

கெளதம் மேனன் படத்தின் நாயகி என்றால் எப்போதுமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அவர் தற்போது இயக்கிவரும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலமாகத் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகுக்கு அறிமுகமாக இருக்கிறார் மஞ்சிமா மோகன். கேரள தேசத்தின் மஞ்சிமாவிடம் பேசியதில் இருந்து...
‘அச்சம் என்பது மடமையடா' வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?
நாயகியாக எனக்கு மலையாளத்தில் ‘ஒரு வடக்கான் செல்ஃபி' முதல் படம். கெளதம் சார் அப்படத்தின் ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு, கதாசிரியர் வினீத் னிவாசனிடம் என் நம்பர் வாங்கி போன் பண்ணினார். அதற்குப் பிறகு அவர் வைத்திருந்த நாயகி தேர்வில் தேர்வானேன்.
ஒரே காட்சியை இரண்டு மொழியில் இரண்டு நாயகர்களுடன் நடித்த அனுபவத்தைச் சொல்லுங்கள்.
அது ரொம்ப கடினமானதுதான். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே மாதிரி நடிக்க வேண்டும். இரண்டு மொழிகளையுமே தெரிந்து வைத்திருந்தேன். ஒரு காட்சியை முதலில் எந்த நாயகனுடன் படமாக்குகிறார்கள் எனத் தெரியாது. ஒரே நேரத்தில் 2 காட்சியை ஒரு நாயகனுடன் எடுத்துவிட்டு, சில மணி நேரம் கழித்து அந்த 2 காட்சியையும் அடுத்த நாயகனுடன் எடுப்பார்கள். முன்பு நான் எப்படிப் பண்ணியிருந்தேனோ அப்படியே பண்ண வேண்டும் என்பதால் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். ஆனால் நிறைய கற்றுக்கொண்டேன்.
எந்த மாதிரியான கதைகளில் நடிக்க உங்களுக்கு ஆர்வம்?
கதை சொல்லும் போது சில காட்சிகள் பிடித்திருந்தால் உடனே ஒப்புக்கொள்வேன். ஒரு கதையில் என்னுடைய கதாபாத்திரம் முழுமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. சில காட்சிகளே வந்தாலும் பார்ப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்ள வேண்டும், அவ்வளவுதான்.
எங்கு நடிப்பு கற்றுக் கொடுத்தீர்கள்?
உண்மையில் நான் எங்கேயும் நடிப்பு கற்றுக் கொள்ளவில்லை. இப்போதும் எனக்கு நடிப்பு என்றால் என்ன என்று தெரியாது. அப்பா சினிமா ஒளிப்பதிவாளர். நான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானபோது நிறைய குழந்தை நட்சத்திரங்கள் மலையாளத் திரையுலகில் கிடையாது. அதனால் எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன.
‘மதுரனோம்பார கட்டு' படத்துக்காகக் கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திரத்துகான விருது ஒன்பது வயதில் கிடைத்தது. அப்போது அந்த விருதின் முக்கியத்துவத்தை நான் உணரவில்லை. ஆனால் ‘ஒரு வடக்கன் செல்ஃபி ' படத்தில் நாயகியாக அறிமுகமானபோது உணர்ந்தேன். அந்தப் படத்தை நினைவுபடுத்திதான் என்னை இன்றும் விசாரிக்கிறார்கள்.
திரையுலகில் உங்களுக்கு நண்பர்கள் என்றால் யார்?
எனக்கு நண்பர்கள் என நிறைய பேர் இல்லை. தமிழ்த் திரையுலகில் நண்பர்கள் என்றால் 'அச்சம் என்பது மடமையடா' படக் குழுதான். அவர்களோடு ஒரு வருடம் பயணித்திருக்கிறேன். பள்ளி, கல்லூரி நண்பர்களோடுதான் இப்போதும் நெருக்கமாக இருக்கிறேன். எனக்கு கீர்த்தி சுரேஷை சிறு வயதில் இருந்தே தெரியும். என் அப்பாவும் அவருடைய அப்பாவும் நண்பர்கள். என் அப்பா ஒளிப்பதிவு செய்த படங்களில் கீர்த்தியின் அம்மா நடித்திருக்கிறார். அதனால் எனக்கு அவரைத் தெரியும்.
திரையுலகில் போட்டி என்றால் யார்?
எனக்கு எல்லாருமே போட்டிதான். ஏனென்றால் தினமும் ஒவ்வொரு புதிய நாயகி வந்துகொண்டே இருக்கிறார். ஆகையால், இவர்தான் போட்டி என்று ஒருவரை மட்டும் சொல்ல முடியாது. நான் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டேன். எனக்கு என்னுடைய நடிப்பு, இதர பணிகளில் மட்டுமே கவனம் இருக்கும். எனக்கு வரும் படங்கள் வரத்தான் போகின்றன. அதை யாராலும் தடுக்க முடியாது.
எனக்கு அதில் பயம் எல்லாம் கிடையாது. “ஒரு நாள் தூங்கி எழும்போது உன்னுடைய திறமை எல்லாவற்றையும் இழந்துவிட்டால் என்ன செய்வாய்’’ என கெளதம் சார் கேட்டார். எனக்கு அதில் எப்போதுமே பயம் உண்டு. மற்றபடி அந்த நாயகி இவரோடு நடிக்கிறார், இந்தப் படம் பண்ணிவிட்டார் என்பதில் எல்லாம் எனக்கு பயமில்லை.