

தென் கொரியாவின் பூஸன் உட்படப் பல சர்வதேசப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்று வருகிறது 'ரேடியோ பெட்டி'. கோவா திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமாவில் கவுரவம், பாண்டிச்சேரி அரசின் சிறந்த படத்துக்கான விருது என உள்நாட்டிலும் கவனம் ஈர்த்துவரும் இப்படத்தின் இயக்குநர் ஹரி விஸ்வநாத்திடம் பேசியபோது...
‘ரேடியோ பெட்டி' படத்தின் கதையைப் பற்றி கூறுங்கள்.
இக்கதையில் பாதி உண்மை, பாதி கற்பனை. என்னுடைய தாத்தா பெரிய ரேடியோ ஒன்று வைத்திருந்தார். ரேடியோவில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் நேரத்தை வைத்து தனது அன்றாடப் பணிகளைச் செய்வார். ரேடியோவுடனான அவரது உறவு என்னை பாதித்திருந்தது.
இதற்கிடையில் ஒரு பெரியவரைச் சந்தித்தேன். அவருக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன். அவர் எதுவுமே பேசவில்லை. அப்புறமாகத்தான் அவருக்குக் காது கேட்காது என்ற விஷயமே தெரிந்தது. எதனால் இவருக்குக் காது கேட்காமல் போயிருக்கும், ஏன் இந்த நிலைக்கு வந்தார் எனக் கற்பனை செய்யத் தொடங்கினேன். ரேடியோ பெட்டி மீதான தாத்தாவின் பிணைப்பு, காது கேளாத பெரியவர் ஆகிய இரண்டு நிஜக் கதாபாத்திரங்களையும் ஒன்றாக இணைந்து எழுதியதுதான் 'ரேடியோ பெட்டி’யின் திரைக்கதை.
கட்டிடப் பொறியாளராக இருந்துகொண்டு சினிமா இயக்க வேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்?
பிடிக்காத ஒரு விஷயத்தைச் செய்வதில் உடன்பாடு இல்லாமல் இருந்தது. சிறு வயதிலிருந்தே வரைவது ரொம்பப் பிடிக்கும். சினிமா ஆர்வம் என்று வந்தவுடன்தான் அதற்கான தேடல் தொடங்கியது. அப்பா பெயர் விஸ்வநாதன், மேடை நாடக நடிகர். அதனால் சிறு வயதிலிருந்து மேடை நாடகங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். சில நாடகங்களை அவரே இயக்கினார், அதில் தயாரிப்புப் பணிகளையும் பார்த்திருக்கிறேன். அந்தத் தாக்கத்தினால்தான் சினிமாவுக்கு வந்தேன்.
நாடக அனுபவத்தை வைத்துக்கொண்டு சினிமா இயக்கத்தை எப்படிக் கையாண்டீர்கள்?
முதலில் ‘இடுக்கண்' என்ற குறும்படம் இயக்கினேன். அதன் மூலம் அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொண்டேன். ஒரு காட்சியைப் பிரிப்பது, காட்சிப்படுத்தல் என அனைத்துமே நானாகக் கற்றுக் கொண்டதுதான். இப்போதும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், ஒரு குறும்படத்தில் செய்த விஷயங்களை முழுநீளத் திரைப்படத்தில் செய்வது கடினம். அப்படிப்பட்ட கஷ்டங்கள் இருந்தாலும் சினிமா மீது ஆர்வம் அதிகமாக இருந்ததால் பெரிதாகத் தெரியவில்லை.
நடிகர்கள் புதியவர்கள். ஆனால் தேர்ச்சிமிக்க தொழில்நுட்பக் கலைஞர்களை பயன்படுத்தியிருக்கிறீர்களே?
படத்தை விளம்பரப்படுத்த எங்களிடம் பணமில்லை. நிறைய திரைப்பட விழாக்களில் பங்குபெற வைத்தால், அதுவுமே விளம்பரமாக அமையும் என நம்பினோம். எவ்வளவு நாள்தான் வெளிநாட்டுப் படங்களைப் பார்த்து நாம் சிலாகிப்பது, ஒரு மாற்றமாக நமது படங்களை அவர்கள் பார்க்கட்டுமே என்று நினைத்துப் படத்தின் தரத்தில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்றுதான் சுரேஷ் செல்வராஜன், தபஸ் நாயக், சேது, ரிச்சர்ட் ஃபோர்டு, சரவணன் நடராஜன் உள்ளிட்ட பலரையும் ஒப்பந்தம் செய்தேன். யாரையும் எனக்குத் தெரியாது. கதையைச் சொன்னவுடன் எங்களால் முடிந்த உதவிகளைச் செய்கிறோம் என்று உதவ முன்வந்தார்கள்.
நல்ல வேலை; கை நிறைய ஊதியம் என்று இருந்தவர் திடீரென்று இயக்குநராகப் போகிறேன் என்றவுடன் வீட்டில் என்ன சொன்னார்கள்?
முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. மேடை நடிகரான என் அப்பாவுக்கு, சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. அதைச் சொல்லிப் புரியவைத்து, இயக்குநராக வருவேன் என்று நம்பிக்கை அளித்தேன். ஒரு படம் இயக்குகிறேன், சரியாக அமையவில்லை என்றால் நீங்கள் சொல்வதைக் கேட்கிறேன் எனக் கூறிவிட்டு வந்தேன். இப்போதும் நான் ஜெயித்துவிடவில்லை. ‘ரேடியோ பெட்டி' பார்த்துவிட்டு “பையன் ஒழுங்காகக் கதை சொல்லியிருக்கிறான்” என்று அப்பா நினைத்திருக்கலாம். அவரது அனுபவம் மிகப் பெரியது. அதுவே எனக்கு மிகப் பெரிய பலம்.
உங்களது அடுத்த படமும் திரைப்பட விழாவுக்கான முயற்சியாகத்தான் இருக்குமா?
இந்தக் கதைக்குப் பாடல் தேவையில்லை என முடிவு செய்தோம். அதனால் பாடல்கள் இல்லை. அடுத்து த்ரில்லர் கதை ஒன்றை எழுதி முடித்துள்ளேன். அதில் கமர்ஷியலாகச் சில விஷயங்களை வைத்துள்ளேன். நல்ல படம் என்று சொல்லக்கூடிய வகையிலும் இருக்கும். நான் இயக்கவுள்ள படங்களில் மசாலாத்தனம், சினிமாத்தனம் இப்படிச் சில விஷயங்களை மட்டும் தவிர்த்துவிட முடிவு செய்துள்ளேன். கதை முடிவாகி, தயாரிப்பாளர் தேடல் தொடங்கியுள்ளது. அக்கதை நாயகியை முன்வைத்துத்தான் இருக்கும். யார் நடிப்பார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
ஹரி விஸ்வநாத்