுடன் சேர்ந்து பள்ளியில் குறும்புத்தனம், வம்பிழுப்பது என்று சுற்றிவரும் ஆதிக்கு, சக மாணவி ஆத்மிகா மீது ஈர்ப்பு வருகிறது. ஆத்மிகா வேறு பள்ளிக்குப் போனதும், ஆதியும் படிப்பு, இசை என்று கவனம் செலுத்துகிறார். கல்லூரியில் சேர்ந்தபோது, ஆத்மிகாவை மீண்டும் சந்திக்கிறார். நட்பு மலர்ந்து காதலாகிறது. இந்தக் காதலால் ஏற்படும் பிரச்சினை என்ன? இசைதான் வாழ்க்கை என்று கனவோடு ஓடும் ஆதியின் லட்சியம் என்ன ஆனது? இதுதான் மீதி கதை.
இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி, நடிகர், இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். தன் நிஜ வாழ்வில் மியூசிக் கேரியரை தொடங்கும் முன்பு நடந்த உண்மை சம்பவங்களில் கற்பனை கலந்ததுதான் இக்கதை என்ற அவரது விளக்கத்தோடு படம் தொடங்குகிறது. அவரது சுயசரிதையோடு அப்பா சென்டிமென்ட், கடந்துபோகும் காதல், அதில் எழும் பிரச்சினை, கல்லூரி வாழ்க்கை, ராகிங் கொடுமை, சகோதர உறவு என சில கற்பனைகள் கலந்து திரை வடிவம் கொடுத்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் என சகல வேலைகளையும் அவரே செய்துள்ளார்.
படத்தில் நாயகனைவிட விவேக் கதாபாத்திரம்தான் அதிகம் கவனம் ஈர்க்கிறது. சிறுவயதில் பிள்ளைகளுக்குப் படிக்க ‘பொன்னியின் செல்வன்’ கொடுப்பது, மகன் சென்னைக்கு செல்லும்போது அவனுக்கே தெரியாமல் பர்ஸில் பணம் வைப்பது என ஸ்கோர் செய்கிறார். அவரது அழகான தமிழ் உச்சரிப்பும், பாரதியார் பாசமும் அழகு. மகனின் கனவுக்கு தடையாக இல்லாமல், அதே நேரத்தில் அவனது எதிர்காலம் கெட்டுவிடக்கூடாது என்று அக்கறை காட்டும் இடத்திலும், ‘தோல்வின்னாலும், வெற்றின்னாலும் மீசைய முறுக்கு’ என்று உத்வேகப்படுத்தும்போதும் தனித்து நிற்கிறார்.
விவேக், விஜயலட்சுமி கதாபாத்திரங்கள் தவிர நாயகி ஆத்மிகா, ஆர்.ஜே.விக்னேஷ், ஆனந்த்ராம், அன்பு, கோபி, சுதாகர் என்று ஆதியின் கூட்டாளி பட்டாளங்கள் பெரும்பாலும் புதிய முகங்கள். யூ-டியூப் சேனல் மூலம் புகழ்பெற்ற 10-க்கும் மேற்பட்டவர்களை இதன்மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் ஆதி. ரேடியோ சேனலில் ஹிப்ஹாப் ஆதியின் ஆல்பத்தை ரிலீஸ் செய்யும் இடத்தில் மா.கா.பா. ஆனந்த் கைதட்ட வைக்கிறார்.
இசையமைப்பாளர் ஆவதற்கு ஹீரோ ஆதி எடுக்கும் முயற்சி, அல்பம் ஐடியா, கல்லூரியில் தன்னை எதிர்த்த சீனியர்கள் பின்னாளில் தன் கேரியருக்கு உதவும் இடங்கள் ஆகியவை மனதில் நிற்கின்றன. ஆனாலும், கண்டதும் காதல், கல்லூரி ராகிங், சாதி பிரச்சினையால் காதல் முறிவு, இசை முயற்சியில் சந்திக்கும் அவமானம் என்பது போன்ற பழகிப்போன காட்சிகள், படத்தின் விறுவிறுப்பையும், எதிர்பார்ப்பையும் குறைத்துவிடுகின்றன.
ஆட்டம், பாட்டம் என்று சுற்றும் பாடல் காட்சிகளில் ரசிக்கவைக்கிற அளவுக்கு ஆதியின் நடிப்புக் காட்சிகள் சரியாக ஒட்டவில்லை. நடிகனாக பல இடங்களில் ஒப்பேற்றவே செய்திருக்கிறார். அடிக்கடி வரும் பாடல்களும், ஒரேமாதிரியாக படமாக்கப்பட்டிருக்கும் விதமும் சலிப்பை ஏற்படுத்துகின்றன. நகைச்சுவைக் காட்சிகள் படத்தை நன்கு தாங்கிப் பிடிக்கின்றன. யு.கே.செந்தில்குமார் - கிருதிவாசனின் ஒளிப்பதிவும், ஃபெனி ஆலிவரின் எடிட்டிங்கும் அருமை.
பல்வேறு சம்பவங்களின் தொகுப்பு போல இருப்பதால், சீரான ஒரு கதையோட்டம் கொண்ட படமாக இல்லை. என்றாலும், துடிப்பான கல்லூரிக் காளைகளைக் கவரும் காட்சிகளை அமைத்த வகையில், ஆதி முறுக்கிக் கொள்ளலாம் மீசையை!