திரை விமர்சனம்: சத்ரியன்

திரை விமர்சனம்: சத்ரியன்
Updated on
2 min read

ஒரு ரவுடி காதலுக்காக, தன் தொழிலைக் கைவிட நினைத்தால் அவனது வாழ்க்கையில் என்ன நடக் கும் என்ற ஒற்றை வரிக் கதைதான் ‘சத்ரியன்’.

திருச்சியில் எதிரும் புதிருமாக இரண்டு ரவுடிக் குழுக்கள். உள்ளூர் அமைச்சர் தனது ஆதாயத்துக் காக இந்த இரண்டு குழுக்களையும் பயன்படுத்தி வருகிறார். இதில் ஒரு குழுவின் தலைவன் இனி தேவைப்படமாட்டான் என்று முடிவெடுக்கும் அவர், இன்னொரு குழுவை வைத்து அவனைக் கொல்கிறார்.

கொலையானவனின் வலது கையான ரவி, செத் துப் போன தன் லீடரின் மகள் (மஞ்சிமா மோகன்) பாது காப்புக்கு தனது அடியாளான விக்ரம் பிரபுவை அனுப்புகிறார். பாதுகாக்க வந்த விக்ரம் பிரபு மீது மஞ்சிமா மோகனுக்கு காதல் மலர்கிறது. முதலில் மறுத்து, பிறகு ஏற்று... காதலுக்காக ரவுடித் தனத்தை விட முடிவெடுக்கிறார் விக்ரம் பிரபு. இந்த முடிவை ரவுடி சகாக்களும் எதிரிகளும் ஏற்றுக்கொண்டார்களா? காதல் என்னவானது என்ற கேள்விகளுக்கு பதிலாக விரிகிறது திரைக்கதை.

ரவுடியிசத்தின் விதவிதமான முகங்களை காட்டு வதற்கு வடசென்னை, மதுரையை விட்டால் வேறு போக்கிடங்களே கிடையாது என்பதே கோலிவுட்டின் செல்லரித்த கோட்பாடு. அதைத் தகர்த்தெறிந்ததற் காக இயக்குநரைப் பாராட்டலாம். தொழில்முறை ரவுடிகளின் தோற்றம் குறித்த வழக்கமான பார்வை யிலிருந்தும் வெளியே வரவேண்டும் என்பதில் இயக் குநர் காட்டியிருக்கும் ஈடுபாடும் ரசனைக்குரியது.

அரசியலில் இருப்பவர்கள் ரவுடியிசத்தை தங் களுக்கான கேடயமாக எப்படிப் பயன்படுத்திக் கொள் கிறார்கள் என்பதை விவரித்துக் கூறாவிட்டாலும், அமைச்சர் திரையில் தோன்றிப் பேசும் ஒருசில காட்சிகள் மூலம் அதை அழகாக பதிவு செய்துள்ளார் கள். இவர்களைப் போன்றவர்கள் அரிவாளும் துப் பாக்கியும் தூக்காமலேயே அதிகாரம் எனும் ஆயு தத்தை ஒரு கொலைக்கருவியாக எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அழுத்தமாக உணர்த்துகிறது படம்.

“நீ செஞ்ச பாவங்கள்ல மிச்சமிருக் கிற ஏதாவது ஒண்ணு, என்னை மாதிரியே என் மகளோட வாழ்கை யையும் ஆக்கிட்டா நான் என்னப்பா செய்வேன்?" என்று மஞ்சிமாவின் அம்மா கேட்கும் கேள்வி, ரவுடிக்கு வாழ்க்கைப்பட்ட பெண்களின் மனத் தவிப்பை அழுத்தமாகச் சொல்லிவிடுகிறது.

கத்தி, ரத்தம், குற்றம் என தொடங்கும் திரைக்கதை யின் போக்கை பரபரப்பாக நகர்த்தாமல், யதார்த்தத்தை விட்டு விலகாமல் நிதானமாக கொண்டு செல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன். இதனால் படம் மெதுவாக நகர்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ரவுடிகள் தாங்களாகவே அடித்துக்கொண்டு சாகட்டும் என்று விட்டுவிடும் காவல்துறையின் அணுகுமுறை, யதார்த்தத்தில் நடப்பதுதான் என்றாலும்... படத்தில் நகைச்சுவை இல்லாத குறையைப் போக்குகிறது.

ஊரையே நடுங்க வைக்கும் நிழலுலக தாதா, தன் சுயரூபம் தனது வாரிசுகளுக்கு தெரியக்கூடாது என்று நினைக்கிறார். ஆனால் அப்பாவின் ஜீப்பில் அரி வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மறைத்து வைக்கப் பட்டிருப்பது கூடத் தெரியாமல் அவரது மகனும் மகளும் அத்தனை வருடம் வளர்ந்திருக்கிறார்கள் என்பது நம்பும்படியாக இல்லை.

ஐ.டி ஊழியர்போல் இருக்கும் விக்ரம் பிரபு, மடித்துவிடப்பட்ட சட்டை, முறுக்கேறிய கை என முடிந்தவரை ரவுடியாக மாற முயன்றிருக்கிறார். இருப்பினும் பல காட்சிகளில் ஒரேமாதிரியான உணர்ச்சியே அவரது முகத்தில் உறைந்து நிற் கிறது. மஞ்சிமா மோகனின் நடிப்பு இயல்பாக உள்ளது.

எதிரியின் குழுவில் இருக்கும் குணாவின் நண்பன் (ரியோ ராஜ்), மருத்துவர் (கவின் - சரவணன் மீனாட்சி) கதாபாத்திரம் ஆகியவற்றை திரைக்கதையில் நுழைத்திருக்கும் விதம் நன்றாக உள்ளது.

விறுவிறுப்புக்கு ஓரளவு உதவி இருக்கிறது சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை நேர்த்தி.

அரசியலுக்காகவும், அதிகாரத்துக்காகவும் வளர்க்கப்படும் ரவுடிகள்.. அதைக் கைவிட்டு, அன்பும் பாசமும் நிறைந்த வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்ற கருத்தை ஏற்புடைய வகையில் சொல்லியிருந்தாலும்... வன்முறைக் காட்சிகளில் குரூரத்தைக் குறைத்திருந்தால் குடும்பத் தோடு பார்ப்பதில் குறை இருந் திருக்காது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in