

இந்த ஆண்டும் 200க்கு மேற்பட்ட படங்கள் வெளியாயின. இவற்றில் பல படங்கள் வெளியான நாளிலேயே தோல்விக் கணக்கில் சேர்ந்துகொண்டன. வணிக ரீதியான வெற்றி, தோல்வி என்பவற்றைத் தாண்டிக் கவனம் ஈர்த்த படங்கள் என்று பார்த்தால் 20 படங்கள்கூடத் தேறாது. தொழில்நுட்பத்திலும் தொழில் நேர்த்தியிலும் முன்னேறியுள்ள தமிழ்த் திர்ரையுலகம் திரைப்படம் என்னும் ஊடகத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் முறையில் சொல்லிக்கொள்ளும்படியான முன்னேற்றத்தைக் காணவில்லை.
‘பெரிய’ படங்களின் சறுக்கல்கள்
வெற்றிப் படங்களுக்குப் பேர்போன இயக்குநர்கள், நடிகர்களின் படங்களில் பல இந்த ஆண்டு தோல்வி அடைந்திருக்கின்றன. அல்லது எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. வெற்றிப் பட இயக்குநர் என்றும் பிரம்மாண்ட இயக்குநர் என்றும் சொல்லப்படும் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான ‘ஐ’, படம், பெரும் பொருட்செலவு, பிரமிக்கவைக்கும் காட்சிகள், அசாத்தியமான ஒப்பனை, விக்ரமின் அசுர உழைப்பும் சிறந்த நடிப்பும், வியக்கவைக்கும் பாடல் காட்சிகள், ஏமி ஜாக்ஸனின் வசீகரம் என வெற்றிப் படத்துக்குத் தேவையான எல்லா அம்சங்களையும் கொண்டிருந்தும் ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை.
கதாநாயகனுக்கு ஏற்படும் பிரச்சினையும் அதன் பாதிப்பும் அழுத்தமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் அவனை அப்படி ஆக்குவதற்கான காரணம் வெளிப்படும்போது சப்பென்று இருந்தது. அந்தத் திட்டத்தைக் கதாநாயகன் தெரிந்துகொள்ளும் விதம் அதைவிடவும் ஏமாற்றமளித்தது. பழிவாங்கும் படலத்தில் ‘புதுமையான’ திட்டங்கள் இருந்தாலும் அவை காட்சிப்படுத்தப்பட்ட விதத்தில் இருந்த மிகைத்தன்மையால் அவை எடுபடவில்லை. எதிர்பார்ப்பும் வியப்பும் ஒரு கட்டத்துக்கு மேல் வடிந்து, ஆயாசமே ஏற்பட்டது. தொடக்கத்திலிருந்து முடியும்வரை ரசிகர்களைக் கட்டிப்போடும் வலிமை திரைக்கதையில் இல்லை. ஒரு கட்டத்தில் அது தளர்வடைந்துபோனதில் ரசிகர்களின் மனம் படத்திலிருந்து விலகிவிட்டது.
கமல் ஹாஸனின் ‘உத்தம வில்ல’னுக்கு நேர்ந்த கதியும் இதுதான். நடிகனைச் சுற்றி அமைந்த இந்தக் கதையில் மனதைத் தொடும் சில தருணங்களும் மனித உறவின் சிக்கலான பக்கங்களை நுட்பமாகச் சொல்லும் சில காட்சிகளும் இருந்தன. சாவை எதிர்கொண்டிருக்கும் நாயகனின் வாழ்வின் ரகசியப் பக்கங்களைச் சொல்லும் பகுதிகள் பக்குவமான முறையில் சித்தரிக்கப்பட்டிருந்தன. நாயகன் நடிக்கும் படத்தின் காட்சிகள் அளவுக்கதிகமாக நீண்டு பொறுமையைச் சோதித்ததில் படத்தை ரசிகர்கள் கைவிட்டார்கள். படத்துக்குள் வரும் நீளமான ‘படம்’, ஆதாரமான கதையோடு பெரிதாக ஒட்டவில்லை; தன்னளவில் சுவாரஸ்யமாகவும் அமையவில்லை. திரைக்கதையின் கச்சிதத்தன்மையைப் பெரிதும் பாதித்த இந்தக் கிளைக் கதையே படத்துக்கு வில்லனாக அமைந்துவிட்டது.
நல்ல திரைக்கதை எனும் மகா மந்திரம்
எப்படிப்பட்ட நட்சத்திரமாக இருந்தாலும் எத்தனை அசத்தலான காட்சிகள் இருந்தாலும் எவ்வளவு கடுமையான உழைப்பு இருந்தாலும் போதாது; கச்சிதம், நேர்த்தி, சுவாரஸ்யம் கொண்ட திரைக்கதை இல்லாவிட்டால் ஒரு படத்தை ரசிகர்கள் நிராகரித்துவிடுகிறார்கள். காட்சிகளில் புதுமை, ஓரளவேனும் நம்பகத்தன்மை, சிறிதளவாவது தர்க்க ஒழுங்கு ஆகியவற்றை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இவற்றில் ஒரு படம் எந்த அளவுக்குச் சரியாக அமைகிறதோ அந்த அளவுக்கே அது வெற்றிபெறுகிறது. ‘ஓ காதல் கண்மணி’, ‘தனி ஒருவன்’, ‘மாயா’, ‘நானும் ரவுடிதான்’, போன்ற படங்கள் வெற்றிபெற்றதும், ‘இன்று நேற்று நாளை’ போன்ற சில படங்கள் பெரிய நட்சத்திரங்கள் இல்லாமலே வெற்றிபெற்றதும் இப்படித்தான்.
‘ஓ காதல் கண்மணி’ படத்தில் எடுத்துக்கொண்ட பிரச்சினை கையாளப்பட்ட விதத்தில் மேலோட்டமான தன்மை இருந்தாலும் திரைக்கதையின் விறுவிறுப்பு, அழகுணர்ச்சி கொண்ட காட்சிகள், இளமைத் துள்ளலுடன் படம் நகர்ந்த விதம், இளைஞர்களைக் கவரும் இசை ஆகியவை படத்தை வெற்றிபெற வைத்தன. நம்பகத்தன்மையோடு கூடிய திருப்புமுனைகள், கதைக் களத்தின் பின்புலத்தை வலுவாக நிறுவியது ஆகியவற்றால் ‘தனி ஒருவன்’ தனித்து நின்றன. சிக்கலான கதையை எடுத்துக்கொண்டு குழப்பமில்லாமல் சுவாரஸ்யமாகச் சொன்னதால் ‘இன்று நேற்று நாளை’ வெற்றிபெற்றது.
இரைச்சலும் எரிச்சலும் கிளப்பிய பேய்ப் படங்களுக்கு மத்தியில் வித்தியாசமான முறையில் மிரட்டிய ‘மாயா’, ‘டிமாண்டி காலனி’ ஆகிய படங்கள் கவனம் ஈர்த்தன. ‘காஞ்சனா 2’ படம் பேய்ப் படம் எனபதைக் காட்டிலும் கலவையான மசாலா அம்சங்களால்தான் வெற்றி பெற்றது. ‘இனிமே இப்படித்தான்’ படம் சந்தானத்தை நாயகனாக்கும் முயற்சியில் ஓரளவு வெற்றிபெற்றாலும் படம் என்ற வகையில் பலவீனமாகவே வெளிப்பட்டது.
நட்சத்திரங்களின் வசீகரம் ஒரு படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தலாம். ஆனால் அது மட்டுமே வெற்றியைப் பெற்றுத் தந்துவிடாது. கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ், சிம்பு போன்ற எல்லா நட்சத்திரங்களுக்கும் இது பொருந்தும் என்பதை இந்த ஆண்டு வெளியான அவர்களுடைய படங்கள் நிரூபித்தன. அஜித்தின் ‘வேதாளம்’ என்னும் ஒற்றை விதிவிலக்கை விட்டுவிட்டுப் பார்த்தால் எந்தப் படமும் நட்சத்திர மதிப்புக்காக மட்டும் ஓடவில்லை. திரைக்கதையில் விறுவிறுப்பும் குறைந்தபட்ச நம்பகத்தன்மையும் இல்லாத பட்சத்தில் தொடக்க கட்டப் பரபரப்புக்கு மேல் நட்சத்திர மதிப்பால் எந்தப் பலனும் இருப்பதில்லை. இந்த உண்மையை மீண்டும் ஒரு முறை எல்லாத் தரப்பு ரசிகர்களும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள்.
பலவீனமான உள்ளடக்கம்
வெற்றி, தோல்வியைத் தாண்டிப் பார்க்கும்போது தமிழ் சினிமா தன் உள்ளடக்கத்தில் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டும் எனபது தெரிகிறது. கௌதம் மேனனின் இயக்கத்தில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படம் காவல்துறையின் வன்முறையைத் தெளிவாக நியாயப்படுத்துகிறது. கொடூரமான குற்றவாளிகளுக்கு எதிராகக் காவல்துறையின் வன்முறை பிரயோக்கப்படுவதை நியாயப்படுத்துவது கௌதமுக்கோ தமிழ் சினிமாவுக்கோ புதிதல்ல.
இதுபோன்ற படங்கள் குற்றங்களின் உலகம் செழித்து வளருவதில் காவல் துறைக்கும் நமது அரசியல் அமைப்புக்கும் இருக்கும் பங்கைப் பற்றிப் பேசுவதில்லை. விடலைத்தனமான இளைஞர்களின் யதார்த்தத்தைப் பேசும் பாவனையுடன் வெளியான ‘த்ரிஷா இல்லனா நயந்தாரா’ படம் வெளி உலகில் இருக்கும் சீரழிவைச் சுரண்டி லாபம் அடைவதில் வெற்றிபெற்றது. சமூகப் பொறுப்புணர்வோ யதார்த்தத்தின் பன்முகங்கள் குறித்த பிரக்ஞையோ அற்ற இந்தப் படம், வெற்றி பெற வேண்டும் என்னும் ஒரே நோக்கத்துடன் மலினமான ரசனைக்குத் தயக்கமில்லாமல் தீனிபோட்டது.
‘பொறம்போக்கு என்னும் பொதுவுடமை’, ‘பூலோகம்’ ஆகிய படங்கள் இன்றைய அரசியலின் வணிக முகத்தைப் பற்றி அழுத்தமாகப் பேசியதில் கவனம் பெற்றன. குற்றவியலைப் பின்னணியாகக் கொண்ட ‘ராஜதந்திரம்’ கச்சிதமான திரைக்கதையால் கவனம் பெற்றது. அப்பாவித்தனத்தையே தீவிரமாக வெளிப்படுத்தும் இயல்பு கொண்ட பாத்திரங்களை மையமாகக் கொண்டு அங்கதச் சுவையுடன் விறுவிறுப்பாகக் கதை சொல்லி ஈர்த்தது ‘நானும் ரவுடிதான்’. ‘பாபநாசம்’ படம் நேர்த்தியான திரைக்கதைக்குச் சான்றாக அமைந்தது.
நகைச்சுவை என்னும் பெயரால் செய்யப்படும் அழிச்சாட்டியங்களை மக்கள் நிராகரிப்பார்கள் என்பதை ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படம் நிரூபித்தது. நகைச்சுவை என்னும் அம்சத்தை சரியாகக் கையாண்டால், அது ரசிகர்களைக் கவரும் என்பதை ராதாமோகனின் ‘உப்புக் கருவாடு’ நிரூபித்தது. சினிமா குறித்த பகடியையும் அபத்த வகை நகைச்சுவையையும் நன்கு பயன்படுத்திக்கொண்ட ‘144’ படம் தன் உத்திகளை மிகையாகப் பயன்படுத்தியதால் பலவீனமடைந்தது.
தனித்து நின்ற படங்கள்
இப்படிக் கலவையாக அமைந்த படங்களுக்கு மத்தியில் மூன்று படங்கள் தனித்து நின்றன. காக்கா முட்டை, குற்றம் கடிதல், கிருமி ஆகிய படங்கள் வெகுஜன ரசனையின் சட்டகத்துக்குள் தீவிரமான விஷயங்களைக் கையாண்டன. காவல் துறையினருக்குத் தகவல் தரும் வேலையில் ஈடுபடுபவர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசிய அனுசரண் இயக்கிய ‘கிருமி’ திரைப்படம், காவல் துறைக்குள் இருக்கும் பூசல்களையும் சகஜப்பட்டுப்போன அதன் ஊழல் போக்கையும் யதார்த்தமாகவும் வலுவாகவும் பதிவுசெய்தது. திரைக்கதையின் குவி மையத்தில் ஏற்பட்ட பிசகும் பிற்பகுதியில் கவியும் மந்தத்தன்மையும் படத்தின் தாக்கத்தைக் குறைத்துவிட்டன.
பிரம்மா இயக்கிய ‘குற்றம் கடிதல்’ படம் வெகு நாட்களுக்குப் பிறகு தமிழ்த் திரையில் நடந்த கலாபூர்வமான முயற்சி. யதார்த்தமும் கவித்துவமும் தீவிரமும் கூடிய அரிதான படங்களில் ஒன்று. ஆழமான குற்ற உணர்வையும் மன்னிப்பின் மகத்தான ஆற்றலையும் சித்தரித்த இந்தப் படத்தை இந்த ஆண்டின் ஆகச் சிறந்த படம் என்று சொல்லலாம். பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடலைப் பயன்படுத்திய விதமும் படத்தின் கலையுணர்வுக்குச் சான்றாக அமைகிறது. வெகுஜன ரசனைக்கான அம்சங்கள் குறைவாக இருந்ததால் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெறாதபோதிலும் தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்கும் படங்களில் ஒன்றாக அமைந்த படம் இது.
தீவிரம், கலைத்தன்மை, யதார்த்தம் ஆகியவற்றுடன் வெகுஜன ரசனைக்கான தன்மைகளையும் கொண்டிருந்த ‘காக்கா முட்டை’ படம் எல்லா வகைகளிலும் வெற்றிபெற்றது. விளிம்பு நிலை வாழ்வையும் உணவு அரசியலையும் பேசும் இந்தப் படம் அனைத்துத் தரப்பினரையும் கவரும் தன்மைகளுடன் அமைந்தது. பெரிய நட்சத்திரங்களோ பெரும் முதலீடோ இல்லாமலேயே மக்களைக் கவரும் தரமான படத்தை எடுக்க முடியும் என்பதைத் தன் முதல் படத்திலேயே நிரூபித்த மணிகண்டன் மிகுந்த பாராட்டுக்குரியவர்.
சிறுவர்களை மையமாகக் கொண்ட ‘காக்கா முட்டை’ பெற்ற வெற்றியில் பெரிய நட்சத்திரங்களுக்கும் பெரிய இயக்குநர்களுக்குமான பாடம் இருக்கிறது. அந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளத் தயாராக இருந்தால் தமிழ் சினிமா தரம் சார்ந்து மேலும் சில அடிகளை எடுத்து வைப்பதுடன் வணிக அடிப்படையிலும் வெற்றிபெறலாம்.