

பொதிகையில் பிரபல நாகஸ்வர மேதை டி.என். ராஜரத்தினம் பிள்ளை தொடர்பான நினைவலைகள் ஒளிபரப்பானது. செம்பை வைத்தியநாத பாகவதரின் குரலைக் கேட்டு அதேபோன்று தன்னால் நாகஸ்வரத்தில் இசைக்க முடியவில்லையே என்று சோர்வு கொண்டாராம். அதோடு நிறுத்திக்கொள்ளாமல் நாகஸ்வரத்தில் பல புதிய பரிசோதனைகளை மேற்கொண்டார். அதிகப்படி துளைகள், சற்றே அதிக நீளம் என்று புதிய நாகஸ்வரத்தை வடிவமைத்தார். அவரது கண்டுபிடிப்பான இசைக்கருவியைத்தான் இன்றுவரை நாகஸ்வரக் கலைஞர்கள் பயன்படுத்தி வருகிறார்களாம். சுத்த மத்யமம் அதற்கு முந்தைய நாகஸ்வரத்தில் எப்படி ஒலித்தது என்பதையும், அவரது புதிய நாயனத்தில் எப்படி ஒலித்தது என்பதையும் காட்டியது மிகச் சுவை. (நிகழ்ச்சியில் ராஜரத்தினம் பிள்ளையை டி,என்.ஆர். என்றே தொடர்ந்து சுருக்கி குறிப்பிட்டதைத் தவிர்த்திருக்கலாமோ?).
செய்திப் பார்வை
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அப்படியொரு உற்சாகம். பெரிய எவர்சில்வர் அண்டாக்களை வெற்றி பெற்றவர்களுக்குத் தூக்கிப் போடுவதும், சைக்கிள் போன்ற பல பரிசுகள் வைக்கப்பட்டிருந்ததும் நகர மக்களுக்கு வித்தியாசமான காட்சியாக இருக்கும். ‘ஒரே சமயத்தில் ஒருவர்தான் காளையைத் தழுவலாம்’ என்பதுபோன்ற சில விதிகள் நடைமுறை சாத்தியமில்லை என்பதுபோல் மீறப்பட்டன. ‘86 பேருக்குக் காயம், அவர்களில் சிலருக்குப் படுகாயம்’ என்று அறிவித்த பாலிமர் நியூஸ் சேனலில் தொடர்ந்து ‘எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை’ என்று கூறியது கொஞ்சம் நெருடல்.
கடனோடு விளையாடாதே!
சன் டிவியின் ‘சூரிய வணக்க’த்தில் நடிகர் கருணாகரன் குறிப்பிட்ட ஒரு தகவல் சினிமாவில் நுழையும் பிறருக்கும் நல்ல ஆலோசனை. “ஐடி துறையில் வேலையில் இருந்தேன். சினிமாவில் நுழையலாம் என்ற யோசனை தோன்றியவுடன் முதல் வேலையாக வண்டிக் கடனில் தொடங்கி எனது எல்லாக் கடன்களையும் அடைத்தேன். அதற்குப் பிறகே திரைத் துறையில் நுழைந்தேன். இல்லையென்றால் வாழ்க்கை மிகவும் கடினமாகிவிடும் என்று நினைத்தேன்”.
இப்படியும் விளம்பரப்படுத்தலாம்
விஜய் டிவியில் ‘கனெக் ஷன்’ பகுதியில் வழக்கம்போல் கற்பனை வறட்சி. அழும் குழந்தையின் படத்தையும், சாவிக் கொத்து ஒன்றையும் காட்டிவிட்டு இரண்டையும் இணைத்துக் காட்டியதும் ‘அழகி’ என்று சொல்ல வேண்டுமாம்.போட்டியில் கடைசியாக வந்தவர்கள்கூட மலர்ச்சியாகவே இருந்தார்கள். காரணம் ஜெயித்தவர்களுக்கு எந்தப் பரிசும் இல்லை. ‘ரியாலிட்டி ஷோக்களிலேயே முதன்முறையாகப் பரிசு அளிக்கப்படாத நிகழ்ச்சி’ என்றுகூட விஜய் டிவி விளம்பரப்படுத்திக்கொள்ளலாமே.