

எம்.கே. தியாகராஜ பாகவதரின் நாடகம் அது. அர்ஜுனனாக எம்.கே.டி. நடித்துக்கொண்டிருக்கிறார். பவளக்கொடி வேடம் ஏற்றிருந்த நடிகை அவரை விஞ்சும் அளவுக்குத் தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
மைக் இல்லாத காலகட்டத்திலும் அரங்கின் கடைக்கோடி ரசிகனுக்கும் கேட்கும்படி அதே சமயத்தில் தெளிவான உச்சரிப்புடன் அந்த நடிகை வசனங்களை உச்சரித்துக்கொண்டிருக்கிறார். அவர்தான் எஸ்.டி. சுப்புலட்சுமி.
1918ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டத்தில் துரைசாமி பிள்ளை - ஜானகி அம்மாளுக்கு ஒரே மகளாகப் பிறந்தவர். சிறுவயதிலேயே பாட்டின் ஆர்வம் மீது ஆர்வம் கொண்டவராக இருந்ததார். இந்தக் கலை ஆர்வம் அவருக்குச் சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கும் என அவரது பெற்றோர் நினைத்தார்கள். எனவே அவருக்குக் கர்நாடக சங்கீதம், நடனம், நடிப்பு கற்றுக்கொடுப்பதற்காக மதுரைக்குக் குடிபெயர்ந்தார்கள். அவருடைய தந்தை எஸ்.டி.எஸ்.ஸின் புகைப்படங்களை வைத்து மதுரையில் உள்ள நாடகக் கம்பெனிகளில் வாய்ப்புத் தேடியுள்ளார். விரைவிலேயே வாய்ப்புக் கிடைத்தது.
எஸ்.டி.எஸ். நாடகங்களில் பிரதான வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். எம்.கே. தியாகராஜ பாகவதருடன் ஜோடியாக நடிக்கும் நிலைக்கு உயர்ந்தார். இந்த ஜோடி எஸ்.ஜி. கிட்டப்பா -கே.பி. சுந்தராம்பாள் போன்ற நட்சத்திர அந்தஸ்துள்ள ஜோடிஇல்லாமல்போனதால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியது எனலாம். காரைக்குடியில் எம்.கே.டி., எஸ்.டி.எஸ். இருவரும் இணைந்து நடித்த பவளக்கொடி நாடகம் நிகழ்த்தப்பட்டபோது அதைக் காண சினிமா தயாரிப்பாளர்கள் அழகப்பா செட்டியரும் லக்ஷ்மணன் செட்டியாரும் வந்திருந்தனர். இவர்கள் இருவருடன் ராஜா சாண்டோவிடம் சினிமா பயின்றிருந்த கே. சுப்ரமண்யமும் வந்திருந்தார். இந்நிகழ்ச்சி எம்.கே.டி., எஸ்.டி.எஸ்., கே. சுப்ரமண்யம் மூவருக்கும் முதல் பட வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. 1934இல் வெளிவந்த இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது. இந்தப் படத்திற்காக எஸ்.டி.எஸ்.ஸுக்கு 2 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது. இதில் ஒரு பாதிதான் எம்.கே.டி.க்கு. கே. சுப்ரமண்யத்துக்கோ வெறும் 700தான் சம்பளம்.
கே. சுப்ரமண்யம் நவீன சாரங்கதாரா என்னும் படத்தை அதே வெற்றிக் கூட்டணியுடன் தொடங்கினார். இந்தப் படமும் பெரும் வெற்றியைத் தேடித் தந்த்து. இந்த வெற்றிக்குப் பிறகு எஸ்.டி. சுப்புலட்சுமி, கே. சுப்ரமண்யத்தின் வாழ்க்கைத் துணை ஆனார். பக்த குசேலாவில் இரு வேடங்களில் நடித்ததன் மூலம் இரு வேடங்களில் நடித்த முதல் நடிகை என்னும் பெயரும் பெற்றார். பால யோகினி, தியாகபூமி போன்ற புரட்சிக் கருத்துள்ள சமூகப் படங்களில் துணிச்சலுடன் நடித்தார்.
கே. சுப்ரமண்யம் - எஸ்.டி.எஸ். தம்பதியர் பிற்காலத்தில் பொருளாதார ரீதியில் மிகவும் சிரமப்பட்டனர். 1950களில் நடுவில் எஸ்.டி.எஸ். மீண்டும் மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். அப்போது எம்.கே.டி.யும் பட வாய்ப்புகளை இழந்திருந்தார். எம்.கே.டி., எஸ்.டி.எஸ் ஜோடி இணைந்து பவளக்கொடி, வள்ளி திருமணம், ஹரிதாஸ் போன்ற நாடகங்களில் நடித்தனர். அவர்களது நாடகங்களில் இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் ஆர்மோனியம் வாசித்தார்.
எஸ்.டி.எஸ். பின்னாட்களில் கல்யாணப் பரிசு, பட்டணத்தில் பூதம், எங்கிருந்தோ வந்தாள் போன்ற படங்களில் அம்மா வேடம் ஏற்று நடித்துள்ளார். தன் கடைசிக் காலத்தில் கதாகலாட்சேபம் செய்துவந்தார். எஸ்.டி. சுப்புலட்சுமி, கே.சுப்ரமண்யம் இறந்து 16 ஆண்டுகளுக்குப் பிறகு 1987ஆம் ஆண்டு இறந்தார். இசைக் கச்சேரிகள் நடத்திவரும் அபஸ்வரம் ராம்ஜி இத்தம்பதியரின் ஒரே மகன். கலைப் பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
(தமிழில்: ஜெய்)