

வாழ்க்கை என்பது பூவா, தலையா விளையாட்டு! நடக்கும், நடக்காது என்பதையெல்லாம் நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. முடிந்தவரையில், ‘இது நடக்கும்’ என்ற எதிர்பார்ப்போடுதான் நாட்களைக் கடத்துகிறோம். என்றால், எது நம்மை நடத்துகிறது? சந்தேகமில்லாமல் அன்பும் நம்பிக்கையும்தான். அந்த அன்பும் நம்பிக்கையும்கூடப் பலருக்கும் பூவா, தலையா விளையாட்டாக அமைந்துவிடுவதுதான் பெரும் வேதனை. கே.பாலசந்தரின் அனுவுக்கும் அப்படித்தான். பாலசந்தரின் இயக்கத்தில் சுஜாதா, கமல் ஹாசன், ரஜினிகாந்த், ரவிகுமார் ஆகியோரின் நடிப்பில் உருவான ‘அவர்கள்’ திரைப்படம், 1977, பிப்ரவரி 25-ல் வெளியாகி 40 ஆண்டுகள் நிறைகிறது.
ஒரு புதுமைப்பெண்
‘அவர்கள்’ படத்தை யாருக்காகப் பார்க்க வேண்டும் என்று என்னைக் கேட்டால், நிச்சயமாக சுஜாதாவுக்காகத்தான். சொல்லப்போனால், சுஜாதா இல்லையென்றால், ‘அவர்கள்’ இல்லை. கதை மிகவும் திருகலான தன்மை கொண்டது. அனு (சுஜாதா) ஒரு புதுமைப் பெண். எந்த அளவுக்குப் புதுமைப் பெண் என்றால், தன்னைப் பெண் கேட்டவரிடம் திருமணத்துக்குத் தன் காதலனின் சம்மதத்தைப் பெற 15 நாட்கள் அவகாசம் கேட்கும் அளவுக்கு..! சூழ்நிலைகளால் தன் காதலன் பரணியை (ரவிகுமார்) பிரிய நேர்கிறது. ராமநாதனை (ரஜினிகாந்த்) கைப்பிடிக்கிறாள் அவள். அனுவின் காதலை அறிந்திருக்கும் ராமநாதன், அவளைக் கொச்சைப்படுத்தும் ஒரு ‘சேடிஸ்ட்’. ஒரு கட்டத்தில், அவள் விவாகரத்து பெறுகிறாள்.
கண்ணாமூச்சி ஆட்டம்
மீண்டும் சூழ்நிலைகளின் சூழ்ச்சியால், பரணியைச் சந்திக்கிறாள் அனு. அனுவின் நினைவாகவே காலத்தைக் கடத்தும் பரணி, இப்போதும் அனுவை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறான். அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். அப்போது அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடுகிறான் ராமநாதன். இந்நிலையில், அனு பணியாற்றும் அதே நிறுவனத்தில் பணியாற்றும் ஜானி (எ) ஜனார்த்தனன் (கமல்) ஒரு தலையாக அனுவைக் காதலிக்கத் தொடங்குகிறான். ஜானியின் மனைவி தீ விபத்தில் இறந்துவிட்டவள். ஒரு புறம் மாஜி கணவன், இன்னொரு புறம் மாஜி காதலன், மூன்றாவதாக, அவளைத் தன் மனைவிபோலக் கருதும் நண்பன்.
குறியீடாக ஒரு விளையாட்டு
பரணியுடன் அனு இணைவாளா, மாட்டாளா? ராமநாதன் அனுவுடன் இணைவானா, மாட்டானா? ஜானியை அனு ஏற்றுக்கொள்வாளா, மாட்டாளா? இப்படிப் பல நிகழ்தகவுகளைக் கொண்டதாக இருக்கிறது அனுவின் வாழ்க்கை. அவள் மீது பிறர் வைக்கும் அன்பும், பிறர் மீது அவள் வைக்கும் நம்பிக்கையும் அவளுக்குக் கண்ணாமூச்சி காட்டுகின்றன. கடைசியில் யார் யாரோடு சேர்ந்தார்கள் என்பதை, நீங்கள் திரைப்படம் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.
பாலசந்தரின் இந்தப் படத்தை ‘கிளாஸிக்’ என்று சொல்வதற்கு நிறைய காரணங்கள் உண்டு. விவாகரத்து பெற்றும் தாலியைச் சுமக்கும் பெண், தாலியுடனே இன்னொருவனைக் காதலிக்கும் பெண், என்பது அந்தக் காரணங்களில் முக்கியமான ஒன்று. இந்த இரண்டு துருவங்களுக்கு இடையில் அவள் பந்தாடப்படுவதை ‘டேபிள் டென்னிஸ்’ காட்சி சுவாரசியமாகவும் அழுத்தமாகவும் உணர்த்தியது.
கலைகளின் மீதான காதல்
கமலும் ரஜினியும் பாலசந்தரால் கொஞ்சம் கொஞ்சமாகச் செதுக்கப்பட்டுவந்த காலம் அது. இருந்தும் படத்தின் டைட்டில் கார்டில் சுஜாதாவின் பெயரைத்தான் முதலில் வைத்தார். தன் கதைகளின் நாயகிகள் மீது அவர் கொண்டிருந்த மரியாதையை இது காட்டுகிறது.
வெளிச்சத்துக்கு வராத கலைகளைத் தன் படங்களில் கொண்டுவரும் வழக்கத்தை அவர் எப்போதும் கொண்டிருந்தார். உதாரணத்துக்கு, மிருதங்கத்தை வைத்துத் தனி ஆவர்த்தனம் (அபூர்வ ராகங்கள்), மிமிக்ரி (அவள் ஒரு தொடர்கதை) என இந்த வரிசையில், பொம்மைகளைப் பேசச் செய்யும் ‘வென்ட்ரிலோக்விசம்’ எனும் கலையையும், ‘மைமிங்’ எனும் வார்த்தைகளற்ற உடல்மொழிக் கலையையும் இந்தப் படத்தில் அவர் அறிமுகப்படுத்தினார்.
ஈர்க்கும் உரையாடல்
‘சரித்திரத்தில் இடம் பெறணும்னா, நாம சந்தோஷமா வாழக் கூடாது’, ‘ஒரு படம் பார்த்தா சென்ஸார் சர்ட்டிஃபிகேட்ல இருந்து பார்க்கணும்’, ‘காதலை நான் முதல்ல சொல்லியிருந்தா, என் மதிப்பு போயிருக்கும். இப்பவும் சொல்லலைன்னா, அந்தக் காதலுக்கே மதிப்பு போயிரும்’ என மிகவும் புத்திசாலித்தனமான வசனங்களை இந்தப் படத்தில் எழுதியிருப்பார் இயக்குநர்.
படத்தின் ஓரிடத்தில் இப்படி ஒரு வசனம் வரும்: ‘நீ நல்லா வாழணும்னு நினைக்கிறியா? இல்ல எல்லோருக்கும் நல்லவளா வாழணும்னு நினைக்கிறியா?’. ‘ஏன்... ரெண்டும்தான்!’
நம்மில் பலரும் செய்யும் தவறு இதுதான். எல்லோருக்கும் நல்லவராக வாழ்ந்து, நாமும் நல்லபடியாக வாழ வேண்டும் என்பது முடியாத காரியம். ராமநாதனைப் போன்றவர்களை எதிர்த்தும், ஜனார்த்தனன், பரணி போன்றவர்களை நேசித்தும் வாழ்பவராக இருந்தாக வேண்டிய உலகம் இது... நீங்கள் எத்தனை அன்பு கொண்டவராக இருந்தாலும்கூட! என்ன ஒன்று... ஜனார்த்தனனையும் பரணியையும் நாம் வேறெங்கும் தேடத் தேவையில்லை. ‘அவர்கள்’ நம்மோடுதான் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டால் போதும்.
படத்தின் ஒரு காட்சியில், அனு, ‘விவாகரத்து ஒரு பரிசு’ என்பாள். அனுவின் தொடர்ச்சியாக ‘மெளன ராக’த்தின் திவ்யாவையும் பார்க்கலாம். அந்தப் படத்தின் ஒரு காட்சியில் ‘உனக்கு என்ன கிஃப்ட் வேணும்?’ என்று நாயகன் கேட்க, ‘டைவர்ஸ்’ என்பாள் நாயகி. அப்படி என்றால், ஆண்களிடமிருந்து விலகியிருக்கவே பெண்கள் விரும்புகிறார்களா? அது உண்மையாகவும் இருக்கலாம். இல்லறம் என்பதும் ஒரு பூவா, தலையா விளையாட்டுதானே!