

தமிழில் ஏன் உலகத் தரமான, கலைத்தரமான படங்களை எடுப்பதில்லை என விமர்சகர்கள் யாரும் தமிழ்த் திரையுலகினரைப் பார்த்துக் கேட்பதில்லை. உங்களால் ஏன் பார்வையாளர்களின் ரசனையை இழிவுபடுத்தாத வகையில் படம் எடுக்க முடியவில்லை என்றுதான் கேட்கிறார்கள். குறைந்தபட்ச நேர்மை, புத்திசாலித்தனம், பக்குவம், நம்பகத்தன்மை, நேர்த்தி, ரசனை ஆகியவற்றுடன் படம் எடுக்க முடியாதா என்று கேட்கிறார்கள். ரசிகர்கள் மீது பழியைப் போட்டு இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் தரக்குறைவான சரக்குகளை உருவாக்குவீர்கள் என்பதுதான் தரமான திரையனுபவத்தை விரும்புபவர்களின் ஆதங்கம்.
கடந்த ஆண்டில் இத்தகைய ஆதங்கத்தை ஏற்படுத்தாமல் ஆறுதல் தந்த படங்கள் என்று பார்த்தால் மிகச் சில படங்களே தேறும். ‘அழகு குட்டிச் செல்லம் ', ‘இறுதிச்சுற்று', ‘விசாரணை', ‘உறியடி', ‘குற்றமே தண்டனை', ‘இறைவி', ‘ஒரு நாள் கூத்து', ‘அப்பா', ‘கபாலி', ‘தர்மதுரை', ‘மெட்ரோ', ‘௨௪', ‘கோ ௨', ‘மனிதன்', ‘தோழா', ‘காதலும் கடந்து போகும்', ‘ஆண்டவன் கட்டளை', ‘ஜோக்கர், மாவீரன் கிட்டு', ‘துருவங்கள் பதினாறு' ஆகிய படங்களை இப்படி அடையாளப்படுத்தலாம்.
தரத்தின் மீதான ஆர்வம்
இது சலுகைகள் தவிர்த்த கறாரான பட்டியல் அல்ல. கறாரான பட்டியல் என்று போட்டால் ஐந்து படங்களுக்கு மேல் தேறாது. படங்கள் வணிகச் சட்டகத்துக்குள் தரமான திரை அனுபவத்தைத் தர நேர்மையாக முயன்ற படங்கள். ஒட்டுமொத்தமாகச் சிறந்த படமாக அமையாவிட்டாலும் பல அம்சங்களில் பாராட்டத்தக்கவை. எடுத்துக்கொண்ட விஷயம், சொல்லப் பட்ட முறை, சமரசங்களைக் குறைத்து யதார்த்தத்துக்கு நெருக்கமாக இருப்பதற்கான மெனெக்கெடல், தரத்தின் மீதான ஆர்வம் ஆகிய அம்சங்களில் சிலவேனும் இந்தப் படங்களில் இருக்கின்றன.
முழுமையற்ற முயற்சிகள்
தாரை தப்பட்டை, மாலை நேரத்து மயக்கம் ஆகிய படங்கள் தேர்ந்து கொண்ட களங்கள் சிறப்பான திரை அனுபவத்தைத் தரக்கூடியவை. ஆனால் இதன் இயக்குநர்கள் அவற்றைக் கையாண்ட விதம் படைப்பூக்கமற்று இருந்ததால் இந்தப் படங்கள் பரிதாபமாகச் சரிந்தன. அறிமுக இயக்குநர் சார்லஸின் அழகு குட்டிச் செல்லம் படம் மனிதர்களின் நல்லுணர்வுகளை அழகாகப் பிரதிபலித்தது. ஆனால், கதைப் போக்கில் யதார்த்தத்தைக் காட்டிலும் வண்ணமயமான கனவுகளுக்கே அதிக முக்கியத்துவம் இருந்தது.
அப்பா, அச்சமின்றி ஆகிய படங்கள் சமூக அக்கறையை மையமாகக் கொண்ட வகையில் கவனம் ஈர்த்தன. சமூகச் சீர்கேடுகளைத் தோலுரித்துக் காட்டுவதும், தவறான கண்ணோட்டங்களைச் சுட்டிக்காட்டுவதும் அவசியம்தான். ஆனால், திரைப்படம் என்னும் ஊடகத்தின் தன்மைக்கேற்ப அதைச் செய்ய வேண்டும். மேடைப் பேச்சு, விவாத அரங்கம், புத்தகம் ஆகியவற்றால் சாதிக்கக்கூடியதையே சாதிக்கத் திரைப்படம் என்னும் ஊடகம் எதற்கு? பல்வேறு கலைகளைத் தன்னுள் அடக்கிய திரைப்படம் என்னும் ஊடகத்தின் ஆற்றல் அளப்பரியது. அதன் மூலம் கடத்தப்படக்கூடிய செய்தியும் மிகுந்த ஆற்றலுடன் வெளிப்படக்கூடியது. சமூக உணர்வுடன் படமெடுப்பவர்கள் இதை உணர்ந்து எடுக்கும்போது அவர்களுடைய நோக்கம் இன்னும் செழுமையாக வெளிப்படும்.
குவிமையம் இல்லாமை
இறைவி, கபாலி, ஒரு நாள் கூத்து, தர்மதுரை ஆகிய படங்கள் வணிகச் சட்டகத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட காத்திரமான முயற்சிகள். இறைவியின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அழுத்தமான கதாபாத்திரங்களை உருவாக்கி வாழ்வின் மாறுபட்ட பக்கங்களைக் காட்சிப்படுத்தியிருந்தார். ஆண்களால் கட்டமைக்கப்படும் குடும்ப, சமூகச் சூழலில் பெண்களின் நிலை குறித்த நுட்பமும் அழுத்தமும் கொண்ட பதிவுகள் இருந்தன. ஆனால், அந்த அழுத்தம் சமநிலை குலைந்திருந்ததும் கதைப் போக்கிலும் பாத்திர வார்ப்புகளில் இருந்த செயற்கையான அழுத்தங்களும் ‘நல்ல’ படங்களுக்கே உரிய வழக்கமான படிமங்களும் படத்தின் வலிமையைக் குறித்துவிட்டன.
பா.இரஞ்சித்தின் கபாலி, மலேசியாவில் தமிழர்களின் வாழ்வை வரலாற்றுணர்வோடு சொல்ல முயன்றது. ரஜினிகாந்த் என்னும் மாபெரும் நட்சத்திரத்தின் இருப்பையும் மீறி, கதைக்கு விசுவாசமாக இருக்கும் முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றது. ரஜினியின் திரை ஆளுமையை மாற்றிக் காட்டுவதில் வெற்றிபெற்ற இரஞ்சித், தன் கதையை வலுவாகச் சொல்வதற்கான சவாலில் அந்த அளவுக்கு வெற்றிபெறவில்லை.
ஒரு நாள் கூத்து, பெண்களின் வாழ்நிலையை மையப்படுத்திய விதம் பாராட்டத்தக்கதாக இருந்தது. மூன்று வெவ்வேறு கதைகளை இணைத்துத் தந்த விதம் ஒரு முழுமையான திரைப்படத்துக்கான அனுபவத்தைத் தரத் தவறிவிட்டது.
சீனு ராமசாமியின் தர்மதுரை, தொழிலில் சமூக நோக்கு, குடும்ப உறவுகள், பெண்களின் சுயமரியாதை முதலானவற்றை மையமாகக் கொண்ட படம். குவிமையம் இல்லாமல் சிதறிப்போன முயற்சி என்றாலும் பாத்திர வார்ப்பு, காட்சியமைப்பு, நடிப்பு ஆகியவற்றின் மூலம் கவனத்துக்குரியதாக அமைந்தது.
மறுஆக்கங்களும் தவறிய இலக்கும்
காதலும் கடந்து போகும், மனிதன், தோழா ஆகியவற்றை நேர்த்தியான மறு ஆக்கப்படங்களாக அடையாளப்படுத்தலாம். நலன் குமாரசாமியின் கா.க.போ., மாறுபட்ட வாழ்நிலைகளையும் மனித உறவுகளையும் நுண்ணுணர்வோடு சித்தரித்தது. வசதியும் அதிகாரமும் எளியவர்கள் மீது செலுத்தும் வன்முறையின் கோர முகத்தை அம்பலப்படுத்தியது அகமது இயக்கிய மனிதன். மனிதர்களுக்கிடையில் உள்ள எல்லா விதமான வித்தியாசங்களையும் கடக்கக்கூடிய ஆற்றல் தூய்மையான அன்புக்கு உண்டு என்பதைக் காட்டியது தோழா.
அறிமுக இயக்குநர் விஜயகுமாரின் உறியடி வலுவான காட்சி மொழியாலும் யதார்த்தமான அணுகுமுறையாலும் கவனத்தை ஈர்த்தது. உணர்ச்சி வேகத்தை மிக வலுவாகச் சித்தரித்ததாலும் படத்தின் இலக்கு என்ன என்பதில் வெளிப்பட்ட தெளிவின்மை படத்தை பலவீனப்படுத்தியது.
யதார்த்தமும் கலகலப்பும்
இயக்குநர் மணிகண்டனின் குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகியவை வெவ்வேறு விதங்களில் கவனத்துக்குரியவை. குற்ற உணர்வின் தீராச் சுமையையும் வெவ்வேறு சூழல்களில் மனிதர்கள் வெவ்வேறு வடிவம் எடுக்கும் யதார்த்தத்தையும் குற்றமே தண்டனை வலுவாகச் சித்தரித்திருந்தது. குற்ற உணர்வை நன்கு கையாண்ட இந்தப் படம், குற்றத்திற்கும் தண்டனைக்குமான உறவைக் கையாள்வதில் ஏற்பட்ட பிசிறு காரணமாகத் தனக்கான உயரத்தை எட்டத் தவறிவிட்டது.
நேர் வழிதான் இருப்பதிலேயே எளிதான வழி என்னும் உண்மையை யதார்த்தமும் கலகலப்புமாய்ச் சொன்ன ஆண்டவன் கட்டளை அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்தது. பாத்திரங்கள், வசனங்கள், யதார்த்தமான காட்சிகள், நடிப்பு ஆகியவற்றால் இந்தப் படம் முக்கியத்துவம் பெறுகிறது.
புதிய இயக்குநர் கார்த்திக் நரேனின் துருவங்கள் பதினாறு, நேர்த்தியும் பக்குவமும் மிக்க திரை மொழியால் வியக்கவைத்தது. வலுவான கதை, கச்சிதமான திரைக்கதை, நேர்த்தியான படமாக்கம் ஆகியவை கொண்ட இந்தப் படம் தமிழின் சிறந்த புலனாய்வுப் படங்களில் ஒன்றாக விளங்குகிறது.
சாதி, சமூக அமைப்பு, அதிகார மையம்
சுசீந்திரனின் மாவீரன் கிட்டு இன்றளவும் தொடரும் சாதிப் பாகுபாடு என்னும் இழிவை வீரியத்துடன் சித்தரித்தது. ஒடுக்கப்பட்ட பிரிவினரின் துயரங்களை மட்டுமின்றி, அவர்களுடைய வன்முறை தவிர்த்த போராட்டத்தையும் காட்சிப்படுத்தியது. இரண்டாம் பாதியில் ஏற்பட்ட சில சறுக்கல்களால் படத்தின் தாக்கம் வலுவிழந்தது.
மிகையான நாயக பிம்பங்களை முன்னிறுத்தி, மெய்யான பிரச்சினைகளை நீர்த்துப்போக வைக்கும் மசாலாக் குவியல்களுக்கு மத்தியில் நிஜமான, யதார்த்தமான நாயகனை முன்வைத்த ராஜு முருகனின் ஜோக்கர் கவனம் பெற்றது. இன்றைய சூழலில் சாமானியர்கள் அதிகாரத்தை எதிர்த்து நிற்பதிலுள்ள அபத்தத்தை வலுவாகச் சித்தரித்த முக்கியமான அரசியல் படம் இது.
அமைப்பினால் ஓரங்கட்டப்பட்ட ஒரு பயிற்சியாளர் ஒரு சாதனையாளரை உருவாக்கும் கதையை விறுவிறுப்பாகச் சொன்னது சுதா கோங்ராவின் இறுதிச் சுற்று. ஆடுகளத்தின் சவால்களினூடே தனிப்பட்ட ஆளுமைகள் சார்ந்த உணர்வு நுட்பங்களை இணைத்து சுவையான திரைப்பட அனுபவத்தைச் சாத்தியப்படுத்தினார் இயக்குநர் சுதா கோங்ரா. நுட்பமும் நேர்த்தியும் கொண்ட பொழுதுபோக்குப் படத்தை எடுப்பது சாத்தியம்தான் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
அதிகாரத்தின் ஈவிரக்கமற்ற முகத்தையும் வழிமுறைகளையும் உறையவைக்கும் யதார்த்தச் சித்திரங்களாகக் காட்சிப்படுத்திய வெற்றி மாறனின் விசாரணையை இந்த ஆண்டின் சிறந்த முயற்சியாக அடையாளம் காட்டலாம். அதிகாரத்தின் அபாயகரமான சதுரங்க ஆட்டத்தில் யார் வேண்டுமானாலும் பலியாக்கப்படுவார்கள் என்பதை வீரியத்துடன் பதிவுசெய்த படம் இது. அதிகாரத்தின் இயங்குமுறையின் வீச்சையும் அதன் உள்நுட்பங்களையும் துல்லியமாகக் காட்சிப்படுத்திய இந்தப் படம் நீர்த்துப்போன அணுகுமுறையையும் சமரசங்களையும் தவிர்த்திருந்தது. தீவிரமான பிரச்சினையை அதன் தீவிரம் குன்றாமல் வலுவாகச் சித்தரித்த விசாரணை அண்மையில் வெளியான படங்களில் தனித்து நிற்கிறது. இது பரவலான அளவில் மக்களால் வரவேற்கப்பட்டதைத் தீவிரமான முயற்சியில் ஈடுபட விரும்புபவர்களுக்கான நல்ல செய்தியாகக் கொள்ளலாம்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், வணிகரீதியான விலங்குகள் என்னும் மாயையைச் சிதற அடித்து, தமிழ்ப் படங்களைத் தரம் சார்ந்து அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லக்கூடிய முயற்சிகள் கடந்த ஆண்டில் மிகவும் சொற்பமாகவே இருந்தன. 2017-ம் ஆண்டிலாவது இந்த முயற்சிகள் அதிகரிக்குமா? படைப்பாளிகள்தான் பதில் சொல்ல வேண்டும்.