Last Updated : 26 Dec, 2014 04:19 PM

 

Published : 26 Dec 2014 04:19 PM
Last Updated : 26 Dec 2014 04:19 PM

அஞ்சலி | கே.பாலசந்தர் - தனி வழிப் பயணம்

தமிழ்த் திரையுலகின் மாபெரும் ஆளுமைகளில் ஒருவராக விளங்கியவர் கே. பாலசந்தர். பாலசந்தரின் முத்திரை என்று சொல்லத்தக்க பல விசேஷ அம்சங்களை ரசிகர்கள் அவரது படங்களில் அடையாளம் கண்டனர். அவருக்கு முன்பாக இம்மாதியான அடையாளம் கொண்டிருந்தவர் அவரைவிட இரண்டு வயது இளையவரான இயக்குநர் ஸ்ரீதர்.

ஸ்ரீதரை பாலசந்தரின் முன்னோடி என்று சொல்வதன் மூலம் பாலசந்தரின் திரையுலகப் பிரவேசத்தை நன்கு விளங்கிக்கொள்ள முடியும். இருவருமே அரசாங்க வேலையில் இருந்துகொண்டே நாடகங்கள் எழுதிப் பின்னர் திரைப்பட இயக்குநர்களானவர்கள். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் ஆகியோர் செல்வாக்குடன் விளங்கிய காலகட்டத்தில் ஸ்ரீதர் திரையுலகுக்கு வந்தார். சிவாஜி கணேசனையும் எம்.ஜி.ஆரையும் வைத்துப் படங்களை எடுத்தாலும் அவர் தனக்கெனத் தனி வழியைத் தேடிக்கொண்டார். புதுமுகங்களையும் இரண்டாம் நிலையில் செல்வாக்குப் பெற்றிருந்த நட்சத்திரங்களையும் பயன்படுத்தியதன் மூலமாகவே அவர் இதைச் சாதித்தார்.

எதிர் நீச்சல் போட்ட இயக்குநர்

கே. பாலசந்தர் 'தெய்வத்தாய்' படத்தின் வசனகர்த்தாவாக 1964-ல் திரையுலகுக்கு அறிமுகமானார். அதுவே எம்.ஜி.ஆருடன் முதலாவதாகவும் இறுதியாகவும் அவர் இடம்பெற்ற படம். நீர்க்குமிழி (1965) படத்தின் மூலமாக இயக்குநர் ஆனார். அச்சமயம் ஸ்ரீதரின் சாதனைப் படங்கள் வெளிவந்துவிட்டிருந்தன. ஆனால் எம்.ஜி. ஆர்., சிவாஜி சகாப்தம் முடிவுக்கு வரவில்லை. பாலசந்தர் தனது பாணியை அந்த சகாப்தத்தினூடாக எடுத்துச்சென்றது ஒரு சாதனை.

ஸ்ரீதரைப் போலவே ஜெமினி கணேசன் முத்துராமன், பாலையா நாகேஷ் போன்ற நடிகர்களை பாலசந்தர் மிகுதியாகப் பயன்படுத்தினார். இரு பெரும் கதாநாயகர்களுக்கு நடுவே அவரது படங்களும் வெற்றிபெற ஆரம்பித்தன. ஸ்ரீதர் நாடகத்திலிருந்து திரைப்படத்துக்கு வந்தபோதிலும் அவர் படங்களில் விசேஷமான காட்சிப்படுத்தல்கள் இருந்தன. பாலசந்தர் அனேகமாகத் தனது மேடை நாடகங்களை அப்படியே திரைப்படங்களாக்கினார்.

அமெச்சூர் நாடக மேடையில் ஏற்கெனவே அவரது நாடகங்கள் நடிகர் சோவின் அரசியல் நையாண்டி நாடகங்களுக்கு எதிர் நிலையில் வைத்து எழுதப்பட்டுப் பிரபலமாயிருந்தன. சபா நாடகங்கள் துணுக்குத் தோரணங்கள் என்கிற வசைபாடல்களுக்கு இலக்காகிக்கொண்டிருந்த நேரத்தில் அவரது நாடகங்கள் இயல்பான நகைச்சுவையைக் கொண்டிருந்தன. அவரது வசனங்கள் சலிப்பூட்டாத வண்ணம் அளவில் குறைவாகவும் இருந்தன.

கதையில் திருப்பங்கள் அதிகம் இருந்தன. நகர்ப்புறப் பார்வையாளர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட அந்நாடகங்கள், திரைப்படங்களானபோது அதே வரவேற்பு தொடர்ந்தது. நாணல், மேஜர் சந்திரகாந்த், பாமா விஜயம், எதிர் நீச்சல் போன்ற படங்களில் மட்டுமின்றி திரைப்படங்களுக்காகவே எழுதப்பட்ட திரைக்கதைகளிலும் அவரது நாடக பாணியின் தாக்கம் நிறையவே தெரிந்தது.

சர்வர் சுந்தரம் படத்தை கிருஷ்ணன் பஞ்சு இயக்கினார்கள் என்றாலும் அதன் கதை வசனகர்த்தாவான பாலசந்தருக்கு அதிக அங்கீகாரம் கிடைத்தது. நாகேஷுக்கு அப்படம் ஒரு திருப்புமுனையாக இருந்தது. பெரும் சிரிப்பு நடிகராக இருந்த காலத்தில் நாகேஷின் சோக நடிப்பு நீர்க்குமிழி, எதிர் நீச்சல் போன்ற படங்களில் வெற்றிபெற பாலசந்தர் முக்கியக் காரணமாயிருந்தார்.

பாடல் காட்சிகளில் வித்தியாசம்

பாலசந்தரின் படங்களில் பாடல் காட்சிகள் வித்தியாசமாகப் படமாக்கப்பட்டன. நீர்க்குமிழி படத்தில் ‘ஆடியடங்கும் வாழ்க்கையடா’, இரு கோடுகள் படத்தில் ‘புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்’, புன்னகை படத்தில் ‘ஆணையிட்டேன் நெருங்காதே’, பாமா விஜயம் படத்தில் ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ ஆகிய பாடல் காட்சிகள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை.

அவரது அவர்கள் படத்தில் இடம்பெற்ற ‘காற்றுக்கென்ன வேலி’ பாடல் காட்சியின் பாதிப்பினை பாரதிராஜா, மணிரத்னம் உள்ளிட்ட பல இயக்குநர்களின் பாடல் காட்சிகளில் பின்னர் காண முடிந்தது. பாமா விஜயம் அவரது சிகரங்களில் ஒன்று. தமிழில் வெளிவந்த தலை சிறந்த நகைச்சுவைப் படங்களில் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லைக்கு அடுத்த இடத்தை அப்படம் பிடித்துக்கொண்டுள்ளது என்று கூறலாம்.

நடிகர்களின் ஆசான்

பாலசந்தரின் படங்கள் நடிப்பில் சோடை போகாதவை புதுமுக நடிகர்களாயினும் சரி ஏற்கனவே நன்கு அறிமுகமான நடிகர்களாயினும் சரி அவரது படங்களில் தோன்றும்போது அவர்கள் எடுப்பாகத் தெரிவார்கள். அவரே ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நடித்துக் காட்டிவிடுவார் என்பதால் அந்த நடிப்பை நடிகர்கள் அப்படியே பின்பற்றி விட்டார்களோ என்று எண்ணும் வண்ணம் அவர்களது நடிப்புத்திறன் வெளிப்படும். கமல் ஹாசன், ரஜினிகாந்த், பிரகாஷ்ராஜ் ஆகிய அவரது தயாரிப்புகள் என்று சொல்லத்தக்க நடிகர்கள் மட்டும் அந்த பாணியை மீறியவர்களாக உள்ளனர்.

இயக்குநர்கள் புதுமுகங்களை அதிக அளவில் உருவாக்குவதற்கு ஒரு காரணம் நட்சத்திர ஆதிக்கம் குறைய வேண்டும் என்பது. ஆனால் பாலசந்தரின் புது முகங்கள் நட்சத்திரங்களாக மாறினர். ரஜினிகாந்த் ஒரு பெரும் எடுத்துக்காட்டு. சிகரெட்டைக் கையிலிருந்து தூக்கிப்போட்டு வாயில் பிடித்துக்கொள்ளும் ஸ்டைலை பாலசந்தர் உருவாக்கினார். அது ரஜினிகாந்துக்குக் கொண்டுவந்த ஜனரஞ்சக செல்வாக்கு நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்குப் பூதாகாரமாகிவிட்டது.

பிரச்சினைகளின் வீச்சும் எல்லைகளும்

சமூக மற்றும் பாலியல் பிரச்சினைகளைத் துணிவுடன் எடுத்துக்கொண்டாலும் மத்தியதர வர்க்கப் பார்வையாளர்களைச் சாந்தப்படுத்துகிற வகையில் அவற்றை அவர் எடுத்துச் சென்ற விதம் அவரைப் பற்றிய பலத்த விமர்சனங்களுக்கு அடிகோலியது. புன்னகை, அவள் ஒரு தொடர் கதை, அரங்கேற்றம், மன்மத லீலை, அபூர்வ ராகங்கள் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் வெற்றி பெற்றாலும் கதைப் போக்குக்கு எதிரான மத்திய தர வர்க்கம் விரும்பும் அறம் சார்ந்த முடிவுகள் அவற்றில் தலைதூக்கின.

திமிர் பிடித்தவள் என்று கருதப்பட்ட கதாநாயகி பாத்திரம் தனது கற்பு நிலைக்காகப் பெருமைகொள்கிற மாதிரி அவள் ஒரு தொடர்கதை படத்தில் “ஒரு பெண் கர்வமாயிருக்கலாம் ஆனால் கர்ப்பமாக இருக்கக் கூடாது” என்று ஒரு வசனம் இடம் பெற்றது. அந்நாளைய ரசிகர்களிடம் அதற்குப் பலத்த வரவேற்பு கிடைத்தது. அதையே அவரது படங்களின் மீதான விமர்சனமாகவும் வைக்க முடிந்தது. இதில் ஆச்சரியம் தரும் விஷயம் என்னவென்றால் பாலசந்தர் தன்னை சுய விமர்சனத்துக்கு உட்படுத்திக்கொண்டவர் என்பதுதான்.

தனது ரசிகர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டவர்களுக்கே தான் படம் எடுப்பதாக அவரே கூறிக்கொண்டார். ஆனால் தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, உன்னால் முடியும் தம்பி போன்ற பிரச்சினை சார்ந்த படங்களில் சமரசங்கள் செய்துகொள்ளாத ஒரு இயக்குநராகப் பின்னர் அவர் வெளிப்பட்டார். தனக்குரிய படங்கள் என்கிற ஓர் வரையறையை அவர் எப்போதும் கொண்டிருந்தார். குறைந்த பட்ஜெட் படங்களை இயக்குவதை அவர் விரும்பினார்.

அவரது ஒரு வீடு இரு வாசல் படம் இரண்டு கதைகளைத் தனித்தனியாகக் கொண்டிருந்தது. அது அவரது முக்கியமான படங்களில் ஒன்று. கமல் ஹாசன் , ரஜினிகாந்த் ஆகியோரின் வீச்சுகள் வேறாகிப் போய்விட்டன என்பதை அறிந்த அவர் அவர்களை வைத்துப் படங்களை இயக்குவதை நிறுத்திக்கொண்டார். தன்னால் இயக்க முடியாத படங்களுக்கு அவர் தயாரிப்பாளராக மட்டும் இருந்தார். அவர் தயாரித்த படங்களில் ரோஜா தேசிய அளவில் கவனத்தைப் பெற்றது.

மக்கள் பொதுவாகக் கொண்டிருந்த ரசனைக்கு அப்பால் சென்று சர்வதேச அளவில் கருதத்தக்க படங்களை எடுக்கும் திறமை அவரிடமிருந்தது. ஆனால் அவ்வாறு செய்வதன் மூலம் பெருவாரியான மக்களிடமிருந்து விலகிப் போய்விடக்கூடும் என்பதால் அதை அவர் தவிர்த்தார். அவர் எடுத்த முடிவு சரிதானோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் அவரால் பெரும் வெற்றிப் படங்களைத் தர முடிந்தது. அவரது பாணிக்கு அங்கீகாரமாக தேசிய விருதுகள், பத்மஸ்ரீ, பால்கே விருது ஆகியனவும் கிடைத்தன.

பாலசந்தரின் பலத்திலிருந்து அவரது பலவீனத்தைப் பிரிக்கவியலாது என்பதை நமது வெகுஜனத் திரைப்படக் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகவும் உணர வேண்டும்.

தொடர்புக்கு: amshankumar@gmail.com

படங்கள்: ஸ்டில்ஸ் ரவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x