

1930களின் பாரிஸ் நகரின் பரபரப்பான ரயில் நிலையத்தில், ரயில் நிலைய நிர்வாகத்துக்குத் தெரியாமலேயே தனது வாழ்வைக் கழிக்கும் 12 வயது அநாதைச் சிறுவன் ஹூகோ. ரயில் நிலையத்தில் உள்ள பிரம்மாண்ட கடிகார இயந்திரங்களை வேளை தவறாமல் சாவி கொடுத்து, பழுதுகளை நீக்கி இயங்க வைக்கிறான். அன்றாட உணவை ரயில் நிலைய உணவுக் கடைகளிலும், ஏமாறும் பயணிகளிடமும் திருடிச் சாப்பிட வேண்டிய நிலை. இயந்திரங்கள், பற்சக்கரங்கள், கப்பிகளின் பிரபஞ்சம் அவனுடையது. ரயில் நிலையத்தின் பிரதான கடிகாரத்தின் எண் தகடுக்குப் பின்னால் நின்றுகொண்டு, உறங்காத பாரீஸ் நகரத்தை ஒரு பெரிய இயந்திரமாகப் பார்க்கிறான். இந்த பூமிக்கு வரும் எந்த உயிரியும் உபயோகமற்றதாக இங்கே பிறப்பதில்லை என்று நம்புகிறான். ஏனெனில் ஒரு இயந்திரத்திலும் தேவையற்ற ஒரு பாகம் என்று ஒன்று இருப்பதில்லை.
சிறுவன் ஹூகோவுக்கு, காலத்தில் மறக்கடிக்கப்பட்ட பழுதான கிழவர் ஒருவரைச் சரிசெய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. அவரையும் அவனையும் இணைக்கும் பொருளாக ஒரு தானியங்கி இயந்திர பொம்மை இருக்கிறது. அந்தப் பொம்மைக்குள்தான் அந்த முதியவரைப் பற்றிய ரகசியம் இருக்கிறது. ஊமைப்படக் காலத்தில், ஒரு மந்திரவாதியாக இருந்து, தவழத் தொடங்கிய சினிமாவின் தொடக்க காலத்தில் ஒரு இயக்குநராக மாறி, அற்புதமான சிறுபடங்களை உருவாக்கிய, ஒளிப்பதிவு தொழில்நுட்பத்தில் பல கண்டு பிடிப்புகளைச் செய்த மேதை அவர். பின்னர் சினிமாத் தொழிலில் தோல்விகண்டு, தான் எடுத்த சினிமாக்களின் பிலிம் சுருள்களை அழித்துவிட்டு மறைந்து வாழ்பவர். சிறுவன் ஹூகோ பணிபுரியும் அதே ரயில் நிலையத்தில் விளையாட்டு பொம்மைக் கடையை நடத்திவரும் அவரைக் கண்டு பிடித்து, அடையாளமின்றி வாழ்ந்த அந்த இயக்குநருக்கு உலகின் அங்கீகாரத்தை வாங்கித் தருகிறான் அந்தச் சிறுவன்.
மீட்கப்படும் கலைஞன்
கைக்குக் கிடைக்கும் இயந்திரங்களை எல்லாம் சரிசெய்வதையே வாழ்க்கையின் முழு ஆனந்தமாகக் கருதும் ஹூகோ, பெற்றோரை இழந்து கதைப்புத்தகங்களில் வரும் சாகசங்கள் வழியாகவே வாழ்வைப் பார்க்கும் இசபெல், தன் பழைய வாழ்க்கை யைக் கிட்டத்தட்ட உலகுக்குத் தெரியாமல் புதைத்து வாழும் ஜார்ஜ் மெலிஸ், அவரது மனைவியும் முன்னாள் நடிகையுமான மம்மா ஜீன் ஆகியோரைச் சுற்றி நிதானமாக விஸ்தாரமாக ஹூகோ பயணிக்கிறது.
பிரான்சில் புகழ்மிக்க மந்திரவாதியாக இருந்து பின்னால் ஊமைப்பட சகாப்தத் தின் முக்கியமான இயக்குநரான ஜார்ஜ் மெலிஸ்ஸின் கதையைத்தான் மார்ட்டின் ஸ்கார்சிசி ஹூகோவாக எடுத்துள்ளார். இயக்குநர் ஜார்ஜ் மெலிஸ் வழியாக, இயக்குநர் மார்டின் ஸ்கார்சிசி, கதை சொல்லாத சினிமாவைக் கனவுகாண்கிறாரோ என்றும் தோன்றுகிறது. பிரமாண்டமான இயந்திர யுகத்தில் கனவுகளையும், மாயக்காட்சிகளையும், விந்தை அனுபவங்களையும் தரக்கூடிய ஒரே ஊடக மாக சினிமாவைப் பார்த்த ஜார்ஜ் மெலீஸ் எடுத்த படங்களும் இத்திரைப்படத்தில் காண்பிக்கப்படுகின்றன. நவீன வாழ்வில் இயந்திரமாக இருந்து கனவுகளையும், பெரும் காட்சி அனுபவங்களையும் சாத்திய மாக்கும் ஊடகமாக சினிமா இருக்கிறது என்பதை உணர்த்துகிறார் ஸ்கார்சிசி.
மார்டின் ஸ்கார்சிசி எடுத்த திரைப்படங்களில் அவர் இதயத்துக்கு நெருக்கமான படம் என்று ஹூகோவை விமர்சகர்கள் கருதுகிறார்கள். சிறுவன் ஹூகோ அவரது பிரதிபலிப்புதான் என்று கூறப்படுகிறது. குழந்தைகளுக்கான கனவுலகைப் போல இப்படம் இருக்கிறது.
3டி தொழில்நுட்பத்தின் உச்சம்
காலத்தில் மறக்கப்பட்ட ஜார்ஜ் மெலிசாக நடித்திருக்கும் பென் கிங்ஸ்லி குறிப்பிடப்பட வேண்டியவர். 3டியில் ஒரு படத்தின் முழு சாத்தியத்தையும் பார்க்க விரும்புபவர்கள் ஹூகோவைப் பார்க்க வேண்டும். லூமியர் சகோகரர்கள் தாங்கள் எடுத்த முதல் திரைப்படத் துண்டான நிலையத்துக்குள் ரயில் வரும் காட்சியை முதல்முறையாகப் பார்வையாளர்கள் பார்த்தபோது, திரையரங்குக்கு உள்ளேயே ரயில் வந்துவிட்டது போல பயந்தனர். அந்தக் காட்சியை நாம் ஹூகோ படத்தில் 3டியில் பார்க்கும்போது, லூமியர் சகோதரர்களுக்கு இத்தொழில்நுட்பம் சாத்தியப்படவில்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஹூகோ திரைப்படம் சினிமாவின் பிறப்பு எப்படியான விந்தையான சூழ்நிலைகளில் உருவானது என்பதைக் காட்டுகிறது. லூமியர் சகோதரர்களிடம் முதலில் காமிராவை விலைக்குக் கேட்கிறார் ஜார்ஜ் மெலிஸ். பிறகு லண்டன் சென்று பயாஸ்கோப் கருவியை வாங்கித் தனது சினிமாவுக்கு ஏற்ற வகையில் அவரே வடிவமைத்துக்கொள்கிறார். தனது காதலியையே நடிகையாக்கி தனது மந்திர வித்தைகளைத் துண்டுதுண்டான அதீதக் காட்சிகளாக்கிப் படங்களை எடுக்கிறார். கருப்பு வெள்ளை பிலிமில், வண்ணம் தீட்டி வண்ண சினிமாவை உருவாக்கிய முன்னோடி அவர். அவருக்கு மார்ட்டின் ஸ்கார்சிசி செய்த அர்ப்பணம் தான் இத்திரைப்படம்.
சினிமாதான் இன்றைக்கு மனித குலத்துக்குப் பெரும் கனவுகளையும் அனுபவங்களையும் தரும் சாத்தியம் கொண்ட ஊடகம் என்பதையும் மௌனமாக உணர்த்திவிடுகிறது ஹூகோ.