

ஒரு ‘நல்ல’ அம்மா திடீரென்று ‘மோசமான’ அம்மாவாக மாறினால் எப்படியிருக்கும்? ‘பேட் மாம்ஸ்’ (Bad Moms) என்னும் ஹாலிவுட் படத்தைப் பாருங்கள் புரியும்.
வழக்கமாக நாம் போற்றும் ‘நல்ல’ அம்மாக்கள் எப்படி இருப்பார்கள்? தன் குழந்தைகளுக்கு ஒரு உன்னதத் தாயாகவும் கணவருக்கு உன்னத மனைவியாகவும் இருப்பார்கள். ஒட்டுமொத்தத்தில் பரிபூரணமான குடும்பத் தலைவியாக இருப்பதும்தான் ஒவ்வொரு அம்மாவின் லட்சியமும் கனவும். இதையெல்லாம் லட்சியம், கனவு என்று சொல்வதைவிட இவற்றை இயல்பிலேயே மாபெரும் கடமையாக ஏற்றுக்கொண்டு வாழ்பவர்கள்தான் பெரும்பாலான தாய்மார்கள்.
காலையில் கணவனும் குழந்தைகளும் கண் விழிப்பதற்கு முன்பே எழுவார்கள். காபி போட்டுவைத்துக் கணவரை எழுப்பி, குழந்தைகளையும் எழுப்பி காபி கொடுப்பார்கள். குழந்தைகளைக் காலைக்கடன்கள் கழிக்கச் செய்து, அவர்களைக் குளிப்பாட்டி, அவர்களுக்கு உணவு தந்து, குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கும் கணவன்மார்களை அலுவலகத்துக்கும் அனுப்பிவைத்துவிட்டு அதற்கப்புறம்தான் அவர்களுக்குக் காலை உணவு.
களைப்பு ஏற்பட்டாலும் அவர்கள் சோர்ந்து உட்கார்ந்துவிட முடியாது. எல்லோரும் வீடு திரும்புவதற்கு முன்பு ஆற்ற வேண்டிய கடமைகள், அதாவது வீடு சுத்தம் செய்வது, துணிகளைத் துவைப்பது இத்யாதி, இத்யாதி என்று ஏராளமாக இருக்கின்றன. அதன் பிறகு இரவு உணவு, இதர வேலைகள் என்று கொத்தடிமைகளை விட அதிகமான பணிகளைச் சுமந்துகொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அலுப்பும் சலிப்பும் ஏற்படுவதற்கு அவகாசமே இல்லாத அளவுக்கு வேலைகள், அத்தனையும் ஊதியமில்லாத வேலைகள். வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் என்றால் இன்னும் கூடுதல் சுமை.
இப்படிப்பட்ட தாய்மார்கள் திடீரென்று ஒருநாள், “பரிபூரணத் தாயாக இருப்பதற்காக நான் பட்ட கஷ்டங்களெல்லாம் போதும். இனி எனக்கான வாழ்க்கையை நான் வாழப் போகிறேன்” என்று முடிவெடுத்தால் எப்படி இருக்கும்? அதுதான் ‘மோசமான தாய்மார்கள்’ அதாவது ‘பேட் மாம்ஸ்’ (Bad Moms) ஹாலிவுட் படத்தின் கரு.
‘ஹேங்ஓவர்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர்கள் ஜோன் லூகாஸ், ஸ்காட் மூர் ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படம் ஜூலை 29-ம் தேதியன்று வெளியாகவிருக்கிறது. மிலா குனிஸ், கிறிஸ்டன் பெல், கேத்தரின் ஹன் போன்றோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.
ஆமி மிட்சல் என்ற கதாபாத்திரத்தில் ‘பரிபூரண அம்மா’வாக இந்தப் படத்தில் மிலா குனிஸ் நடித்திருக்கிறார். குழந்தைகள், கணவன், தினசரி வேலைகள் என்று பரபரப்பாகக் கழியும் அவரது வாழ்க்கை திடீரென்று வெடிக்கும் கட்டத்துக்கு வந்துவிடுகிறது. எல்லாம் போதும் என்று முடிவெடுத்து அவரது சகாக்களுடன் சேர்ந்து ‘மோசமான அம்மா’வாக உருவெடுக்கிறார் மிலா குனிஸ்.
இந்த ‘மோசமான அம்மா’க்களின் லட்சியமே ‘பரிபூரண அம்மா’க்களை விடுவித்து அவர்களுக்குச் சுதந்திர வாழ்க்கையின் இன்பங்களைக் காட்டுவதுதான். ‘பரிபூரண அம்மா’க்களாக வாழ்வதை லட்சியமாகக் கொண்டிருக்கும் குழுவை இவர்கள் சந்திக்கிறார்கள். அப்போது என்ன ஆகிறது என்பதை நகைச்சுவைக் கொண்டாட்டத்துடன் எடுத்திருக்கிறார்கள்.
‘மோசமான அம்மா’க்களுக்கும் ‘பரிபூரண அம்மா’க்களுக்கும் இடையிலான இந்த நகைச்சுவைப் போராட்டத்தைக் காண ஜூலை 29-ம் தேதிவரை காத்திருங்கள்!