திரை விமர்சனம்: சுல்தான்

திரை விமர்சனம்: சுல்தான்
Updated on
2 min read

சல்மான் கானும், அனுஷ்கா ஷர்மாவும் மல்யுத்த வீரர்களாக நடிக்கிறார்கள் என்பதாலேயே ரசிகர்களிடம் ‘சுல்தான்’ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. அத்துடன், ‘ரேப்’என்ற புண்படுத்தும் ஒப்பீட்டை வைத்து சல்மான் கான் வெளியிட்ட குறித்த சல்மானின் மோசமான கருத்துகளும் படத்துக்கு சர்ச்சைக்குரிய விளம்பரமாக அமைந்திருந்தன.

‘மேரி பிரதர் கி துல்ஹன்’, ‘குண்டே’ போன்ற படங்களைக் கொடுத்த இயக்குநர் அலி அப்பாஸ் ஜஃபர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ஆகாஷ் ஓபராய் (அமித் சத்) ‘புரோ டேக் டவுன்’ என்ற மிக்ஸ்டு மார்ஷியல் லீகை இந்தியாவில் பிரபலப்படுத்தும் கனவில் இருக்கும் இளம் விளம்பரதாரர். ஆனால், பல்வேறு காரணங்களால் அவர் எடுக்கும் முயற்சி கள் எல்லாம் தோல்வியடைகின்றன. கடைசி முயற்சி யாக அவருடைய அப்பாவின் (பரிக்ஷித் சாஹ்னி) அறிவுரைப்படி, சுல்தானை (சல்மான் கான்) இந்த லீகில் கலந்துகொள்ள வைக்க நினைக்கிறார். சுல்தானைத் தேடி ஹரியாணாவுக்கு வருகிறார். ஆனால், முன்னாள் உலக சாம்பியன் சுல்தானோ மல்யுத்த விளையாட்டை விட்டு நீங்கிப் பல ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.

அதற்குக் காரணம் சுல்தானின் மனைவி ஆர்ஃபா (அனுஷ்கா ஷர்மா) என்பதும் தெரியவருகிறது. அது என்ன காரணம், ஆகாஷால் சுல்தானை மீண்டும் மல்யுத்த உலகுக்கு அழைத்துவர முடிந்ததா, சுல்தான் - ஆர்ஃபாவின் தாம்பத்திய வாழ்க்கை என்ன ஆகிறது என்பதையெல்லாம் சொல்கிறது ‘சுல்தான்’.

விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட வழக்கமான பாலிவுட் படத்தின் திரைக்கதை எப்படியிருக்குமோ அப்படிதான் இந்தப்படத்தின் திரைக்கதையும் இருக்கிறது. எல்லாம் எப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கிறோமோ அப்படியே நடக்கிறது. சண்டைக் காட்சிகள் நன்கு அமைக்கப்பட்டிருக்கின்றன.

சல்மான் கான் நாற்பது வயதுக் கதாபாத்திரத்தில் நடித்திருப் பதும், அந்தக் கதாபாத்திரத் துக்காகத் தன் வழக்கமான ‘ஹீரோ இமேஜை’ சற்று தளர்த் திக்கொண்டிருப்பதும்தான் படத்தின் புதுமை. சல்மான் இயல்பான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது சிறப்பு.

மல்யுத்த வீராங்கனையாக நடிக்கும் அனுஷ்கா ஷர்மாவின் ஆர்ஃபா கதாபாத்திரம் முற்போக்காக இருக்கும் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால், அதற்கு நேர்மாறாக அது அமைக்கப்பட்டிருக்கிறது. “என்னுடைய அப்பா என்னைப் பையனைப் போல வளர்த் திருக்கிறார்” என்ற ஒரு வசனம் வருகிறது. இந்த மாதிரி பல பிற்போக்குத்தனமான வசனங்களைப் படத்தில் ஆர்ஃபாவை பேச வைத்திருக்கிறார் இயக்குநர்.

மல்யுத்தப் போட்டியில் வெற்றிபெற்றதும் சுல்தானைத் திருமணம் செய்துகொள்ள உடனே சம்மதம் சொல்விடுகிறார் ஆர்ஃபா. அதுவரை, ஒலிம்பிக் ‘கோல்டு மெடல்’ வாங்குவதுதான் தன் கனவு என்று சொல்லிவரும் ஆர்ஃபா, திருமணத்துக்குப் பிறகு, ஒலிம்பிக்கா, குழந்தையா என்ற கேள்விவரும்போது, சர்வ சாதாரணமாகத் தன் கனவைப் பலியிடுகிறார். அதற்காகப் பெரிதாக எந்த வருத்தமும் படவில்லை. “சுல்தான்தான் என்னுடைய கோல்டு மெடல்” என்றும் சொல்கிறார். இப்படி, ஆர்ஃபாவின் கதாபாத்திரம் எந்தவித வலிமையான அம்சமும் இல்லாமல் மேலோட்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

சுல்தானின் பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரன்தீப் ஹூடாவின் நடிப்பு ஹாலி வுட் படங்களின் பயிற்சியாளர்களை நினைவு படுத்துகிறது. சுல்தானின் நண்பனாக கோவிந்த் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆனந்த் ஷர்மா, அமித் சத் போன்றோரின் பங்களிப்பு படத்துக்கு உதவிசெய்கிறது.

விஷால் - சேகரின் பின்னணி இசை படத்தை விறுவிறுப்புடன் நகரவைக்க முயற்சிக்கிறது. ஆனால், அடிக்கடி வரும் பாடல்கள், படத்தின் நீளம் போன்ற அம்சங்கள் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

எப்படியிருந்தாலும் சல்மான் கானின் ரசிகர்களுக்குப் பிடிக் கும் பல அம்சங்களை யும் கொண்டிருக்கிறது இந்த ‘சுல்தான்’.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in