

‘லைக் பாதர் லைக் சன்’ என்ற பிரபலமான சொற்றொடர், ஆண் வாரிசை முதன்மைப்படுத்தும் சிந்தனையின் வெளிப்பாடு என்று சொல்லலாம். ஆனால், அந்தப் பெயரில் கடந்த ஆண்டு வெளியான பிரபல ஜப்பானியத் திரைப்படம் அந்தச் சொற்றொடருக்கு எதிர்நிலையில் நின்று பேசுகிறது.
பொதுவாகவே ஜப்பானிய இயக்குநர்களுக்கும் அவர்கள் உருவாக்கிய மரபுக்கும் சர்வதேச சினிமாவில் தனி இடம் உண்டு. அகிரா குரோசோவாவும் யாசுஜிரோ ஓசுவும் நாம் நன்கு அறிந்த இயக்குநர்கள். குரோசோவா கிளாசிக் படங்களைத் தந்திருந்தாலும், ஓசு முன்வைக்கும் குடும்ப உறவுகள், அது சார்ந்த நெருக்கடிகள் என நேரடி வாழ்க்கையைப் பேசுபவை.
லைக் ஃபாதர் லைக் சன் படத்தை ஒரு வகையில் அதன் இன்றைய தொடர்ச்சி என்று சொல்லலாம். ஹிரோகசு கொரீடா இயக்கிய இப்படத்தைத் தீவிர சினிமா ரசிகர்கள் ரசிக்க முடியும் என்றாலும், எடுத்துக்கொண்ட விஷயத்தை எளிமையாகவும் நேரடியாகவும் கையாண்டிருக்கிறது இப்படம்.
வாழ்க்கையையும் உறவுகளையும் ஒற்றைப் பரிமாணத்தில் புரிந்துகொள்வதன் அபத்தத்தை, இந்தப் படத்தைப் பார்த்த பின் உணர முடியும். பெரும்பாலான மேலை சினிமாக்களுடன் இப்படி ஒன்றிப்போக முடியாமல் போவதற்கு, கீழை சினிமாக்களில் வெளிப்படும் வாழ்க்கை, உறவுகளின் உயிர்த்துடிப்பு காரணமாக இருக்கலாம்.
யார் குழந்தை?
பரபரப்பான கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்க்கும் கட்டடக் கலை வல்லுநர் ரியோட்டாவும் அவரது மனைவி மிடோரியும் சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் வாழ்கிறார்கள். ஸ்டார் ஹோட்டலைப் போல் இருக்கும் அந்த வீட்டில் வளர்கிறான், அவர்களது 6 வயது மகன் கெயிதா. கெயிதாவைப் பள்ளியில் சேர்க்கும் சம்பவங்களுடன் தொடங்கும் படத்தில், ரியோட்டாவும் மிடோரிக்கும் அதிர்ச்சி காத்திருக்கிறது. கெயிதா அவர்களது மகனில்லை, மிடோரியின் கிராமத்து மருத்துவமனையில் நடந்த குழப்பத்தில் குழந்தை மாறிவிட்டிருக்கிறது.
"எதுவென்றாலும் காசு கொடுத்து வாங்கிவிட முடியும்" என்று உறுதியாக நம்பும் ரியோட்டாவின் மனதில் மிகப் பெரிய குழப்பம் உருவெடுக்கிறது. தன் ரத்தத்தில் ஒரு பாதியான ரியூசெயைத் தன் மகனாகக் கொள்வதா, ஆறு ஆண்டுகளாக வளர்த்த கெயிதாவை மகனாகக் கொள்வதா என்று.
மிகவும் சிக்கலான ஒரு பிரச்சினைதான். குழந்தையைத் தத்தெடுக்கும் பெற்றோர் களும் இதுபோன்ற சிக்கல்களைச் சந்திக்க நேரும். இந்தச் சிக்கலுக்கு நாம் எப்படி முடிவெடுப்போம்? உணர்ச்சிகரமாகவா அல்லது அறிவுபூர்வமாகவா?
இயக்குநர் ஹிரோகசு கொரீடா திரைப்படத்தைக் கட்டமைத் துள்ள விதம் விமர்சனங்களைத் தாண்டியிருக்கிறது என்று சொல்லலாம். இந்தியாவில் வெளியாகி இருந்தால், உணர்ச்சிக் காவியமாக மாறும் ஆபத்தை இப்படம் சந்தித்திருக்கும். மனித விசித்திரங்களின் எதிரெதிர் நிலைகளைப் பல்வேறு வகைகளில் நம் பார்வைக்கு வைக்கிறது இந்தப் படம். ஒரேயொரு குழந்தையை வைத்திருக்கும் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த ரியோட்டா, என்ன நடந்தாலும் தான் தோற்றுவிடக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறான். அதேநேரம் அவனது ரத்தத்தின் பாதியான ரியூசெய் தற்போது வளரும் யுடாய் குடும்பம், ஏற்கெனவே தங்களுக்கு இருக்கும் 3 குழந்தைகளுடன், கெயிதாவையும் சேர்த்து வளர்க்கத் தயாராக இருப்பதாகவும், ரியூசெய்யைத் தங்களால் இழக்க முடியாது என்றும் கூறுகிறது.
தன் சொத்துகள், தன் சந்ததியின் வாரிசாகத் தன் ரத்தத்தின் பாதிதான் இருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் ஆண் மனமும், எந்தக் குழந்தையாக இருந்தாலும் பாசமூட்டி வளர்க்கும் பெண் மனமும் நம் முன் வைக்கப்படுகின்றன. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவராகவும் ரியோட்டாவைவிட முதுமையானவராகவும் இருக்கும் மற்றொரு அப்பா யுடாய் குழந்தைகளோடு நிறைய நேரத்தைச் செலவிடுபவராகவும், அவர்களில் ஒருவராக மாறி விளையாடுபவராகவும் இருக்கிறார். ஆனால், ரியோட்டா எப்போதும் வேலையைக் கட்டிக்கொண்டு அழுபவராகவும், ஆறு ஆண்டுகளாக வளர்த்த மகனின் பாசத்தைப் புரிந்துகொள்ளாதவராகவும் இருக்கிறார்.
வேக வாழ்க்கையின் அபத்தம்
உணர்ச்சிகரமான ஒரு பிரச்சினையை இப்படம் பேசினாலும், பல இடங்களில் அது அடிக்கோடிடும் விஷயம் எப்போதும், எதற்கும் நிதானிக்காமல் எல்லோரும் பரபரப்பாக ஓடிக்கொண்டே இருக்கும் நகர வாழ்க்கையின் வீழ்ச்சியையும், அதற்கு எதிரான சிறுநகர வாழ்க்கை, அது சார்ந்த உணர்ச்சிகள், குடும்ப பந்தங்களின் நெகிழ்ச்சியையும் அடுத்தடுத்து நிறுத்து கிறது. பேரளவில் மேற்கத்திய இயந்திர வாழ்க்கை, அதற்கு எதிரான கிழக்கத்திய மனித உறவைப் பேசுகிறது எனலாம்.
இந்தப் படம் மதிப்புமிக்க கான் (Cannes) திரைப்பட விழாவின் நடுவர் சிறப்புப் பரிசைக் கடந்த ஆண்டு பெற்றது. இதுபோன்ற திரைப்படங்களைப் பொதுவாக உடனடியாகப் பார்க்க வாய்ப்பு கிடைப்பதில்லை. 2013 சென்னை திரைப்பட விழாவின் தொடக்கப் படமாகத் திரையிடப்பட்ட இந்தப் படம், மாற்றுத் திரைப்பட ஆர்வலர்கள் இடையே பரவலான ஆர்வத்தைக் கிளறிய படைப்பும்கூட.
பெரியவர்கள் ஆகும் வரை வேறுவேறு வாழ்க்கைச் சூழ்நிலைகளில் இருக்கும் ஆணும் பெண்ணும் திருமணத்துக்குப் பின் இணக்கமாகச் சேர்ந்து வாழ்வது எப்படிச் சாத்தியமாகிறதோ, அது போல நம் ரத்தச் சொந்தமல்லாத குழந்தையையும் நம்மால் பாசத்துடன் சிறப்பாக வளர்க்க முடியும் என்று ரியோட்டாவின் தாய் படத்தின் ஓரிடத்தில் கூறுவது சத்தியமான வார்த்தைகள்.