மாயப்பெட்டி: தாக்குப்பிடித்த ரகசியம்

மாயப்பெட்டி: தாக்குப்பிடித்த ரகசியம்
Updated on
1 min read

நடிகர் ரகுவரன் முன்பு அளித்திருந்த பேட்டியை ஆதித்யா சேனலில் மறுஒளிபரப்பு செய்தார்கள். “ ‘லவ் டுடே’ திரைப்படம் வெளியானபோது வெளியிடங்களில் தன்னைச் சந்தித்தப் பல ரசிகர்களும் ‘அதிலே நீங்க செத்துப்போனதை தாங்கவே முடியலே’ என்றபோது மகிழ்ச்சியாக இருந்தது” என்றார். ஒருபுறம் ‘ஆஹா’ திரைப்படத்தில் குணச்சித்திர வேடமும், மறுபுறம் ‘அபிமன்யு’ திரைப்படத்தில் பக்கா வில்லன் வேடமும் ஏற்றதைக் குறிப்பிட்ட ரகுவரன் “இப்படி நேரெதிரான கதாபாத்திரங்களைத் தொடர்ந்து ஏற்றதால்தான், என்னால் இவ்வளவு காலம் தமிழ் திரையுலகில் தாக்குப்பிடிக்க முடிந்தது,” என்றும் கூறினார்.

கரவொலி டானிக்!

விஜய் சூப்பர் சேனலில் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி. பாடல்களுக்கு இணையாகச் சுவைகூட்டியது நடிகர் ‘மிர்ச்சி’ சிவாவின் இணைப்புரை. “நாலு நிமிஷம் ஒரு பாட்டைப் பாடினாங்க. ஆனா நாலு செகண்டு கூட நீங்க கைதட்டலே. நீங்கல்லாம் ரொம்ப டீசன்ட் குடும்பத்தைச் சேர்ந்தவங்கன்னு புரியுது” என்றதும் கைத்தட்டல் அள்ளியது.

சகாவின் பதிலடி!

தடாலடியான பதில்கள் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் தந்தி சேனலில் தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அளித்த பேட்டியைப் பார்க்க வேண்டும். சசிகலா வெளியேற்றத்தைப் பற்றிய கேள்விக்கு “அம்மாவைப் பொறுத்தவரை எதுவுமே வெளியேற்றம் கிடையாது. நீங்குவாங்க. சேர்த்துக்குவாங்க. மேலும் பதவி கொடுத்து அழகு பார்ப்பாங்க,” என்றார். தற்போதைய முதல்வர் தன் பதவியை விட்டு நீங்க வேண்டுமா என்ற கேள்விக்கு “அவருக்கு இது ஒண்ணும் புதுசு இல்லையே. நிதியமைச்சரா இருந்தாரு, முதலமைச்சரா இருந்தாரு. மறுபடியும் நிதியமைச்சார் ஆனாரு. திரும்பவும் முதலமைச்சர் ஆனாரு. இதுவே தொடர்ந்து இப்போ மறுபடியும் நிதியமைச்சர் ஆகப்போறாரு. அவ்வளவுதானே” என்றார் வெகு அலட்சியமாக.

நெசந்தானுங்களா?

நியூஸ் 7 சேனலில் ‘அறிவுக் கொழுந்து’ என்ற நிகழ்ச்சி. ‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க’ நிகழ்ச்சியைப் போன்றது. “எலுமிச்சைக்கு ஏன் அந்தப் பெயர்?” என்ற கேள்விக்குப் பலரும் அபத்தமாகவும், நகைச்சுவையாகவும் பலவித பதில்களைக் கூறினார்கள். ஆனால், உண்மையான பதிலாக அறிவிக்கப்பட்டது – “எல் என்றால் மஞ்சள் என்று பொருள். மஞ்சள் நிறப் பழம் என்பதால் அந்தப் பெயர். எல் என்பதுதான் ஆங்கிலத்தில் Yellow என்று ஆனது” என்றார்கள். அப்படியா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in