

தினமொரு கதாநாயகி தோன்றி மறையும் திரையுலகில் அஞ்சலி தேவியைப் போல் எல்லோருமே துருவ நட்சத்திரம் ஆகிவிடுவதில்லை. கருப்பு வெள்ளை காலத்தின் சாதனைப் பட்டியலில் மயக்கும் அழகி என்று கொண்டாடப்பட்டவர். மிகை குறைந்த நடிப்பு, நளினமான நடனம், கச்சிதமான வசன உச்சரிப்பு ஆகியவற்றுக்காகக் கொண்டாடப்பட்ட அவரை நிறைவான கதாபாத்திரங்கள் தேடி வந்ததில் ஆச்சரியமில்லை.
40 வயதைக் கடந்த தமிழ் ரசிகர்களுக்கு அஞ்சலிதேவி என்றதுமே சட்டென்று நினைவுத் திரையில் உயிர்பெறுவது, ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ படத்தில் இடம்பெற்ற ‘அழைக்காதே நினைக்காதே அவைதனிலே என்னையே ராஜா ஆருயிரே’ பாடல் காட்சியில் இடம்பெற்ற அவரது நளினமான நடனம்தான். அந்த அளவுக்கு அவரது நடனம் என்றைக்கும் ரசிக்கக்கூடிய வகையில் படம்பிடிக்கப்பட்டிருந்தது.
ஆந்திரம் கொடுத்த அற்புதம்
அஞ்சனி தேவி என்ற இயற்பெயரைக் கொண்ட அஞ்சலி தேவி ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பெத்தாபுரம் என்ற ஊரில் நூக்கையா என்பவருக்கு மகளாகப் பிறந்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்த அஞ்சலி தேவி தெலுங்குத் திரையுலகில் புகழின் உச்சத்தில் இருந்தாலும் சென்னை அவருக்குப் பிடித்துப் போனதால் 40களில் தமிழகத்திற்கு குடிபெயர்ந்தார்.
1936இல் வெளியான ராஜா ஹரிச்சந்திரா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவரை எல்.வி. பிரசாத் தனது கஷ்டஜீவி ’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார். ஆனால் அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிட்டது. பின்னர் பிரபல இயக்குநர் சி.புல்லையாவின் இயக்கத்தில் வெளியான ‘கொல்லபாமா’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். புல்லையாதான் அஞ்சனி தேவியின் பெயரைக் கொஞ்சம் மாற்றி அஞ்சலி தேவியாக ஆக்கினார். அந்தப் படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்ற அஞ்சலி தேவி, சுமார் 350 தெலுங்கு, தமிழ், கன்னட, இந்திப் படங்களில் நடித்து, சாதனைத் தடம் பதித்திருக்கிறார்.
டி.ஆர். மகாலிங்கம் மெல்லப் புகழ்பெற்றுவந்த காலம் அது. அஞ்சலி தேவி அதற்கு முன்பே பிரபலமாகிவிட்டார். என்றாலும் ‘ஆதித்தன் கனவு’ படத்தின் மூலம் டி.ஆர் மகாலிங்கம் ஜோடியாக தமிழில் அறிமுகமானார். பிறகு தமிழ் ரசிகர்களும் அஞ்சலி தேவியின் நவரச நடிப்புப் பிரசன்னத்திற்குக் காத்திருக்க ஆரம்பித்த பொற்காலம் தொடங்கியது. ‘லவகுசா’ படத்தில் சீதா தேவியாக நடித்த பிறகு கருப்பு வெள்ளை காலத்தின் முத்திரை நாயகியாக மாறினார் அஞ்சலி தேவி. இவர் ஏற்ற வரலாற்றுக் கதாபாத்திரங்களில் ‘சாவித்திரி’ சாகா வரம் பெற்றது.
சூப்பர் ஸ்டார்களின் ஜோடி
அந்தக் காலத்தின் தேவதையாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த அஞ்சலி தேவிக்கு, அவரது தெய்வீக அழகும், தீர்ந்து போகாத திறமையும் மட்டும் கைகொடுக்கவில்லை; கடைசி நாட்கள் வரை வடிந்துபோகாத உற்சாகமும் அவரது வெற்றியின் பின்னால் இருந்த முக்கியமான மந்திரம்.
பேசும்படம் பத்திரிகைக்கு ஜெமினி கணேசன் அளித்த பேட்டியில் அஞ்சலி தேவி பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில் , “அஞ்சலி தேவியிடம் கற்றுக்கொள்ள வேண்டியது சுறுசுறுப்பு. அவரது உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்ளும். சோகமான காட்சிகளில் நடித்து முடித்தபிறகும் அவரை உற்சாகமாகப் பார்க்கலாம்” என்று பாராட்டியிருந்தார்.
இத்தனை உற்சாகமான நாயகிக்கு முன்னணிக் கதாநாயகர்களுடன் அடுத்தடுத்து ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தது மட்டுமல்ல, அவருக்கென்று தனி ரசிகர் வட்டமே உருவானதிலும் ஆச்சரியமில்லை! ஜெமினி கணேசன் நாயகனாக அறிமுகமான ‘பெண்’ (1953) படத்தில் அஞ்சலிதேவிதான் அவருக்கு ஜோடி. பிறகு பல படங்களில் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். ஜெமினியுடன் மட்டுமல்ல, எம்.ஜி.ஆர்., சிவாஜி, நாகேஸ்வர ராவ் என்று அன்றைய சூப்பர் ஸ்டார்களுடன் பல படங்களில் இணைந்து நடித்தவர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், தன் 84-வது வயதில் தனியார் தொலைக்காட்சி யொன்றுக்கு அளித்த பேட்டியில் அதே உற்சாகத்துடன் பேசினார் அஞ்சலி தேவி. “இன்றைய திரைப்படங்களை அன்றைய படங்களோடு ஒப்பிடவே முடியாது. அன்று எல்லோரிடமும் ஒரு அன்பான அணுகுமுறை இருக்கும். கதாநாயகிகளை அதிகம் மதிக்கும் கதைகள் இருக்கும். ஆனால் இன்று அப்படியில்லை” என்று மனம் விட்டுப்பேசினார்.
ரஜினியின் அம்மாவாக ‘அன்னை ஓர் ஆலயம்’படத்தில் நடித்ததுதான் அவரது கடைசி தமிழ்ப்படம். அஞ்சலி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி 30 படங்களைத் தயாரித்திருக்கிறார்.
நடிகர் சங்கத் தலைவி
சிவாஜி கணேசனின் நாயகனாக அறிமுகமாக இருந்த ‘பூங்கோதை’ படத்தை அஞ்சலி தேவி தயாரித்தார். ஆனால், அந்தப் படத்துக்கு பிறகு தொடங்கப்பட்ட ‘பராசக்தி’ முதலில் வெளியாகிவிட்டது. சாய்பாபாவின் வாழ்க்கையைத் திரைப்படமாக தயாரிக்கும் அளவுக்கு ஆன்மிக நாட்டம் கொண்டவர் அஞ்சலிதேவி. சென்னையிலுள்ள தன் வீட்டை சாய்பாபா அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளிக்கும் அளவுக்கு சாய்பாபாவின் தீவிர பக்தை.
நடிகைகள் திருமணத்துக்குப் பிறகு நடிப்புக்கு முழுக்குப் போடுவது சர்வ சாதாரணம். ஆனால் அஞ்சலி தேவியோ திருமணத்துக்குப் பிறகுதான் நடிக்கவே வந்தார். மிக இளம் வயதிலேயே இசையமைப்பாளர் ஆதிநாராயண ராவைத் திருமணம் செய்துகொண்ட அஞ்சலி தேவி, அதன் பிறகே திரையில் பிரவேசித்து ஜொலித்தார். சின்னா ராவ், நிரஞ்சன் குமார் என இவருக்கு இரண்டு மகன்கள்.
மூத்த தெலுங்கு ரசிகர்கள் பலரது வீடுகளில் இன்னும் இவரது படங்களைப் பாதுகாக்கிறார்கள். அந்த அளவுக்குத் தனது சொந்த மாநிலத்தில் மங்காப் புகழ்பெற்ற அஞ்சலி தேவி, தமிழ்நாட்டுக்குக் குடிபெயர்ந்து வந்துவிட்டார். புகுந்த வீடும் அவரைக் கொண்டாடியது. நட்சத்திரமாக மட்டுமல்ல. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக்கியும் (1959) அழகு பார்த்தது. அழகு, திறமை, உற்சாகம் ஆகியவை நிரம்பிய அஞ்சலி தேவி தமிழ் ரசிகர்களின் மனதில் என்றென்றும் நிலைத்திருப்பார் என்றால் அது மிகையில்லை.