Last Updated : 03 Jun, 2016 10:50 AM

 

Published : 03 Jun 2016 10:50 AM
Last Updated : 03 Jun 2016 10:50 AM

மலையாளக் கரையோரம்: டாக்டர் கதாநாயகி!

நடிகை சாய் பல்லவியை, இனி ‘ஹாய் பல்லவி' என்று கூப்பிட முடியாது. ‘டாக்டர் பல்லவி' என்றுதான் அழைக்க வேண்டும். பொதுவாக நடிகைகள் “படித்துக்கொண்டே நடிக்கிறேன்” என்பார்கள். என்ன படித்தார்கள் ... என்ன பாஸ் செய்தார்கள் என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.

ஆனால், நம்ம கோயம்பத்தூர் பொண்ணு சாய் பல்லவி வித்தியாசமானவர். படிக்கிறது டாக்டர் படிப்பு... அதுவும் பல ஆயிரம் கி. மீ. தூரத்தில் இருக்கும் ஜார்ஜியாவில். படிப்புக்கிடையில் படங்களில் நடிக்கவும் வேண்டும் என அனுமதி வாங்கி நடித்துக்கொண்டிருக்கிறார். மலையாளத்தில் ‘பிரேமம்' படத்துக்குக் கிடைத்த பிரம்மாண்ட வெற்றியைப் பார்த்து வேறு நடிகைகள் என்றால், ‘பாடம், படிப்பு வேண்டாம்... வேடம், நடிப்பு போதும்' என்று செட்டில் ஆகியிருப்பார்கள்.

அந்த அளவுக்கு சாய் பல்லவியை ‘மலர் டீச்சராகவே’ பார்க்க ஆரம்பித்தார்கள் மலையாள ரசிகர்கள். ஆனால், சாய் “டாக்டர் ஆவதுதான் என் முதல் லட்சியம்…” என்று படிப்பைத் தொடர்ந்ததுடன், நடுவே ‘களி’ மலையாளப் படத்தில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்து முடித்த கையுடன், மருத்துவத் தேர்விலும் வெற்றி பெற்று டிகிரியும் வாங்கிவிட்டார்.

ஆடல், பாடல், நடிப்பு என்று சக்கைப் போடு போட்டு, ரசிகர்களின் பல்ஸை எகிறச் செய்த சாய் பல்லவி, இப்போது நிஜமாகவே கை பிடித்து ‘பல்ஸ்’ பார்க்கப் போகிறார்.

“அப்போ இனி நடிப்பு அவ்ளோதானா…? ” என்ற கேள்விக்கு, “நல்ல வேடங்கள் வந்தால் விடப்போவதில்லை, நடிப்பேன்” என்று சொல்கிறார்.

“கேரளத்துக்கு வந்தால், என் அசைவு, நகர்வு ஒவ்வொன்றும் மிக அதிகமாகக் கவனிக்கப்படுகிறது. பரபரப்புச் செய்தியாகிவிடுகிறேன். ஜார்ஜியாவில் நான் நானாக இருக்கிறேன். படிக்கிறேன், நானே சமையல் செய்துகொள்கிறேன். ஜார்ஜியாவில் எல்லா வேலைகளையும் நான்தான் செய்கிறேன்” என்று தனது இன்னொரு பக்கத்தை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

சமீபத்தில், ஒரு பத்திரிகையில் சாய் பல்லவியின் படங்கள் வெளிவந்தபோது, அவரது ‘டிரேட் மார்க்'கான முகப் பருக்களைக் காணவில்லை. மேக்கப்பில் பருக்களை முற்றிலும் மறைத்துவிட்டிருந்தார்கள். பருக்கள் மாயமானதில் மனமுடைந்த சாய் பல்லவியின் ரசிகர்கள், “சாய் ‘சாய்'யாக இல்லை... சாய் பருக்களுடன் இருப்பதுதான் அழகு” என்று ஆன்லைனில் அழாத குறையாக சோக கமெண்ட்டுகளைக் கொட்டிவிட்டார்கள்.

“இது சாய்க்குத் தெரியுமா?” என்ற கேள்விக்கு , “மேக்கப் இல்லாமல் ஒருத்தி அழகாக இருக்கிறாள்' என்று பிறர் சொல்லக் கேட்க எந்தப் பெண்தான் விரும்ப மாட்டாள்? என் தங்கைக்கும் முகப்பரு பிரச்சினை இருக்கிறது. அவளுக்கு தைரியம் கொடுக்க என்னைத்தான் உதாரணம் காட்டுகிறார்கள். முகப்பருக்கள் உள்ளது எனக்குப் பெருமைதான்” என்கிறார் பல்லவி.

எப்படியோ, ‘நினைவெல்லாம் நித்யா'வில் ஜெமினி கணேசனின் மகள் ஜெயா டாக்டருக்குப் படித்துக்கொண்டிருந்தபோது ‘ஜிஜி' என்ற பெயரில் நாயகியாக அறிமுகம் ஆனார். படம் வெளியான பிறகு ‘ஜிஜி'க்கு பாராட்டுகள், வாய்ப்புகள் கிடைத்தாலும், அவற்றை உதறிவிட்டுப் படிப்பைத் தொடர்ந்து ‘டாக்டர் ஜெயா தர்' என்றாகிவிட்டார். பொறியியல் படித்த பலரும் நடிகையாகியுள்ளனர்.

ஆனால், மருத்துவம் படித்த பெண்கள் நடிக்க வருவது வெகு அபூர்வம். 1982-ல் ‘ஜிஜி’இன்று சாய் பல்லவி. இருவருக்கும் ஒரே வேறுபாடு, ஜிஜி முதல் படத்துடன் நடிப்பை நிரந்தரமாக நிறுத்திக்கொண்டார். சாய் மருத்துவத்துடன் நடிப்பையும் தொடர விரும்புகிறார்!

சாய் டாக்டராகப் பணிபுரியும் மருத்துவமனைக்கு, “உடம்பு சரியில்லை, ஜுரமான்னு பாருங்க” என்று சொல்லிக்கொண்டு சாய் ரசிகர்கள் குறிப்பாகக் கேரள ரசிகர்கள், படையெடுக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x