Last Updated : 22 Mar, 2014 03:09 PM

 

Published : 22 Mar 2014 03:09 PM
Last Updated : 22 Mar 2014 03:09 PM

"இன்னும் ஒரு வருடத்துக்கு கதை இருக்கிறது"

நாதஸ்வரம் தொடர் 1000 பகுதிகளை தாண்டி ஒளிபரப்பாகிறது. குறிப்பாக 1000 வது எபிசோடை நேரடியாக ஒளிபரப்பி கின்னஸ் சாதனையையும் நாதஸ்வரம் டீம் பெற்றிருக்கிறது. இந்த சூழ்நிலையில் நாதஸ்வரம் தொடரின் இயக்குநர் திருமுருகனை காரைக்குடியில் சந்தித்தோம். மயில் (பூவிலங்கு மோகன்) ஜெயிலிலிருந்து வீடு திரும்பும் காட்சியை படமாக்கிக் கொண்டிந்தார். கிடைத்த இடைவெளியில் அவரிடம் பேசினோம். அந்த உரையாடலிலிருந்து..

மெட்டி ஒலி தொடர் பெரிய ஹிட். அதன் பிறகு எப்படி சினிமா இயக்கும் வாய்ப்பு கிடைத்தது?

இதற்கு சத்ய ஜோதி தியாராஜன் சார்தான் முக்கியக் காரணம். அவர்தான் எப்ப கதை சொல்ல போறீங்க என்று கேட்டுக்கொண்டே இருப்பார். அப்படி கிடைத்ததுதான் ‘எம் மகன்’. இப்போது கூட எப்போது சந்தித்தாலும் எப்போது படம், என்ன கதை என்றுதான் என்னிடம் கேட்பார்.

இரண்டு படம் இயக்கிய பிறகு ஏன் மீண்டும் சின்னத்திரைக்கு?

சன் டிவியில் தொடர் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் என்னிடம் இயக்குமாறு கேட்டார்கள். ஆனால் நானே தயாரிக்க வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு சன் டிவியில் ஸ்லாட் கிடைத்தது. இதை ஒரு கம்பெனியாக பெரிய அளவில் வளர்த்துவிடும் பட்சத்தில் என்னை சுற்றி இருக்கும் நபர்களுக்கும் ஒரு வாய்ப்புக் கிடைக்கும். அதன் பிறகு இன்னும் தைரியமாக அடுத்த சினிமாவை நோக்கிச் செல்லலாம்.

கடந்த மூன்று வருடங்களில் சீரியலில் இருப்பதை விட சினிமாவில் இருந்திருக்கும் பட்சத்தில் தனிப்பட்ட முறையில் இன்னும் பெரிய இயக்குநராக வந்திருக்கலாமே?

வந்திருக்கலாம்தான். ஆனால் என்னுடன் இருக்கும் டீம், செட்டில் ஆக வேண்டும் என்று நினைத்தேன். இப்போது அவர்களும் செட்டில் ஆகிவிட்டார்கள். இனி தாராளமாக சினிமாவுக்கு வரலாம்.

‘மெட்டிஒலி’, ‘காவேரி’, ‘சித்தி’ என முழுக்க பெண்களை மையமாக வைத்துதான் சீரியல்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால் நீங்கள் ‘நாதஸ்வரம்’ என்று பெயர் வைக்கக் காரணம் என்ன?

இசை பின்னணியில் ஒரு கதை எடுக்க வேண்டும் என்று விரும்பி னேன். இரண்டாவது நாதஸ்வர இசை எனக்கு மிகவும் பிடிக்கும். வெளியே கிளம்பும்போது அதை கேட்டுவிட்டுதான் கிளம்புவேன். குடும்பம் என்பது நாதஸ்வரம் போலதான். நாதஸ்வரத்தில் இருக்கும் துளைகள் எல்லாம் குடும்ப உறுப்பினர்கள். ஆனால் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்கும்போதுதான் இனிய இசையாக இருக்கும். அதை மையமாக வைத்துதான் இதை எடுத்தோம்.

நீங்கள், மௌலி, பூவிலங்கு மோகன். இவர்களை தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள். இதற்கு ஒரு கிரியேட்டராக கதை மேல் இருக்கும் நம்பிக்கையா இல்லை ஒரு தயாரிப்பாளராக பட்ஜெட் இடையூறுகளா?

பட்ஜெட் அடிப்படையில் பார்க்கும் போது இது மிகவும் காஸ்ட்லி. இந்த தொடரை முழுக்க காரைக்குடியில்தான் நடத்துகிறேன். நாங்கள் ஒவ்வொரு ஊருக்கும் சென்று நேரடியாக படப்பிடிப்பு நடத்துகிறோம். மேலும் தனியாக தெரிய வேண்டும் என்று நான் நினைத்தேன். ஏற்கெனவே இருக்கும் நடிகர்களை பயன்படுத்தும்போது ஒரு சிரீயலில் அக்காவாக இருக்கும் நடிகையை இங்கு மனைவியாக நடிக்க வைக்க வேண்டி இருக்கும். இது பார்வையாளர்களைக் குழப்பும். ஒரு ஃபிரேமை பார்த்தால் கூட இது நாதஸ்வரம் என்று தெரியவேண்டும் என்று நினைத்தோம். இதற்காக புதியவர்களைத் தேர்ந்தெடுத்தோம். முதல் ஆறு மாதம் அவர்களுக்கு எதுவுமே தெரியாது. ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஆறு நிமிஷம் திரையில் ஓடுகிற அளவுக்கே எடுக்க முடிந்தது. ஆனால் தொழில்முறை நடிகர்களை வைத்து எடுக்கும் போது ஒரு நாளைக்கு ஒன்றரை எபிசோட் எடுக்க முடியும். காரைக்குடியிலிருந்து நடிப்பவர்கள் இரண்டு பேர்தான். மீதி அனைவருக்கும் தங்கும் வசதி, சாப்பாடு எல்லாவற்றையும் செய்ய வேண்டும். எந்த பட்ஜெட் பெரியது என்று நான் சொல்லத் தேவையில்லை.

புதுமுகங்களுடன் நடிக்க மௌலி எப்படி ஒப்புக்கொண்டார்?

முதலில் இதை பற்றி சொன்னவுடன் எப்படி எப்படி என்று கேள்விகேட்டார். இருந்தாலும் நிறைய டெஸ்ட் வைத்துதான் எடுப்போம் என்று சொன்னேன். மௌலியும் ஒரு டைரக்டர் என்பதால் புரிந்தது. அவரும் பூவிலங்கு மோகனும் ஒப்புக்கொண்டதை தாண்டி இங்கு இவர்கள் இருவரும் மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுத்தார்கள்.

மலர், ராகினி, மஹா என உங்கள் சீரியலில் இரண்டு திருமணங்கள் செய்தவர்கள் அதிகம். கதையை வளர்க்க இந்த யுக்தியை பயன் படுத்துவதுபோல தெரிகிறதே?

கதையை வளர்ப்பதற்காக இதைச் செய்யவில்லை. 10 வருஷத்துக்கு முன்பு ‘மெட்டி ஒலி’ செய்யும் போது அதில் இதுபோன்ற சூழல்கள் இருக்கும். அதில் கணவன் மனைவி யார் யாரை டார்ச்சர் செய்தாலும், அது நடைமுறை யதார்த்தம் என்று நினைத்தேன். ஆனால் இப்போது நிலைமை வேறு. நம்முடைய குழந்தைகளை இழக்கக் கூடிய அபாயம் இருப்பதால்தான் இது போன்று செய்கிறோம். அதற்காக எடுத்தவுடனே அந்த பந்தத்தை முறிக்கச் சொல்லவில்லை. முதலில் திருத்தப்பாருங்கள். முடியவில்லை என்றால் வேறு வழி இல்லையே. புரிதலுடன் வாழ்வதுதான் சுகம்.

1000 எபிசோடுக்கு பிறகும் என்ன இருக்கிறது?

எனக்கும் எப்போது முடிப்பேன் என்று தெரியாது. கதை தேவைப்படும் வரையில் எடுத்துச் செல்வேன். இப்போதைக்கு ஒரு வருடத்துக்கு கதை இருக்கிறது.

மற்ற சீரியல்கள் பார்ப்பீர்களா?

ஷூட்டிங், டிஸ்கஷன், டப்பிங் என போய்க்கொண்டே இருக்கிறோம். பார்க்கவேண்டும் என்று நினைப்பேன். ஆனால் நேரம் இருப்பதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x