

‘தேசிய கவி என்று திரைப்படப் பாடலாசிரியர் ஒருவரைப் புகழும் அளவு பெருமைக்கும் திறமைக்கும் உரியவர் கவி பிரதீப். இந்திய விடுதலைப் போராட்டத்தின் உச்சகட்டக் காலத்தில், தமிழ்த் திரைப் படங்களில் பாரதியாரின் பாடல்கள் இடம் பெற்றதுபோல், இந்தித் திரைப்படங்களில் கவி பிரதீப் எழுதிய பாடல்கள் மக்களுக்கு எழுச்சியை ஏற்படுத்தின. 1943ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிஸ்மத்’ என்ற திரைப்படத்திற்காக இவர் எழுதிய “ஆஜ் ஹிமாலயா கி சோட்டி சே ஃபிர் ஹம்னே லல்காரா, தூர் ஹட்டோ துனியா வாலோ” (இன்று இமயமலையின் உச்சியிலிருந்து மறுபடியும் நாங்கள் அறைகூவல் விடுக்கிறோம் விலகி விடுங்கள் அன்னிய மக்களே) என்ற பாடல் ஒன்றுக்காவே அந்தப் படம் மூன்று வருடங்களுக்கு மேல் ஒரு திரையரங்கில் ஓடியது.
ராமச்சந்திர நாரயண திரிவேதி என்ற இயற்பெயருடன், லக்னோவில் 1915இல் ஒரு ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் கவி பிரதீப்.
1962ஆம் ஆண்டு நடந்த சீன யுத்தத்தின்போது இவர் எழுதிய ‘ஏ மேரே வதன் கி லோகோன்’ (ஓ என் தேச மக்களே) என்ற சி. ராமசந்திராவின் இசையில் அமைந்த பாடலை 63ஆம் வருட சுதந்திர தினத்தன்று பிரதமர் நேரு முன்னிலையில் லதா மங்கேஷ்கர் பாடினார். அதைக் கேட்ட நேரு கண் கலங்கி உணர்ச்சிவசப்பட்டார். கங்கன் என்ற திரைபடத்தில் இடம் பெற்ற இப்பாடல் மூலம் தேசிய கவி என அறிவிக்கப்பட்ட பிரதீப், அதன் பொருட்டு எச்.எம்.வி. நிறுவனத்தை அப்பாடலின் ராயல்டியாக மும்பை உயர் நீதிமன்றம் தரச் சொன்ன 10 லட்சம் ரூபாய் உடபட அனைத்துத் தொகையையும் போர் வீரர்களின் விதவை நல நிதிக்கு அளித்துவிட்டார்.
நாம் இங்கு காணும் பாடல், ‘நாஸ்திக்’ என்ற திரைப்படத்திற்காக அவர் எழுதியது. 1954இல் எழுதப்பட்ட இந்தப் பாடலைப் பாடுவதற்கு முகமது ரஃபியை அணுகியபொழுது, மத உணர்வையும் இறை நம்பிக்கையையும் இப்பாடல் வரிகள் கேலி செய்யும்படி உள்ளதாகக் கூறிப் பாட மறுத்துவிட்டார்.
சி. ராமச்சந்திராவின் இசையில், ஐ.எஸ். ஜோகர் எழுதி நடித்த இந்தப் படத்தின் பாடலை இயற்றிய கவி பிரதீப், தாமே இப்பாடலைப் பாடினார்.
அந்தப் பாடலின் சில வரிகள்:
தேக்கோ தேரி சன்சார் கி ஹாலத் க்யா ஹோகயா பகவான்
கித்னா பதல் கயா இன்சான், கித்னா பதல் க்யா இன்சான்
எனத் தொடங்கும் அந்தப் பாடலின் பொருள்:
பார், உன் உலகின் நிலை என்னவாக ஆகிவிட்டது கடவுளே
எத்தனை மாறிவிட்டான் மனிதன் எத்தனை மாறிவிட்டான் மனிதன்
சூரியன் மாறவில்லை சந்திரன் மாறவில்லை ஆகாசமும் மாறவில்லை
அவலமான காலம் வந்துவிட்டது. அற்பனாக ஆகிவிட்டான் மனிதன்.
சண்டை சில இடங்களில் சச்சரவு சில இடங்களில் ஆடுகின்றான் மனிதன்
அரை நிர்வாணமாக
சூது நிறைந்த கபட வாழ்விற்காக தன் நியதியை விற்கிறான் மனிதன்
ராம பக்தர்களும் ரஹீம் தாசர்களும் இன்று
ஏமாற்று வலையை விரிக்கிறார்கள்.
எவ்வளவு மோசக்காரர்கள் எத்தனை அறிவிலிகள்
கண்டுகொண்டோம் இவர்களது தொழிலையும்
இவர்களது கள்ளச் செய்கையினால்தான் இந்த நாடே மயானமாக ஆனது.
நாம் நமக்குள் சண்டையிடாவிட்டால் ஆடிகொண்டிருந்த ஆட்டம்
ஏன் நின்று போயிருக்கும்
லட்சம் வீடுகள் ஏன் எரிந்திருக்கும், சிசுக்கள் ஏன் தாயைப் பிரிந்திருக்கும்
பாப்புவின் (காந்தி) மறைவுக்காக நாம் விம்மி அழ வேணடிய நிலை ஏன் வந்திருக்கும்?
மேலோட்டமாகப் பார்த்தால் சாதாரணமான மத நல்லிணக்கப் பாடல் போன்று தோன்றும் இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் தேசப் பிரிவினை, மதக் கலவரங்கள் ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட வட இந்திய மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாகவும் வடிகாலாகவும் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.
கிட்டத்தட்ட இந்தப் பாடலின் அழகும் ஜீவனும் கொண்ட ஒரு பாடலைத் தமிழ்த் திரை உலகின் அறிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்த கு.மா. பாலசுப்ரமணியன் எழுதினார். 1956இல் ‘நாஸ்திகன்’ என்ற பெயரில் வெளிவந்த அப்படத்தின் பாடல் அனைவராலும் பாராட்டப்பட்டது.
சி. ராமச்சந்திரா மெட்டமைத்த, இந்தி, தமிழ்ப் பாடல்களின் மெட்டு மிகவும் பிரபலம் அடைந்தது. இந்தி ‘நாஸ்திக்’ படம் தமிழில் வெளிவருவதற்கு முன்பே நாகதேவதை என்ற படத்தில் பி.பி. னிவாஸ் ‘பாவி என் தீவினை—ஹர ஹர சம்போ மகாதேவா’ என்ற பாடலை இதே மெட்டில் பாடியுள்ளார். கடவுளையே விமர்சிக்கும்படி கவி பிரதீப் ஹிந்தியில் எழுதிய பாடலின் மெட்டு தமிழில் ஒரு பக்திப் பாடலுக்குப் போய்ச் சேர்ந்தது நல்ல முரண் நகை.
நாஸ்திகன் படத்தில் இடம் பெற்ற கு.மா. பாலசுப்ரமணியன் பாடலைக் கணீரென்ற குரலில் பாடியவர் திருச்சி லோகநாதன். அந்தப் பாட்டு:
மா நிலம் மேல் சில மானிடரால் என்ன மாறுதல் பாரைய்யா
மனிதன் மாறியதேன் ஐயா மனிதன் மாறியதேன் ஐயா
வானத்தின் நிலவில் ஆதவன் திசையில் மாறுதல் ஏதைய்யா
மண்ணில் பலவித பிரிவினையாலே மனிதன் மிருகம் மாறுவதினாலே
என்னே கொடுமை எங்கும் இந்நாளே ஈனர்கள் தாண்டவம் பேய்களைப் போலே
அன்பையும் பண்பையும் தன்னலத்தால் பலி ஆக்கிடும் பேதையாய்
ஈஸ்வரன் அல்லா தாசர்கள் இன்றோ பூசனை செய்வது நாசத்தை அன்றோ
தேசம் சுடுகாடு ஆவது நன்றோ தெய்வத்தின் பேரால் கொல்வதும் உண்டோ
நேசம் மறந்து ஆசை மிகுந்து மோசடி புரிபவனாய் மனிதன் மாறியதேன் ஐய்யா
அன்பே ஆண்டவன் என்று நினைந்தால் அனைவரும் ஓர் குலமாகவே வாழ்ந்தால்
தணலாய் இங்கே வீடுகள் விழுமா தாயின் பிரிவால் சேய்கள் அழுமா
சாந்தி சாந்தி எனும் காந்தியின் குரலும் ஓய்ந்திடச் செய்பவனாய்
பல வருடங்களுக்குப் பிறகு வெளிவந்த பாவ மன்னிப்பு படத்தின் பிரபலமான, “மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்” என்ற கண்ணதாசன் பாடல் வரிகளும் இதே உணர்வைப் பிரதிபலிப்பது குறிப்பிடத்தகுந்தது.