

“அமெரிக்காவில் சினிமாவின் தரத்தை அறிவியலாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பிய, ஈரானிய சினிமாக்கள் அவர்களது கலாச்சாரத்துக்கு ஏற்ற மாதிரி மேக்கிங் தரத்தை மாற்றி ஹாலிவுட் தரத்துக்கு இணையாக போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களைவிட சினிமாவுக்கான உள்ளடக்கம், கதை, கற்பனை வளம் ஆகியவை நம்மிடம் அதிகம் இருக்கின்றன. ஆனால், அவர்கள் போய்க்கொண்டிருக்கும் தூரத்தை நாம் அடைய இன்னும் பல வருடங்கள் ஆகும்!’’ -ஆதங்கத்தோடு பேசத் தொடங்குகிறார், தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திரு என்கிற எஸ். திருநாவுக்கரசு.
‘24’ படத்தின் ஒளிப்பதிவுக்காக அண்மையில் தேசிய விருதைப் பெற்றவர் திருநாவுக்கரசு. அடுத்து அவரது ஒளிப்பதிவில் ‘வனமகன்’ ரிலீஸ், விரைவில் தொடங்கவுள்ள தமிழின் பிரம்மாண்டமான காவியத் திரைப்படமாக உருவாக இருக்கும் ‘சங்கமித்ரா’ படப்பிடிப்பு வேலைகள், கார்த்திக் சுப்பராஜ்- பிரபுதேவா கூட்டணி தொடங்கியுள்ள புதிய படம் எனப் பரபரப்பாக இருந்தவரைச் சந்தித்தோம்.
தேசிய விருது கிடைத்திருப்பதை எப்படி எடுத்துக்கொண்டீர்கள்?
நான் சினிமாவுக்குள் வந்து 20 ஆண்டுகள் ஆகின்றன. மிகப் பெரிய நாடு, பல மொழிகள் பேசும் மக்கள், பல கோணங்களில் தொடர்ச்சியாகப் பல படங்கள் ரிலீஸாகிக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான படங்களும் வந்துகொண்டிருக்கின்றன. அப்படிப் பார்க்கும்போது இதற்கு முன்பே இந்த விருது எனக்குக் கிடைத்திருக்க வேண்டும் என்ற ஆதங்கம் இருந்தாலும், இப்போது கிடைத்திருப்பதில் சந்தோஷம்தான். அதுவும் தமிழ்ப் படத்துக்குக் கிடைத்திருப்பதில் கூடுதலான சந்தோஷம்.
சூர்யா, ஏ.ஆர். ரஹ்மான், விக்ரம் கே.குமார் என்று தேர்ந்த கலைஞர்களுக்கு நடுவே ‘24’ படத்தில் உங்களின் ஒளிப்பதிவு தனித்துக் கவனிக்க வைத்ததே?
தமிழில் அபூர்வமாக வந்த ‘கான்சப்ட்’ படம் ‘24’. அன்றாட மனித வாழ்க்கையில் நடக்கும் உணர்வுகள் என்றில்லாமல் அதற்கும் ஒருபடி மேலேசென்று புதிய உலகத்துக்கான வடிவத்தை ஃபேண்டஸியாகக் கொடுத்த படம் 24. கால இயந்திரம், நிகழ்காலம், முற்காலம் என்று நிறைய யோசித்துச் செய்ய வைத்த காட்சியாக்கத்தைக் கொண்ட திரைக்கதை. இது கொஞ்சம் கஷ்டமான வேலைதான். இதெல்லாம் ‘24’ மாதிரியான படங்களில்தான் சாத்தியம். இந்தப் படத்தில் நான் வேலை பார்க்காமல் வேறொரு ஒளிப்பதி வாளர் வேலை பார்த்திருந்தாலும் நிச்சயம் அதுவும் கவனிக்கப்பட்டி ருக்கும். என்ன ஒன்று, இந்த மாதிரியான பட முயற்சிகள் இங்கே குறைவு.
மாறுபட்ட முயற்சிகள் இங்கே உருவாகமல் போவதற்கு என்ன காரணம்?
ஹாலிவுட்டில் முதலில் ஒரு கதைக் கருவை வைத்துக் கொண்டு அதைத் திரைக்கதையாக உருவாக்கி, தயாரிப்பு வடிவமைப்பு, அதன் பிறகு இயக்கம், ஒளியமைப்பு, ஒலிக்கலவை, நட்சத்திரத் தேர்வு, நடிப்பு என்று இறங்குகிறார்கள். இப்படித்தான் ‘லார்டு ஆஃப் தி ரிங்ஸ்’, ‘ஹாரிபாட்டர்’ மாதிரியான படங்கள் அங்கே உருவாகியுள்ளன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட நம் மகாபாரதத்தில் அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. அதுவும் கற்பனையிலும் நிஜத்திலும் நினைத்துப் பார்க்க முடியாதவை.
அவற்றை வைத்துக்கொண்டு நாம் எவ்வளவு படங்களைக் கொடுக்கலாம் தெரியுமா? நம் முன்னோர்களிடம் இருந்த கற்பனைத் திறன் நம்மிடம் இல்லை. நாம் இப்போது வாழ்வாதாரத்தை நோக்கியே தள்ளப்பட்டிருக்கிறோம். இந்தச் சூழல், நமது கலாச்சாரம், புராணங்கள் ஆகியவற்றின் ஆழத்தைத் தெரிந்துகொள்ள முடியாமல் ஆக்கிவிட்டது. சமீபத்தில் வந்த ‘இன்டெர்ஸ்டெல்லர்’ படத்தில் வேறொரு பிரபஞ்சத்துக்குப் போய் வரும் ஒரு விண்வெளி விஞ்ஞானி பூமிக்குத் திரும்பும்போது அவருடைய மகளின் வயது அதிகமாகியிருக்கும். இது போன்ற கற்பனை நம் புராணங்களிலும் இருந்திருக்கிறது.
அதேபோல ‘அவதார்’ படத்தில் வரும் பாண்டோரா இனம், நம் கற்பக விருட்ச மரத்தையும், கிருஷ்ண அவதாரத்தையும் நினைவுபடுத்துகிறது. நம் கதைகளை நாம சரியாகப் பயன்படுத்துவதைவிட மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். நாமும் நம் கதைகளைப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பிக்க வேண்டும். அதற்கு அறிவியலையும், வியாபார நுணுக்கத்தையும் கலைக்குள் கொண்டுவர வேண்டும்.
இப்போது ‘பாகுபலி’ மாதிரியான படங்கள் வரத் தொடங்கிவிட்டனவே?
‘பாகுபலி’ நல்ல முயற்சிதான். ஆனால், சர்வதேசத் தரமா என்றால் அது கேள்விதான். சர்வதேச அளவிலான தரத்தை நாம் முழுவதும் ஏன் எட்டிப்பிடிக்கவில்லை என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். ஹாலிவுட் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கேமரா, இயக்கம், தயாரிப்பு வடிவமைப்பு ஆகியவற்றில் நிபுணத்துவத்துவம் இருக்கிறது. படத்தின் வியாபாரம் தொடங்கி ஒரு படத்தை எந்த மாதிரியெல்லாம் மக்களிடம் கொண்டுசெல்லலாம் என்று ஒரு கூட்டு முயற்சியாக யோசிக்கிறார்கள். அதெல்லாம் இங்கே இல்லை.
சினிமா சார்ந்த தனியார் கல்வி நிறுவனங்கள் தற்போது இவற்றை யெல்லாம் சொல்லித்தருகின்றனவே?
இந்தியாவில் திரைத்துறைக்காக இருக்கும் கல்வி நிறுவனங்களில் ஒன்றிரண்டுதான் நல்ல விதமாகச் செயல்படுகின்றன. அவற்றிலும் அப்டேட் செய்யப்பட்ட அடிப்படைக் கட்டமைப்பும் சாதன வசதிகளும் குறைவுதான். கல்வி நிறுவனங்களில் நடிப்பு, கேமரா, ஒளி, ஒலியமைப்பு உள்ளிட்ட விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. தயாரிப்பு வடிவமைப்புகான படிப்பும் வேண்டும். ஆறு மாதம், ஓராண்டு கால அளவில் பயிலும் படிப்புகளெல்லாம் எந்த வகையிலும் கைகொடுக்காது. பட்டப் படிப்புக்கென ஒரு கால அவகாசம் இருப்பதுபோல இதற்கும் நிறைய கால அவகாசம் வேண்டும். இன்றைக்கே சர்வதேச அளவிலான தரத்துக்கு இந்தக் கல்வி கட்டமைப்புகள் மாறினாலும் அவை சினிமாவில் எதிரொலிக்க எப்படியும் 20 ஆண்டுகள் ஆகும்.
‘வனமகன்’, ‘சங்கமித்ரா’, கார்த்திக் சுப்பராஜின் புதிய படம் என்று தொடர்ச்சியாகப் படங்களை ஒப்புக்கொண்டிருக்கிறீர்களே?
பொழுதுபோக்கு அம்சங்களோடு சவால்கள் நிறைந்த கதையைத் தேர்வு செய்வது என் விருப்பம். ஒரு கதையைக் கேட்கும்போது அதில் ஒளிப்பதிவுக்கு என்ன சவால் இருக்கும் என்று இயல்பாகவே மூளை அலசும். ‘வனமகன்’ ஒரு புதுமையான முயற்சி. பசுமை சூழ்ந்த இயற்கை பதிவு. இயற்கையோடு சேர்ந்து பயணிக்கும் வாய்ப்பு. படப்பிடிப்பில் இருக்கும் கார்த்திக் சுப்பராஜ் படம் திரில்லர் வகை. அடுத்து ‘சங்கமித்ரா’, சவாலோடு வேலை பார்க்க நிறைய வாய்ப்புள்ள கதை. ஒன்றோடு ஒன்று மாறுபட்டிருப்பதால் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டேன்.
அடுத்த இலக்கு திரைப்பட இயக்கம்தானே?
இயக்கம் என்பது ஒரு தனிக்கலை. அதற்கான உழைப்பும் கால அவகாசமும் மிக முக்கியம். ஒளிப்பதிவாளராக ஓடிக்கொண்டிருப்பதால் சரியாக நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால்தான் இயக்கம் தள்ளிப் போகிறது. கால அவகாசம் அமையும் போது கண்டிப்பாக இயக்குவேன்.
குடும்பம்?
சினிமாவை வேறொரு காரணத்துக்காக சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்றால் அது எனக்கு கஷ்டம். ஆனால், ஒரு கட்டிடக் கலை நிபுணரான என் மனைவி தனது கனவுகளை, எனக்காக ஒதுக்கி வைத்துவிட்டுக் குடும்பத்தை முழுமையாகப் பார்த்துக்கொள்கிறார். அதனால்தான் நான் நினைத்த மாதிரி என்னால் ஓட முடிகிறது. அவருக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.