Last Updated : 11 Oct, 2013 12:29 PM

1  

Published : 11 Oct 2013 12:29 PM
Last Updated : 11 Oct 2013 12:29 PM

நஸ்ரியா தொடங்கிய யுத்தம்: பெண் மீது தொடரும் அத்துமீறல்கள்!

துணிச்சலான அதேநேரம் அபூர்வமான எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார் இளம் நாயகியான நஸ்ரியா.

சினிமாவுக்கு நடிக்க வரும் பெண்கள் ‘ நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்’ என் உடல் அங்கங்களை வெளிபடுத்த மாட்டேன்’ என்று எதிர்ப்பு காட்டினால், “ அப்புறம் எதுக்கு சினிமாவுக்கு வந்தே?” என்று கேள்வி கேட்கப்படுகிறாள். இந்த இடத்தில் திரை நடிப்பை, தேர்ந்து கொள்ளும் எல்லா பெண்களும், சுயத்தை இழந்தவர்களாகவே இருக்க வேண்டும்!” என்ற முன்தீர்மானம், சம்மந்தப்பட்ட பெண்ணின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தவறிவிடுகிறது…தற்போது நஸ்ரியாவுக்கு நடந்திருப்பதும் அதுதான்.

நஸ்ரியா விளம்பரத்துக்காக இப்படிச் செய்கிறார் என்று இயக்குனர் சற்குணம் இப்போது சொல்கிறார். முதலில் சர்ச்சைக்குரிய அந்தக் காட்சியை ’பாடி டபுள்’ உத்தியை வைத்து படமாக்கியதாக சொல்லியவர் தற்போது தனது அறிக்கை வழியாக நஸ்ரியாதான் அந்தக் காட்சியில் நடித்துள்ளார் என்று முன்பு கூறியதையே மறுக்கிறார். நஸ்ரியாவே அக்காட்சியில் நடிதிதருந்தாலும், அந்தக் காட்சி திரைப்படத்தில் இடம்பெறுவதை மறுப்பதற்கு அவருக்கு உரிமை இல்லையா என்பதே இப்போதைய கேள்வி.

நடிகையாக இருந்தாலும் சரி, நடிகராக இருந்தாலும் சரி அவர்கள் நடிக்க வேண்டிய காட்சிகள் குறித்து முன்பே இயக்குனர் அனுமதி வாங்குவதே முறை என்கிறார் நடிகை ஊர்வசி. “ நஸ்ரியாவை பாடி டபுள் முறையில் கவர்ச்சிகரமாகச் சித்தரிக்க நினைத்தது பாதகமான செயல். ஒரு இயக்குனர் தனது கதையை நம்பவேண்டும். இந்த ஒரு ஷாட்டையும் அல்லது ஒரு பாடலையும் வைத்துதான் தனது படம் ஓடும் என்று ஒரு இயக்குனர் நம்பினால் அவருக்கு தன் மீது நம்பிக்கை இல்லை என்று அர்த்தம். பாடி டபுள் மட்டுமல்ல, நட்சத்திரங்களின் விருப்பமில்லாமல், வாய்ஸ் ஓவராக, அவர்கள் தோன்றும் காட்சியின் மீது, ஒரு இரட்டை அர்த்த வசனத்தை ஒலிக்கவிடுவதோ, அல்லது குறியீடாக ஒரு காட்சியை காட்டுவதே கூட சீட்டிங்தான். நான் இளம் வயதில் திரையில் நுழைந்தவள். இதுபோன்ற காட்சிகளில் நடிக்க முடியாது என்று அழுது அடம்பிடித்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் நிறைய இருந்தும் மனம் வெறுத்து மலையாளத் திரையுலக்கு திரும்பியதற்கு இதுவும் முக்கிய காரணம். தான் நடித்ததாக வேறொரு உடலைக் காட்டும்போது எங்களுக்கு ஏற்படும் மனவேதனை அளவிடமுடியாது. நஸ்ரியா உணர்ந்ததும் அதைத்தான்” என்கிறார். “ நடிப்பவர் விருப்பமில்லை என்று மறுத்துவிட்டால், பாடி டபுள் பயன்படுத்த இயக்குனருக்கு உரிமையில்லை!” என்று இதையே எதிரொலிக்கிறார் மற்றொரு மூத்த நாயகியான அம்பிகா.

“ மேலைநாடுகளின் திரையுல விதிகளின்படி, படத்தில் ஒப்பந்தம் செய்யும்போதே ,இந்த கால்ஷீட்டில் நீங்கள், இவ்வாறு கவர்ச்சியாக தோன்ற வேண்டியிருக்கும் என்பதை குறிப்பீட்டு, முன் அனுமதியும், சமந்தப்பட்ட நட்சத்திரத்தின் இசைவும் பெற்றபிறகே அவரை அவ்வாறு படம்பிடிக்க முடியும். ஆனால் நஸ்ரியா விவகாரத்தில், அவர் ஆரம்பத்திலேயே கவர்ச்சியான காட்சிகளில் நடிக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார். திட்டமிட்ட உரிமை மீறல்தான். “ என்கிறார் எழுத்தாளர் பிரேமா ரேவதி.

பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதற்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட நிலையிலும், சர்ச்சைக்குரிய பல படங்களுக்கு ‘யூ’ சான்றிதழே கிடைத்துவிடுவதுதான் இங்கே ஆச்சர்யமானது.. “ இன்று நடிக்க வரும் பெண்கள் அத்தனை பேருமே சமரசம் செய்து கொள்வதில்லை. நல்ல கல்வி அறிவுடன், திரைப்படத்துறையை நல்ல தொழில்துறையாக எண்ணி, பணம், புகழைத் தேடி வருபவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். அவரை தவறாக மதிப்பிடக் கூடாது. நான் இப்படி நடிக்கமாட்டேன் என்று சொன்னால், அவர்களை கட்டாயபடுத்தக் கூடாது! மேலும் சம்மந்தப்பட்ட இயக்குனர், நடிக்க வரும் பெண்களை தனது சகோதரியாகப் பார்த்திருக்க வேண்டும். பாடி டபுள் என்பதை பயன்படுத்தவே தடை விதிக்க வேண்டும். நான் மட்டும் இன்று தனிக்கைக் குழுவில் இருந்திருந்தால் இந்த அநிதியை அனுமதித்திருக்கமாட்டேன்” என்கிறார் முன்னாள் தனிக்கை குழு உறுப்பினரும், பாரதிய ஜனதாகட்சியில் பொறுப்பு வகித்து வருபவருமான திருமதி லலிதா சுபாஷ்.

தமிழ் சினிமாவுலகில் தற்போது முன்னணி வரிசையில் இருக்கும் நடிகைகளில் ஒருவர் நஸ்ரியா. அவர் தொடர்பாக உருவாகியிருக்கும் சர்ச்சை குறித்து இயக்குனர் சற்குணம் கொடுத்த அறிக்கையிலேயே ஒருமையில் நடித்துகொடுத்துவிட்டுப் போ என்று சொன்னதாக கூறியிருக்கிறார். அப்படிச் சொல்லியிருக்கும் த்வனியிலேயே மரியாதையின்மை இருக்கிறது. எத்தனை முன்னணி நட்சத்திரமாக இருந்தாலும் பெண்தானே என்ற அலட்சியம் இருக்கிறது. முன்னணி நடிகைக்கே இப்படியான நிலை இருந்தால், தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடிக்கும் பெண்களுக்கும், துணைப் பாத்திரங்களுக்கும், சிறு பணிகளில் ஈடுபடுபவர்களுக்கும் என்ன மரியாதையை திரை உலகம் கொடுக்கும் என்பதுதான் வேதனையான கேள்வியாக உள்ளது.

“பொறுத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்” பாடி டபுளாகப் பணிபுரியும் பெண்ணின் அனுபவம்!

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஏன் மலையாளப் படங்களில் கூட பாடி டபுளாக சுமார் 60 படங்களில் நடித்திருக்கிறேன். பாடி டபுளாக நடிக்க, விதவிதமான, ஒப்பனைகளை ஏற்றுக்கொள்ளும் நிறமும், சுருக்கம் இல்லாத சருமமும் அவசியம். எந்த கதாநாயகிக்கு பாடி டபிள் செய்கிறோமோ, அந்தப் படத்தின் கதாநாயகனுடன் சில ஷாட்களில் நடிக்கும் வாய்ப்பு பல படங்களில் அமைந்துவிடும். அந்த பிரமிப்பில் ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டு நடித்திருக்கிறேன். ஆனால் பாடி டபுள் செய்பவள் என்றால் ஏதோ தவறான பெண் என்பதைப் போல, ஒரு 'ஹாய்' சொல்வதோடு நிறுத்துக்கொள்வார்கள். தொப்புள், பின்புறம், மார்பு, கழுத்து, பாதங்கள், தொடைகள் எனப் பல பகுதிகளைப் படமாக்கியிருக்கிறார்கள். படமாக்கும் நேரத்தில், சரிசெய்கிறோம் என்ற போர்வையில் ஒருசில இயக்குனர், ஒளிபதிவாளரின் சில்மிஷங்களை நாம் பொறுத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.

கதாநாயகி நடித்த ஷாட்டுடன் பொருந்தும் வரை ஒப்பட்டுப் பார்த்து திரும்பத் திரும்பக் காட்சிகளை எடுத்துக்கொண்டே இருப்பார்கள். பாடி டபுள் முறையில் எடிட்டிங் மூலம் செருகப்படும் ஷாட்டுகளைத் தொடர்ந்து, படத்தின் கதாநாயகி நடித்த ஷாட்டுகள் வருவதால், இந்தக் காட்சியில் அவர் நடித்த உணர்வுதான் படம் பார்ப்பவர்களுக்கு இருக்கும். இது என் மனசாட்சியை உறுத்தியதால்தான் இதிலிருந்து வெளியேறி வெறுமனே , ‘ஹேண்ட் மாடலாக’ மாறினேன். இப்போது எனது கைகள் மட்டும் பிரபல காபி விளம்பரத்திலும், நகைக்கடை விளம்பரத்திலும் நடித்திருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x