Last Updated : 03 Jun, 2016 10:30 AM

 

Published : 03 Jun 2016 10:30 AM
Last Updated : 03 Jun 2016 10:30 AM

திரையில் மிளிரும் வரிகள் 16: நெஞ்சின் அலை உறங்காது...

ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனனை சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு தென்னக ரயில்வேயில் நடந்த ஒரு விழாவில் சந்தித்தேன். அவருடைய சகோதரர் ரயில்வேயில் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். இன்னொரு அதிகாரியின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

அவரோடு பேசிக்கொண்டிருந்த போது ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணாமூச்சி ஏனடா’ என்ற பாடல் குறித்து விவாதம் திரும்பியது. நாட்டைக்குறிஞ்சியில்தான் அப்பாடல் அமைய வேண்டும் என்று ஏ.ஆர்.ரஹ்மானிடம் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில்தான் அதன் மெட்டு அமைக்கப்பட்டது என்று தெரிவித்தார். பாடலை எழுதியர் வைரமுத்து.

கருணைப் பிரவாகம் எடுக்கும் ஒரு ராகம் நாட்டைக்குறிஞ்சி. தமிழர்களின் திருமண நிகழ்ச்சியில் தாலிகட்டு நடக்கும்போது நாட்டைக்குறிஞ்சியே நாகசுரத்தில் வாசிக்கப்படும். சுருள் சுருளாக நீண்ட கார்வைகளுடன் அந்த ராகத்தை வாசித்து சுவாதித் திருநாள் மகாராஜாவின் ‘மாமவசதா வரதே’ கீர்த்தனையை காருக்குறிச்சி அருணாசலம் வாசித்திருப்பதை எத்தனையோ ஆண்டுகளாகக் கேட்டுவருகிறேன்.

அதே கீர்த்தனையை வேதாரண்யம் வேதமூர்த்தியும் வாசித்திருக்கிறார். ஆரவாரம் இல்லாத சமுத்திரத்தில் ஒரே சீராக அலைகள் எழுவதும் தாழ்வதும் போல அவர் அந்த ராகத்தை வாசித்திருப்பார். சம்பிரதாயமான நாட்டைக் குறிஞ்சியைக் கேட்க வேண்டுமானால் வேதமூர்த்தியின் வாசிப்பே எல்லாவற்றுக்கும் முன்னால் நிற்கும்.

‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படத்தில் கதாநாயகியின் சார்பாக அவள் காதலனை நோக்கி அவளுடைய தங்கை பாடுவது போல் பாடல் அமைக்கப்பட்டுள்ளது. காதலியின் பொருட்டு அவள் தோழிகளும் அன்னைமாரும் பேசுவது தமிழ் இலக்கியத்தில் குறிப்பாக பக்தி இலக்கியத்தில் ஏராளமான பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

‘செங்கயல் பாய் நீர் திரவரங்கத்தாய் இவள் திறத்தென் செய்கின்றாயே’ என்று கங்குலும் பகலும் கண் துயிலாமல் கண்ணீர் பெருக பெருமாளின் நினைவாகவே உருகிக்கொண்டிருக்கும் மகளின் நிலையை உரைக்கும் தாயின் பாவத்தில் நம்மாழ்வார் அருளியிருக்கிறார்.

அதே போல் பெண்ணின் மனதை இப்பாடலில் அற்புதமாகப் படம் பிடிக்கிறார் வைரமுத்து. கண்ணாமூச்சி காட்டும் காதலனிடம் தன் சகோதரி ‘கண்ணாடிப் பொருள்’ என்கிறாள். ஒரு வகையில் அனிச்ச மலர் போலத்தான். மோப்பக் குழைந்துவிடும் மலர். சற்று கவனக் குறைவாக இருந்தாலும் உராய்வுகள் ஏற்படலாம் அல்லது உடைந்து சிதறிப் போகலாம். பின்னர் ஒட்ட வைப்பது அத்தனை எளிதல்லவே.

நதியைக் கேட்கலாம். ஆனால் நதியின் கரையைக் கேட்பதாகக் கூறுகிறாள். நதி நிற்காமல் ஓடிக்கொண்டி ருக்கிறது. கரை இடம்பெயர்வதில்லை. அந்த நம்பிக்கையில் கேட்கிறாள். அது போல் காற்றை நிறுத்திக் கேட்கிறாள். வான்வெளியைக் கேட்கிறாள். விடை கிடைக்காததால் இறுதி யாக ‘உன்னைக் கண்டேன்’ அதுவும் ‘இருதயப் பூவில் கண்டேன்’ என்கிறாள்.

அனுபல்லவி தொடங்குவதற்கு முன்னால் வயலினில் நாட்டைக் குறிஞ்சி வழிந்தோடி காதுகளை நிறைக்கிறது.

மறுபடியும் கேள்விகளால் துளைத்தெடுக்கிறாள்.

என் மனம் உனக்கென விளையாட்டு பொம்மையா?

எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா?

நெஞ்சின் அலை உறங்காது.

உன் இதழ் கொண்டு என் வாய் மூட வா என் கண்ணா

உன் இமைகொண்டு விழி மூட வா என் கண்ணா

உன் உடல்தான் என் உடையல்லவா

பாற்கடலில் ஆடிய பின்னும் உன்

வண்ணம் மாறவில்லை இன்னும்

என் நெஞ்சில் கூடியே நிறம் மாற வா

என் உயிரில் நீ வந்து சேர்க

என் உதடுகள் ஈரமாய் வாழ்க

கலந்திட வா…

‘நானொரு விளையாட்டு பொம்மையா’ என்று அம்பாளிடம் பாபநாசன் சிவன் கேட்கிறார். மனத்தை விளையாட்டு பொம்மையாகக் கையாளும் காதலன் இங்கே கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறான். சட்டனெக் கோபம் தணிந்து காமம் வெளிப்படுகிறது. இதழால் இதழ் மூடி, இமைகளால் இமைகளை மூடி ஆரத் தழுவும் ஆலிங்கனத்துக்கு அழைப்பு விடுக்கிறாள்.

‘உன் உடல்தான் என் உடையல்லவா’ என்ற வரிகள் கவிதையின் உச்சம். “பூசும் சாந்தென் நெஞ்சமே” என்ற நம்மாழ்வார் பாசுரத்தை இங்கு குறிப்பிடலாம், நெஞ்சத்தையே சாந்தாகப் பூசுகிறார் ஆழ்வார்.

அனுபல்லவி வரிகள் திருமங்கையாழ்வாரின் திருக்குறுந்தாண்டகத்தை நினைவுபடுத்துகின்றன.

வான் மழை விழும்போது மலை கொண்டு காத்தாய்

கண் மழை விழும்போது எதில் என்னைக் காப்பாய்

பூவின் கண்ணீரை ரசிப்பாய்

நானென்ன பெண்ணில்லையா என் கண்ணா அதை

நீ காணக் கண்ணில்லையா என் கண்ணா

உன் கனவுகளில் நானில்லையா

என்று வரிகள் நீள்கின்றன.

திருக்குறுந்தாண்டகத்திலும் பரகால நாயகி கண்ணீர் உகுத்துக்கொண்டிருக்கிறாள். எப்படித் தெரியுமா? ‘கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்றும் காமரு பூங்கச்சி ஊரகத்தாய் என்றும்’ பெருமாள் பேரைக் கிளிக்குச் சொல்லிக்கொடுத்து அது அதை மீண்டும் சொல்லக் கேட்டு ‘துணை முலைமேல் துளிசோர சேர்கின்றாளே’ என்று மகளின் நிலை குறித்துத் தாய் கலங்கி நிற்கிறாள்.

தமிழ்க் கவிதையின் நீண்ட பாரம்பரியம் இந்தத் திரைப்படப் பாடலில் தொடர்கிறது. வேதாரண்யம் வேதமூர்த்தியையும் திருமங்கை மன்னனையும் மீண்டும் மீண்டும் படித்தாலும் திகட்டுவதில்லை. கண்ணாமூச்சி பாடலும் அப்படியே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x