

இந்தியப் பண்பாட்டுக் கூறுகளுடன் ஓரளவுக்குப் பொருந்தும் விதத்தில் அமைந்தவை விக்டோரியா கால நாவல்கள். தாமஸ் ஹார்டி எழுதிய ‘Tess of the d' Urber villes’ என்ற நாவல் அத்தகு கதை அம்சம் கொண்டது. தியாக உணர்வு மிக்க பெண்கள் அடையும் துயரங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட அந்த நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ‘துல்ஹன் ஏக் ராத் கீ (மனைவி ஒரு இரவுக்கு மட்டும்)’ என்ற இந்தித் திரைப்படத்தின் கதை இப்படிப் போகிறது:
நற்குணம் கொண்ட ஒரு வாலிபனின் ஏழைக் காதலி, அவன் வெளியூர் சென்ற தருணத்தில் வேலைக்குச் செல்கிறாள். அங்கே செல்வந்தரின் மகனால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறாள். இதனால் ஏற்படும் குற்ற உணர்ச்சியில் அவள் காதலனை விட்டு விலகிச் செல்கிறாள். பின்னர் தன் காதலனைக் காப்பாற்ற, தன்னை வல்லுறவுசெய்த கயவனைக் கொலை செய்கிறாள். சிறைக்குச் செல்லும் முன்பு ஓர் இரவு மட்டும் தன் காதலனின் மனைவியாக வாழ்கிறாள். இதுதான் படத்தின் கதை.
இந்தப் படம் வெளிவந்த சமயத்தில் வெற்றி அடையவில்லை. ஆனால், வித்தியாசமான திருப்பங்களுடன் கூடிய அதன் கதை அம்சத்துக்காகவும், காலத்தால் அழியாத, சிறந்த பாடல்களுக்காகவும் விமர்சகர்கள் மெச்சும் திரைப்படங்களில் ஒன்றாக இன்றும் போற்றப்படுகிறது.
துயர உணர்வையும் காதல் உணர்வையும் மிகச் சிறப்பாக நடிகர் தர்மேந்திரா, தன் உடல் மொழி மூலம் வெளிக்கொணர்ந்திருப்பார். பெரிய கவனம் கிடைக்காமல் போய்விட்ட ரஹ்மான், சிறந்த வில்லனாகப் பரிமளித்திருக்கிறார். எளிமையான, அதே சமயம் ஆழமான பொருள் தரும் வகையில் மெஹதி அலி கான் பாடல் எழுதியிருப்பார். மதன்மோஹன் இசையும் மிகச் சிறப்பாக இருக்கும். ஆனால் இத்தனை அம்சங்கள் இருந்தும் இப்படம் தோல்வி அடைந்தது. எல்லா இந்திப் படங்களும் வண்ணப் படங்களாகவே வரத் தொடங்கிய அச்சமயத்தில் கறுப்பு வெள்ளைப் படமாக வெளிவந்ததே இதன் தோல்விக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
இப்படத்தின் மூன்று பாடல்கள் மிகச் சிறப்பானவை. ‘ஏக் ஹஸ்ஸின் ஷாம் கோ தில் மேரா கோகயா’ என்று தொடங்கும் முகமது ரஃபி பாடிய பாடல், மென்மையான காதல் பாடல்களைப் பாடுவதில் ரஃபிக்கு நிகராக எவரையும் கூற முடியாது என்ற கூற்றை உறுதிப்படுத்தும் வண்ணம் அமைந்த பாடல் இது. காதலன் படத்தில் உன்னி கிருஷ்ணன் பாடிய ‘என்னவளே, என்னவளே என் இதயத்தைத் தொலத்துவிட்டேன்’ என்ற பாடலை நினைபடுத்தும் விதம் அமைந்துள்ள இப்பாடலின் பொருள்:
ஒரு அழகிய மாலைப் பொழுதிடம்
என் மனதை இழந்துவிட்டேன்
என்னுடையதாக இருந்த அது
எவளுடையதாகவோ ஆகிவிட்டது இப்போது
காலத்திடம் கோரியிருந்தேன்
என் வாழ்வில் எவளாவது வந்து கால் பதிக்க வேண்டும்
வெற்றிடமாக விளங்கும் என் வாழ்க்கையில்
விளக்காக ஒளிர வேண்டும் என்று.
அவள் என் வாழ்வில் வந்தவுடன்
எழிலுடன் ஒளிவிடும் இனிதாக
என் வாழ்க்கை ஆயிற்று
என் கண்களின் பார்வையை எவளோ
கவர்ந்து சென்றுவிட்டாள் இன்று
இரவின் பனித்துளிபோல் இருக்கும் அவள் விழிகள்
கொஞ்சம் மூடியும் கொஞ்சம் திறந்தும்
கொஞ்சும் அழகைக் கண்டு
பருவ காலமே இனிதானது
ஒரு அழகிய மாலைப் பொழுதிடம்
என் மனதை இழந்துவிட்டேன்
என்னுடையதாக இருந்த அது
எவளுடையதாகவோ ஆகிவிட்டது இப்போது
இந்தப் படத்தின் ‘சப்னோ மே அகர் மேரே தும் ஆவோ தோ ஸோ ஜாவூம்’ என்று தொடங்கும் பாடல் அலி கான் பாடல்களில் வழக்கமாக இடம்பெறும் கவித்துமான பர்சீய, உருதுச் சொற்கள் கலக்காத பாடல். இந்தி மொழியில் அதிகப் புலமை இல்லாதவர்கள்கூட முழுவதுமாகப் பொருள் உணர்ந்து ரசிக்கத்தக்க அழகான மெல்லுணர்வைத் துல்லியமாக வெளிப்படுத்தும் பாடல். லதா மங்கேஷ்கரின் சிறந்த பாடல்களில் ஒன்றான இப்பாடலின் பொருள்:
என் கனவில் நீ வருவதானால் நான் உறங்குவேன்
கனவில் என் தோள்மீது மாலை
சாற்றுவதனால் உறங்குவேன்
கனவில் என் அருகில் வந்து
எப்போதாவது அமர்ந்துகொள் அன்பே
நான் அப்போது உன் நெஞ்சில்
முகம் புதைத்துக்கொள்வேன் வெட்கத்துடன்
அப்போது நீ ஒரு காதல் கீதம்
இசைத்தால் உறங்குவேன்
கழிந்த சென்ற இதுபோன்ற நினைவுகள்
அழிந்துவிடாமல் என்னை ஆட்படுத்துகின்றன
அலைகள்போல இதயத்தில்
வந்தும் சென்றும் கொண்டிருக்கும் அந்த
எண்ண அலைகளைப் போல
நீயும் வருவதானால் நான் உறங்குவேன்
இந்தப் பாடலின் தொடக்கத்தில் வரும், ‘அகர்’ என்ற உருதுச் சொல் இந்தி, மராட்டி மொழிகளிலும் வெகுவாகப் பயன்பாட்டில் இருக்கும் ஒரு வேற்றுமை உருபு (தமிழில் ஆல், ஓடு ஆகியவற்றுக்கு இணையானது). இச்சொல்லுக்குக் கலவை, பொடி, என்னும் பொருளும் உண்டு. ஊதுவத்தி ‘அகர்பத்தி’ என்று அழைக்கப்படுவது இதன் பொருட்டே. இந்தி மற்றும் பிற இந்திய இலக்கண முறைகளுக்கு மாறாக ‘ஆல்’ என்ற இந்த உருபு, ஆங்கில இலக்கண முறையை ஒட்டி (IF என்று தொடங்குவதுபோல்) வாக்கியத்தின் முதலில் வருவது இங்கு கவனிக்கத்தக்கது. உருது இலக்கண முறையின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இது திகழ்கிறது.