மலையளக் கரையோரம்: ஒரு படம்! ஒரே டேக்!

மலையளக் கரையோரம்: ஒரு படம்! ஒரே டேக்!
Updated on
2 min read

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி கவனிக்கப்பட்ட ‘ஒளிவுதிவசெத்தே களி’ படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் ஒரே டேக்கில் படமாக்கப்பட்டிருந்தது. தற்போது ஒரு முழுநீளப் படத்தையும் ஒரே டேக்கில் படமாக்கி அசத்தியிருக்கிறார்கள் அங்கே.

122 நிமிடங்கள் ஓடும் ‘2 டேஸ்’ என்ற அந்தப் படத்தை அதன் இயக்குநர் நிஸ்ஸார் ஒரே டேக்கில் ஒரே நாளில் எடுத்து முடித்திருக்கிறார். இதற்காக ஆறு நாள் ஒத்திகை நடத்தியிருக்கிறார்கள். இதில் ஆச்சரியமான விஷயம் படத்தில் மூன்று பாடல் காட்சிகளும் உண்டு. சமுத்திரக்கனிதான் படத்தின் ஹீரோ.

முதலில் எந்தப் படம்?

ஜெயராமின் மகன் காளிதாஸ் இரண்டு மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். தற்போது நாயகன் ஆவதற்கான வயதை எட்டியதும் தமிழில்தான் அவரது ஹீரோ கணக்கு தொடங்கியிருக்கிறது. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ பட இயக்குநர் பாலாஜி தரணீதரன் அடுத்து இயக்கும் ‘ஒரு பக்கக் கதை’ படத்தில் அறிமுகமாகிறார்.

இங்கு அறிமுகமாகும் அதேநேரம் தனது தாய்மொழியான மலையாளத்தில் ‘1983’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். நிவின் பாலி நடிப்பில் ‘ஆக் ஷன் ஹீரோ பைஜூ’ படத்தை இயக்கிய அப்ரித் ஷைன்தான் இந்தப் படத்தின் இயக்குநர். என்றாலும் தமிழ் அல்லது மலையாளம் இரண்டில் எந்தப் படம் முதலில் வெளியாகும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதற்குள் இரண்டாவது தமிழ்ப் படத்திலும் ஒப்பந்தமாகிவிட்டார் காளிதாஸ்.

களரி அவதாரம்

சீனாவில் மார்ஷியல் ஆர்ட் படங்கள் தொடர்ந்து வெளியாவதைப் போல கேரளத்திலும் அவ்வப்போது நடப்பதுண்டு. களரிப் பயட்டு கலையையும் அதில் புகழ்பெற்ற வரலாற்றுக் கதாபாத்திரங்களையும் வைத்துப் பல படங்கள் அங்கே வெளியாகியிருக்கும் நிலையில் தற்போது ‘பிரேமம்’ படப் புகழ் நிவின் பாலி ‘காயங்குளம் கொச்சுண்ணி’ என்ற களரி வீரரின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடிக்கிறார். காயங்குளம் கொச்சுண்ணி பணக்காரர்களிடம் கொள்ளை அடித்து ஏழைபாளைகளுக்குப் பணத்தைக் கொடுத்து உதவிய கேரளத்து ராபின்ஹுட். ஆக்‌ஷன் ஹீரோவாகத் துடிக்கும் நிவின் படத்தை ஒப்புக்கொண்டதற்கான காரணம் இப்போது புரிகிறது.

ஜாக்பாட் வாய்ப்பு!

சிறு சிறு வேடங்களில் நடித்துவரும் மலையாள நடிகர் சசி கலிங்கா, ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்கிறார். விவிலியக் கதாபாத்திரங்களைக் கொண்ட படமொன்றை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தயாரித்து இயக்கிறார். டாம் க்ரூஸ் நாயகனாக நடிக்கும் அந்தப் படத்தில் யூதாஸ் கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்வாகியிருக்கிறாராம் சசி. படத்தில் இது முக்கியக் கதாபாத்திரங்களில் ஒன்று என்பதால் தனக்கு இது ஜாக்பாட் என்கிறார் சசி.

காஜலுக்காகக் காத்திருப்பு

மோகன்லால், ஜுனியர் என்டிஆர் நடித்திருக்கும் தெலுங்கு மலையாள படமான ‘ஜனதா காரேஜ்’ படத்தில் காஜல் அகர்வால் ஒரு பாடலுக்குக் குத்தாட்டம் ஆடியிருப்பதைக் காண ஆவலுடன் காத்திருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் கூறிவருகிறார்கள் மலையாள சினிமா ரசிகர்கள். இதன் பிறகு காஜல் மலையாளப் பட உலகிலும் இரு வட்டம் அடிப்பார் என்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in