

கவிஞர், ஆவணப்பட இயக்குநர், சமுகச் செயல்பாட்டாளர் எனப் பல தளங்களில் செயல்பட்டுவரும் குட்டி ரேவதி, இயக்குநர் பரத்பாலாவிடம் ‘மரியான்’ படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். அந்தப் படத்தில் ‘நெஞ்சே எழு’ என்ற பாடலையும் எழுதியிருந்தார். அவரது பயோ டேட்டாவில் இப்போது புதிதாக ஒரு அம்சம் சேருகிறது. திரைப்பட இயக்கத்திலும் அவர் கால் பதிக்கிறார். இன்னும் தலைப்பு சூட்டப்படாத இந்தப் படத்தில் ‘அழகி’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘நீர்ப்பறவை’ படங்களின் மூலம் தமிழில் புகழ்பெற்ற நந்திதா தாஸ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற பேச்சு அடிபட்டாலும் நந்திதா தாஸ் இதை மறுத்திருக்கிறார். இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறாராம்.
கேரளத்தில் வரலட்சுமி!
சமீபத்தில் வரலட்சுமியுடன் எடுத்துக்கொண்ட செல்பி படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் விஷால். ‘இந்தப் படம் எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்லும்’ என்று ஒரு கமெண்டும் கொடுத்திருந்தார். இது பல யூகங்களைக் கிளப்பிவிட, வரலட்சுமியோ இன்னொரு பக்கம் பரபரப்பாக இருக்கிறார். கன்னட சினிமாவில் கடந்த ஆண்டு கால் பதித்த வரலட்சுமி, அங்கே ‘நான் ஈ’ வில்லன் சுதீப் ஜோடியாக நடித்த ‘மாணிக்கையா’ மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது. தற்போது மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக ‘கசபா’ என்ற படத்தில் அறிமுகமாகிறார். இன்று வெளியாகும் இந்தப் படத்தில் ஒரு குற்றச் சம்பவத்தின் நேரடி சாட்சியாக மிக வலுவான பாத்திரத்தில் நடித்திருக்கிறாராம்.
சாந்தினியின் சந்தோஷம்
ஒரே சமயத்தில் பத்துப் படங்கள் என்றால் சும்மாவா? கே.பாக்யராஜின் இயக்கத்தில் ‘சித்து +2’ படத்தின் மூலம் அறிமுகமான சாந்தினிக்குதான் அந்த அதிருஷ்டம் அடித்திருக்கிறது. ‘வில் அம்பு’ படத்தில் சாலையோரத்தில் தள்ளு வண்டியில் இட்லிக் கடை நடத்தும் பெண்ணாக மிக இயல்பாக நடித்துப் பாராட்டுகளைப் பெற்றார். இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கப் பல கதாநாயகிகள் மறுத்த நிலையில் சாந்தினி நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு பூபதி பாண்டியன் இயக்கத்தில், விமல் ஜோடியாக ‘மன்னர் வகையறா’, சிபிராஜுடன் ‘கட்டப்பாவை காணோம்’, பரத்துடன் ‘என்னோடு விளையாடு’, ‘வெப்பம்’ படத்தை இயக்கிய அஞ்சனாவின் இயக்கத்தில் ‘பல்லாண்டு வாழ்க’, நடன இயக்குநர் கௌதம் இயக்கத்தில் ‘கண்ணுல காச காட்டப்பா’, இயக்குநர், நடிகர் அமீரின் தயாரிப்பில் உருவாகிவரும் ‘டாலர் தேசம்’ உட்பட பத்துப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறாராம். எல்லாமே நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் பாத்திரங்கள் என்று சொல்லி சந்தோஷத்தில் திளைக்கிறார் சாந்தினி.
வரலாறும் விறுவிறுப்பும்
எஸ்.எஸ். ராஜமவுலியின் ‘பாகுபலி’ சீனாவில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது. ஆனால் ‘பாகுபலி’ வராற்றுக் களத்தில் உருவான கற்பனைக் கதை. தமிழில் வரலாறு மிக அபூர்வமாகவே கையாளப்படுகிறது. ‘தகடு’அந்தக் குறையைப் போக்கும் என்கிறார்கள். அறிமுக நடிகர்களை வைத்து அறிமுக இயக்குநர் எம்.தங்கதுரை இயக்கிவரும் இந்தப் படம் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட கதையாம். பிரபா, அஜய் கதாநாயகர்கள். ‘அம்புலி’ ‘சவாரி’ படங்களின் மூலம் கவனிக்க வைத்த சனம் ஷெட்டி கதாநாயகி.
“தனது பேராசையால் உலகையே அடைய நினைத்த பல மன்னர்களின் கதை உண்டு. ஆனால் பேராசை கொண்ட மன்னர்கள்தான் மண்ணோடு மண்ணாகப் போனார்களே ஒழிய, இன்றுவரை அந்தப் பேராசை என்னும் பெரும் பேய் ஏதோ ஒரு வடிவில் அழியாமல் உலாவிக் கொண்டுதான் இருக்கிறது. அப்படி பேராசை கொண்ட ஒருவனோடு பயணிக்கும் கல்லூரி மாணவர்களின் அசாத்தியமான வரலாற்றுப் பயணம்தான் இந்தத் தகடு. கொஞ்சம் வரலாறும் நிறைய விறுவிறுப்பும் கொண்ட திரைக்கதையுடன் களமிறங்கியிருக்கிறோம்” என்கிறார் இயக்குநர் தங்கதுரை.