

அந்தக் காலம் முதல் இந்தக் காலம்வரை சினிமாவில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டாலும், ஒன்று மட்டும் மாறவில்லை. அது நகைச்சுவைப் படங்கள் கல்லா கட்டுவது. நகைச்சுவைக் காட்சிகள் திரைப்படங்களில் ஒரு முக்கியப் பகுதியாகச் சதி லீலாவதி (1936) முதலே என்.எஸ். கிருஷ்ணன் மூலம் தொடங்கிவிட்டது. அப்படத்தின் வெற்றிக்குப் பின், என்.எஸ். கிருஷ்ணன் நகைச்சுவையைத் தனிப் படங்களாக எடுத்து, பிரதான கதையமைப்புடன் இணைத்து வெளிவருவதும் தொடங்கியது.
1936-இல் கிழட்டு மாப்பிள்ளை என்ற என்.எஸ். கிருஷ்ணனின் நகைச்சுவை துணுக்குப் படம், உஷா கல்யாணம் என்ற படத்தில் இணைக்கப்பட்டது. அதன் பிறகு அதன் தாக்கம் அதிகமாகிக்கொண்டே வந்தது. நகைச்சுவைத் துணுக்குப் படங்கள் நான்கினை இணைத்து ஒரு படமாக வெளியிடும் அளவுக்கு அந்தப் போக்கு அதிகரித்தது. அப்படிப்பட்ட படம்தான் சிரிக்காதே (1939). இந்த முயற்சி வெற்றி கண்டது. 1941-இல் முழு நீள நகைச்சுவைப் படங்களாக என்.எஸ். கிருஷ்ணனின் நவீன விக்ரமாதித்தனும், ஏ.வி.எம்.மின் சபாபதியும் வந்து சக்கை போடு போட்டன. அதன் பிறகு எண்ணற்ற நகைச்சுவைத் திரைப்படங்கள் மாபெரும் வெற்றி கண்டுள்ளன.
மற்றவகைப் படங்களை விடவும் நகைச்சுவைப் படங்கள் வெற்றி பெறுவதற்கான உத்தரவாதம் அதிகம் என்பது அன்று முதல் இன்றுவரை தொடரும் ஒரு போக்கு. எவ்வளவுதான் அதிரடி மசாலா படங்கள் வெற்றி அடைந்தாலும் அவ்வப்போது முழுநீள நகைச்சுவைப் படங்கள் வந்து வெற்றிகரமாக ஓடுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நகைச்சுவைப் படங்கள் அல்லது நகைச்சுவைக்கு முக்கிய இடம் கொடுக்கும் படங்கள் அதிக வெற்றி கண்டுள்ளன. ஒரு கல் ஒரு கண்ணாடி, கலகலப்பு, மெரீனா, மனம் கொத்திப் பறவை, கண்ணா லட்டு தின்ன ஆசையா? கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், தீயா வேலை செய்யணும் குமாரு, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என நிறைய படங்களை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.
நகைச்சுவை வெல்லும்
தொடர்ந்து படங்கள் எடுத்து வெளியிடும் என் அனுபவத்தில் கண்ட உண்மை: சிறப்பான கருத்துகள் கொண்ட படமாக இருந்தாலும், சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் த்ரில்லர் படமாக இருந்தாலும், அதை நகைச்சுவைக் காட்சிகளுடன் இணைத்துச் சரியாக அளிக்கும்போது, அப்படத்தின் தாக்கம் அதிகரிக்கிறது. அதற்காக நகைச்சுவைக் காட்சிகளைத் திணிக்க வேண்டும் என்பதல்ல என் கருத்து. நல்ல முறையில் எடுக்கப்பட்ட படங்களுடன் நகைச்சுவைக் காட்சிகளைச் சரியான முறையில் இணைக்கும்போது, அத்தகைய படங்கள் எளிதாக ஏற்கப்படுகின்றன.
இதற்கு வெற்றி அடைந்த வெகுஜனப் படங்களையும், மேலும் சிறந்த படங்களாக அங்கீகரிக்கப்பட்ட படங்களையும் ஆராய்ந்தாலே இது புலப்படும். அதனால்தான், எம்.ஜி.ஆராக இருந்தாலும் சிவாஜியாக இருந்தாலும் தங்கள் படங்களில், நகைச்சுவைக் காட்சிகளை மட்டும் குறைத்ததே இல்லை. 150 நிமிடங்கள் பொழுதுபோக்கை எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு, குறைந்தது 25 - 30 நிமிடங்கள் நகைச்சுவைக் காட்சிகளைச் சரியாக இணைப்பதால் பலன் அதிகரிக்கும் என்பது கண்கூடாக நாம் காணும் உண்மை. அன்று என்.எஸ். கிருஷ்ணன் தொடங்கி இன்று சூரி வரை நகைச்சுவை நாயகர்கள் இல்லாமல் தமிழ்ப் படங்கள் சுலபமாக வசூல் வெற்றி காண முடியாது என்பது மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுவருகிறது.
நானே ஹீரோ நானே வில்லன்
நகைச்சுவையைப் போலவே வில்லன் பாத்திரமும் மிகவும் முக்கியமானது. வலுவான வில்லன் என்பது நாயகனின் ஆளுமையைக் கூட்ட உதவும். சில சமயம் நாயகனை விட வில்லன் பாத்திரங்கள் வலுவாக அமைந்துவிடுவதும் உண்டு. எனவே சில சமயம் நாயகர்களே வில்லன் வேடங்களையும் ஏற்கிறார்கள். அல்லது நாயகப் பிம்பத்துக்கு முரணான வித்தியாசமான வேடங்களை ஏற்கிறார்கள். இப்படிச் செய்யும் சமயத்தில் தங்களது வழக்கமான நாயகப் பிம்பத்தையும் இழந்துவிடாமல் இரு வேடங்களையும் ஒருவரே ஏற்பது பழக்கமாக இருந்துவருகிறது. 1940இல் வெளிவந்த பி.யு. சின்னப்பாவின் உத்தமபுத்திரன் தொடங்கி, சமீபத்தில் வெளிவந்த அமீர் - ஜெயம் ரவியின் ஆதிபகவன் வரை, ஒரு ஹீரோ எதிரும் புதிருமான இரண்டு கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் பழக்கம் தொடர்கிறது.
இந்தப் போக்கு பெருமளவில் வெற்றி கண்டுள்ளது. எம்.கே. ராதாவின் அபூர்வச் சகோதரர்கள், எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன், நீரும் நெருப்பும், எங்க வீட்டுப் பிள்ளை, குடியிருந்த கோயில், நாளை நமதே; சிவாஜியின் உத்தமபுத்திரன், தெய்வ மகன், பலே பாண்டியா, கௌரவம், திரிசூலம்; சிவகுமாரின் ராமன் பரசுராமன்; கமலஹாசனின் சட்டம் என் கையில், கடல் மீன்கள், ஒரு கைதியின் டைரி, இந்திரன் சந்திரன், மைக்கேல் மதனக் காம ராஜன், இந்தியன், ஆளவந்தான், தசாவதாரம்; ரஜினிகாந்தின் பில்லா, ஜானி, நெற்றிக்கண், தில்லு முல்லு, மூன்று முகம், எந்திரன்; அஜித்தின் வில்லன், வாலி, வரலாறு, அட்டகாசம், பில்லா; விஜய்யின் அழகிய தமிழ் மகன்; விக்ரமின் அந்நியன், சூர்யாவின் வேல், மாற்றான் எனப் பல படங்கள் அவ்வாறு முத்திரை பதித்துள்ளன.
நாயகனாகவும் எதிர்மறை அல்லது மாறுபட்ட ஆளுமை கொண்ட இன்னொரு பாத்திரமாகவும் இரு வேடங்கள் தாங்கும்போது, அதில் சுவாரஸ்யம் ஏற்படுகிறது. இரண்டு வேடங்களையும் ஒருவர் எப்படிக் கையாள்கிறார் என்பதைப் பார்க்கும் ஆர்வம் உண்டாகிறது. இதனால் படத்துக்கான எதிர்பார்ப்பும் கூடுகிறது. நாயகனாக நடிக்கும் போது நடிப்பில் செய்ய முடியாத சில பரிசோதனைகளைச் செய்யும் வாய்ப்பையும் இது அவர்களுக்கு வழங்குவதால் இது புதிய சவாலாகவும் இருக்கிறது. இந்தச் சவாலும் படத்தின் மீதான ஆர்வத்தைக் கூட்டுகிறது. இந்தக் காரணங்கள் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக விளங்குகின்றன.
இதுவும் தமிழ் சினிமாவின் வெற்றி சூத்திரங்களில் ஒன்று எனத் தாராளமாகச் சொல்லலாம்.
(இந்தக் கட்டுரையில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துகள், எழுத்தாளரின் தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே. அவர் சார்ந்த நிறுவனத்தின் கருத்துகளாக எடுத்துக்கொள்ளப்படக் கூடாது.)