

தமிழ் ரசிகர்கள் எதிர்நோக்கியிருக்கும் சில படங்களில் ஒன்று மணிரத்னம் இயக்கி முடித்திருக்கும் 'காற்று வெளியிடை'. இப்படத்தில், இந்தித் திரையுலகில் மின்னத் தொடங்கியிருக்கும் அதிதி ராவ், தமிழில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். அவருடனான தொலைபேசி உரையாடலிலிருந்து...
‘காற்று வெளியிடை' வாய்ப்பு எப்படி அமைந்தது?
மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. ஒரு ஃபோட்டோ ஷுட்டுக்குப் பிறகே தேர்வு செய்தார்கள். மணிரத்னம் சார் படத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவு பலித்ததால் மிக மகிழ்ச்சியாக இருந்தது.
மணிரத்னம் படத்தில் நடிப்பதற்காக ஏதேனும் பயிற்சி மேற்கொண்டீர்களா?
மொழி தெரியாது என்பதால் நிறையப் பயிற்சி தேவையாக இருந்தது. கதாபாத்திரம் எப்படிப் பட்டது, எப்படி ஆடை அணியும், நடந்து கொள்ளும், கோபப்படும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் எனப் பல விஷயங்கள் குறித்து உரையாடினோம். மருத்துவர் கதாபாத்திரம் என்பதால், மருத்துவர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பதைப் பார்த்துத் தெரிந்துகொண்டேன். பல மணி நேரம் இதற்காகச் செலவு செய்துள்ளேன்.
‘காற்று வெளியிடை' படத்துக்கு முன்பும், பின்பும் மணிரத்னம்?
அவர் இயக்குநர் என்பதைத் தாண்டி பெரிய ஆளுமை. படத்தில் நடித்த அனுபவத்தைச் சாதாரணமாக வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. திருப்தியான, என்னை வளர்த்துக் கொள்ளக் கூடிய ஒரு அனுபவமாக இப்படம் இருந்தது.
தமிழில் அடுத்து...
நல்ல படங்கள் வந்தால் நடிப்பேன். என்னைப் பாதிக்கும், நான் மதிக்கும் இயக்குநர்கள் எனக்கு முக்கியம். எந்த மொழி படத்தில் நடிப்பதாக இருந்தாலும் இயக்குநர் தான் எனக்கு முக்கியம்.
‘காற்று வெளியிடை' டீஸர், பாடல் ஆகிய வற்றுக்குக் கிடைத்த சமூக வலைத்தள வரவேற்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பாராட்டுகளால் திக்குமுக்காடி விட்டேன். ஒரு ரசிகரின் அன்புதான் அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகிறது. நம்மைத் திரையில் மீண்டும் மீண்டும் காண வேண்டும் என அவர்கள் நினைத்தால் தான் நமக்கும் துறையில் நிறைய உழைக்க வேண்டும் என்ற உந்துதல் கிடைக்கும். நன்றியை உணர்கிறேன். மணி சார் ஒரு அற்புதமான குழுவை ஒருங்கிணைத்துள்ளார். இது ஒரு குழு முயற்சியே. அவர்கள் என்னை அழகாகத் திரையில் காண்பித்துள்ளார்கள்.
இந்தி, தமிழ்த் திரையுலகில் என்ன வித்தியாசங்களைப் பார்க்கிறீர்கள்?
ஒரு இடம் ஒரு படத்தைத் தீர்மானிக்காது, ஒரு இயக்குநரே தீர்மானிக்கிறார். சென்னையில் எப்படி, ஹைதராபாத்தில் எப்படி, மும்பையில் எப்படி என்றெல்லாம் பார்க்கக் கூடாது. ராஜமெளலி, மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் எப்படிப்பட்ட படத்தைத் தருகிறார்கள் என்பதே முக்கியம். ஒவ்வொருவரது வேலை முறையும் மாறும். அது அவர்களிடமிருந்து வருகிறதே தவிர அவர்கள் வாழும் பகுதியிலிருந்தோ, மொழியிலிருந்தோ வந்தது கிடையாது. இதைத்தான் நான் நம்புகிறேன்.
உங்களுடைய திரையுலக வாழ்க்கை 'சிருங்காரம்' என்ற தமிழ்ப் படத்தின் மூலம் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டுக் கும் உங்களுக்குமான பிணைப்பு பற்றி..
‘சிருங்காரம்' படத்தில் நடிக்கக் காரணம், அந்த இயக்குநர் அப்போது நடனம் தெரிந்தவர்களைத் தேடிக் கொண்டிருந்தார். அப்போது மாணவியாக இருந்தேன். இது நடந்தது 2007. நான் இரண்டு வேடங்களில் தோன்றினேன். படம் பல சர்வதேச விழாக்களில் கலந்து கொண்டது. தேசிய விருதுகளை வென்றது. ஆனால் படம் திரையரங்கில் வெளியாகவில்லை.
நீங்கள் ஒரு பரதநாட்டியக் கலைஞர். அக்கலை திரையுலக வாழ்க்கைக்கு எவ்வாறு உதவியது?
பரதநாட்டியம் கற்றதால் ஒழுக்கத்தைக் கற்றுக்கொண்டுள்ளேன். படப்பிடிப்புக்காகச் சரியான நேரத்தில் செல்வது, சீக்கிரமாக எழுந்து கொள்வது எல்லாம் முடிந்தது. வேலைசெய்து கொண்டிருப்பது, தூக்கம் பசியெல்லாம் மறந்துவிடுவேன். அது என்னைப் பாதிக்காது. இந்த வகையான ஒழுக்கம் எனது நடனத்தால் கற்றது.
கண்களிலிருந்து உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என நடனத்தில் கற்போம். அதுவும் எனக்கு நடிப்பில் உதவியது. ஒரு கதாபாத்திரத்தின் தன்மையைப் புரிந்துகொள்ள முடியும். இயக்குநரின் பார்வை என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. மிச்சத்தை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
சினிமா, கலை தவிர்த்து அதிதி யார்?
தெரியவில்லை. கலை இல்லாமல் எப்படி இருப்பேன் என என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. நடனமும், இசையும் எனது ரத்தத்தில் இருக்கிறது. அதை என் 5 வயதிலிருந்து கற்று வருகிறேன். சினிமா அனைத்துக் கலைவடிங்களின் சரியான கலவை என நான் நினைக்கிறேன். சிறு வயதில் நான் வேண்டிய சினிமா எனக்கு இப்படிக் கிடைத்துள்ளது. எனக்கு வேறு எந்தப் பின்புலனும் கிடையாது. சினிமா என்னை அழைத்தாகவே நான் உணர்கிறேன்.