

தான் இயக்கிய ‘அப்பா’ படத்துக்கு மூன்று முறை போனால்தான் டயலாக் புரியும் என்றார் இயக்குநர் சமுத்திரக்கனி. (நியூஸ் 7 சேனல்). அதாவது அவ்வளவு கைதட்டல் கிடைப்பதால் வசனம் காதில் விழாதாம். இந்தக் கதைக்குப் பாட்டு தேவையில்லை என்பதால் பாட்டுகள் இல்லை என்று அவர் கூறியது படைப்பாளிக்கான சுதந்திரம். கூடவே ‘கதையில்லாதவங்கதான் பாட்டு வைப்பாங்க’ என்றும் கூறினார். பாடல்கள் கொண்ட அவரது முந்தைய படங்கள் நினைவுக்கு வந்தன. அவருடைய வருங்காலப் படங்களில் பாடல்கள் இடம் பெற்றால் அந்தப் படத்தில் போதிய கதையில்லை என்று அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாகிவிடாதா?
சேனல்களின் சங்கடம்
செய்தி சேனல்கள் சமீபத்தில் பட்ட ஒரு சங்கடம் தெளிவாகவே தென்பட்டது. ‘சுவாதியைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ராம்குமாரை அவன் என்று குறிப்பிடுவதா? அவர் என்று குறிப்பிடுவதா? பல சேனல்களில் திரையில் ஊர்ந்த செய்திகளில் அவர் என்று கூற (ராம்குமார் இந்த மேன்ஷனில் தங்கியிருந்தார் என்பதுபோல), பின்னணிக் குரல் அவன் என்றது.
சுவாரசியத் தொகுப்பு
ஜெயா டி.வி.யில் ‘இன்று’ பகுதியில் ஜூன் 30 அன்று எம்,ஜி.ஆர். 1997-ல் முதல்வராகப் பதவியேற்றதைக் குறிப்பிட்டார்கள். தனிக் கட்சி தொடங்கிய ஐந்தே வருடங்களில் அவர் முதல்வர் ஆனதையும் குறிப்பிட்டார்கள். ஹிட்லர் பலரைக் கொன்று குவித்த தினம் இது, புதுமைப் பித்தன் இறந்ததும் அதே தினத்தில் (வெவ்வேறு வருடங்களில்) என்றார்கள். பல்வேறு வித்தியாசமான வி.ஐ.பி.க்கள் தொடர்பான முக்கிய நிகழ்வுகளை ஒரே நாளில் தொகுப்பாகப் பார்ப்பதும் ஒரு சுவாரசியம்தான்.
அந்தக் காலத்தின் பொறுமை!
முரசு சேனல் கறுப்பு வெள்ளை காலத் திரைப்படங்களை அதிகம் ரசிப்பவர்களுக்கு ஏற்றதுதான். வேதாள உலகம் திரைப்படத்தின் உச்சக் கட்டம். காளி நேரில் தோன்றி கதாநாயகனுக்கு ஆசி வழங்கித் தீய சக்திகளை மறையச் செய்கிறாள். அடுத்த காட்சியில் ராஜகுமாரனுக்கும், ராஜகுமாரிக்கும் கல்யாணம். அடுத்து ‘சுபம்’ என்ற வார்த்தையை எதிர்பார்த்தால், ஊஹூம். மணமக்கள் உட்கார்ந்திருக்க எதிரே உள்ள மேடையில் நாட்டிய நாடகம். பாரதியார் எழுதிய ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ என்ற பாடல். அது முடிந்ததும், அப்போதும் சுபம் அல்ல. தேசியக் கொடி பறக்கப் பின்னணியில் ‘வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்’ என்ற மற்றொரு பாரதி பாடல். அதைத் தொடர்ந்து ‘வந்தே மாதரம்’ என்ற பாடல். அந்தக் கால ரசிகர்களின் தேசபக்தியும் இசை ஆர்வமும் பொறுமையும் சிலிர்க்க வைக்கின்றன,