ஜன்னல் ஓரம் - தி இந்து விமர்சனம்

ஜன்னல் ஓரம் - தி இந்து விமர்சனம்
Updated on
2 min read

மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘ஆர்டினரி’ என்ற படம்தான் கரு. பழனியப் பனால் தமிழில் மறு ஆக்கம் செய்யப்பட்டிருக்கும் படம். அடிப்படையான கதையை மாற்றாமல், திரைக்கதையில் தேவையில்லாத திருத்தங்கள் செய்யாமல் மறு ஆக்கம் செய்திருக்கிறார் இயக்குனர்.

ஒரு அரசுப் பேருந்து. அதன் ஒட்டுநர் மற்றும் நடத்துநர். அதில் அடிக்கடி பயணிக்கும் பயணிகள் - இவர்கள்தான் கதை மாந்தர்கள்.

பழனியில் இருந்து காலை புறப்பட்டு, மாலையில் பண்ணைக்காடு என்ற மலையூரில் தங்கி, மறுநாள் காலை அங்கிருந்து புறப்பட்டு வரும் பேருந்து அது. இதனால் பண்ணைக்காட்டில் நடத்துநரும், ஓட்டுநரும், அணைக்கட்டு அழகுடன் இருக்கும் அந்த ஊரில் தங்கி, காலையில் கிளம்புவார்கள். இதனால் பண்ணைக்காடு ஊர் மக்களுடன் ஒட்டுநர் பார்த்திபனுக்கும், நடத்துநர் விமலுக்கும் பரிச்சயம் ஏற்படுகிறது.

அந்த ஊரில் அண்ணன் சார் என்று அழைத்து அனைவரும் மதிக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியர் ராஜேஷ். சூரத் நகரில் வேலைசெய்யும் அவரது ஒரே மகன் ஆண்டுக்கு ஒரு முறைதான் ஊருக்கு வருவான். இந்த முறை அவன் வரும்போது, தனது வீட்டிலேயே வளரும் பெற்றோரை இழந்த நண்பரின் மகள் நிர்மலாவை திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்கிறார்கள். அவனும் ஊருக்குத் திரும்புகிறான் – பிணமாக.

அண்ணன் சாரின் மகனை, பேருந்தை மோதிக் கொன்று விட்டதாக விமலையும், பார்த்திபனையும் போலீஸ் பிடித்துக் செல்கிறது. ஆனால் அண்ணன் சாரின் மகனைக் கொன்றது விமல் அல்ல என்று, அவரே ஜெயிலில் இருந்து பெயிலில் வந்து பார்த்திபன் உதவியுடன் நிரூப்பிப்பதுதான் கதை. அப்படியானால் கொலையாளி? அதுதான் ஜன்னல் ஓரத்தின் மர்ம முடிச்சு!

போக்குவரத்துக் கழகத்தில் வேலைக்குச் சேருவதில் ஆரம்பித்து, பண்ணைக்காடு பெண் மனிஷா யாதவைக் காதலிப்பதுவரை, தனக்கே உரிய முத்திரையுடன் சுப்பையா கதாபாத்திரத்தில் விமல் வசீகரிக்கிறார். தான் குற்றவாளி அல்ல என்று நிரூபிக்க, பார்த்தீபனுடன் சேர்ந்து போராடும் காட்சிகள், விமல் நடிப்பில் ஒரு படி தேறியிருப்பதைக் காட்டுகின்றன.

நம்ம பார்த்தீபனா இது என்று மூக்கில் விரல் வைக்கிறமாதிரி வெளுத்துக் கட்டியிருக்கிறார். குசும்பும் திமிரும் கலந்த பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார்.

பளிச்சென்று ரசிகர்களை அள்ளிக்கொள்கிறார் விதார்த். பண்ணைக்காடு ஊரின் பெண்ணாக கல்யாணியும், காதலனுக்காக கல்யாணக் கனவுகளுடன் காத்திருக்கும் நிர்மலாவாகப் பூர்ணாவும் குறை வைக்காமல் நடித்திருக்கிறார்கள்.

இயற்கையின் ஆட்சி நிறைந்த கதைக்களத்துக்கு ரசிகர்களை அழைத்துப் போன மாதிரி உணரவைத்து விடுகிறது அர்பிந்து சாரவின் ஒளிப்பதிவு. மலையாளம், தமிழ், இரண்டுக்குமே இசை வித்யாசாகர். தமிழுக்குக் கொஞ்சம் வணிகத் தன்மை கொண்ட உணர்ச்சியை இசையில் ஊட்டியிருக்கிறார்.

தெளிந்த நீரோடைபோன்ற எளிய காதல் கதையாக ஆரம்பித்து கிரைம் த்ரில்லராக முடியும் இந்தக் கதையில் குத்துப்பாடல் அவசியமில்லாத திணிப்பு. பழனியப்பன், மையக் கதையை விட்டு விலகாமல் இயக்கியிருக்கிறார். திரைக் கதையின் எளிமையான கட்டமைப்பும், மலைப்பயணத்தில் எதிர்படும் சின்னச் சின்னத் திருப்பங்கள் போன்ற கதைத் திருப்பங்களும் பயணத்தைச் சுவையாக்குகின்றன.

படத்தில் காட்டப்படும் கிராமம் உண்மையான கிராமத்தின் அடையாளங்களை அவ்வளவாகக் கொண்டிருக்கவில்லை. பல விதங்களிலும் இன்னும் வளர்ச்சி பெறாமல் இருக்கும் கிராமத்தில் எல்லா விஷயங்களையும் சர்வ சாதாரணமாக ஏற்றுக்கொள்வது நம்பும்படி இல்லை. நிர்மலாவைத் தன் வீட்டில் வைத்து அண்ணன் சார் ஏன் வளர்க்கிறார் என்பதற்கும் திரைக்கதையில் பதில் இல்லை. பல திருப்பங்கள் வருகின்றன. ஆனால் எதுவும் பார்வையாளருக்குள் பரபரப்பு ஏற்படுத்தவில்லை.

இந்து டாக்கீஸ் மதிப்பீடு

ஜன்னல் ஓரம், பரபரப்பற்ற பயணம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in