சினிமா எடுத்துப் பார் 62: கதைக்காக நடிகர்!

சினிமா எடுத்துப் பார் 62: கதைக்காக நடிகர்!
Updated on
3 min read

நான் கதைக்காக நடிகர்களா? நடிகர் களுக்காக கதையா என்று கேட் டால், ‘கதைக்காக நடிகர் என்பது தான் சரியான இலக்கணம்’ என்பதே என் கருத்து. ஆனால், கால வளர்ச்சியில் நடிகர்களுக்காக கதையையும் தேர்ந்தெடுக்கிறோம். அந்த வகையில் நடனம், சண்டை, காதல், நடிப்பு இப்படி கமலுக்கு என்னவெல்லாம் வரும் என்பதை மனதில் வைத்து அண்ணன் பஞ்சு அருணாசலம் எழுதிய கதைதான் ‘சகலகலா வல்லவன்’.

படத்தின் பெயருக்கு ஏற்ற மாதிரி கமல் என்ற கலைஞன் ஒரு சகலகலா வல்லவன் என்பதை நிரூபிப்பதற்காக ஏவி.எம் எடுத்த படம். கமலும் அதை நிரூபித்தார். படத்தின் இடைவேளை வரை கமல் கிராமத்து விவசாயியாக வருவார். அதன் பிறகுஅவருக்கு நகரத்து கெட்டப். இரண்டையும் வித்தியாசமாக செய்து தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

அம்பிகா இதில் பணக்கார வீட்டுப் பெண்ணாக நடித்திருப்பார். கிராமத்தில் குடுமியோடு இருக்கும் கமலை பார்த்து கலாட்டா செய்து அம்பிகா பாடும் கேலி பாடல்தான் ‘கட்டை வண்டி... கட்டை வண்டி’. இன்னொரு சமயத்தில் ‘டிட் பார் டாட்’ என்று சொல்வோமே... அது மாதிரி கமல்கிட்ட, அம்பிகா மாட்டிக் கொள்வார். அப்போது கமல், அம்பிகாவை பார்த்து அதே ‘கட்டை வண்டி’ பாடலை கேலி செய்து பாடுவார். கமல் ஆட்டத்தில் அம்பிகா குளோஸ். காவியக் கவிஞர் வாலி அவர்கள் இந்தப் பாடலின் சிறப்பான வரிகளை எழுதியிருப்பார்.

அப்போது கவர்ச்சி நடனம் என்றால் டிஸ்கோ சாந்தி, சில்க் ஸ்மிதா போன்ற நடிகைகளை ஒப்பந்தம் செய்வோம். கமலோடு, சில்க் ஆடும் ‘நேத்து ராத்திரி யம்மா’ பாடலையும் கவிஞர் வாலி அவர்கள்தான் எழுதினார். இப்படிப் பட்ட பாடல்கள் கவிஞருக்கு கைவந்த கலை.

சூழலுக்குத் தகுந்த மாதிரி பாடகர் களை குரலை உயர்த்தி, தாழ்த்தி பாட வைத்து இசையமைப்பாளர் இளைய ராஜா இந்தப் பாடலை உருவாக்கினார். அதற்குள் ஒரு விரகதாபம் இருக்கும். இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்தது, புலியூர் சரோஜா. பாட்டில் பாவம் இருந் தால் நடனத்தில் விடுவாரா..! கமலும், சில்க்கும் விட்ட பெருமூச்சு தமிழக மக்களை மூச்சடைக்க வைத்தது.

‘சகலகலா வல்லவன்’ படத்தில் கமலும், அம்பிகாவும் கணவனும், மனைவியுமாக நிலவு வெளிச்சத்தில் பாடுவது மாதிரி அமைந்த காட்சி ‘நிலா காயுது… நேரம் நல்ல நேரம்’ என்ற பாட்டு. வீட்டுத் தோட்டத்தில் தென்னை மரங்கள் சூழ்ந்திருக்க நிலா வெளிச்சத்தில் ஒரு கயிற்று கட்டிலில் இருவரும் கட்டி அணைத்துக்கொண்டு காதல் செய்வார்கள். அந்தப் பாடலில் இளையராஜா அவர் கள் முணுமுணுப்பு, முனகல் எல்லாம் வைத்திருப்பார். ஒளிப் பதிவாளர் பாபு அந்த நிலவுக் காட்சியை தத்ரூபமாக ஒளிப் பதிவு செய்திருப்பார். அந்தப் பாடலை எடுத்த பிறகு எடிட் செய்து, போட்டுப் பார்த்தோம். கமல், அம்பிகா இருவரது பாவனைகளையும் பார்த்த வர்கள் ‘‘இந்த முழு பாடலையும் சென் சாரில் வெட்டிவிடுவார்கள்’’ என்றார் கள். அதற்கு நான், ‘‘நிச்சயமாக சென்சாரில் கட் ஆகாது. அவர்கள் எந்த இடத்தில் ‘கட்’ சொல்வார்களோ அந்த இடத்தில் எல்லாம் நான் பூவையும், செடியையும் காட்டித்தான் படமாக்கியுள்ளேன். கமல், அம்பிகா இருவருடைய முக பாவனைகளைக் காட்டவில்லை. அதனால் நிச்சயம் இந்தப் பாட்டு சென்சார் அதிகாரிகளிடம் இருந்து தப்பித்துக்கொள்ளும்’’ என்று உறுதியாக சொன்னேன். அது மாதிரியே அக்காட்சி தப்பித்துக் கொண்டது.

‘சகலகலா வல்லவன்’ வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றைக்கும் மக்கள் மனதில் பதிந்துள்ள பாடல் ‘ஹேப்பி நியூ இயர்… இளமை இதோ.. இதோ!’ எல்லா புத்தாண்டுகளிலும் முதல்நாள் வானொலியிலும், தொலைக் காட்சிகளிலும், இணையதளங்களிலும் ஓடுகிற பாட்டு: ஹேப்பி நியூ இயர்! இசைஞானி இளையராஜா இசைப் பெருமைக்கு ‘ஹேப்பி நியூ இயர்’ பாட்டு என்றும் சரித்திரம் படைக்கும் ஒரு களஞ்சியம்.

அந்தப் பாட்டின் படப்பிடிப்புக்கு முன் சரவணன் சார் என்னிடம், ‘‘முத்து ராமன்... பாட்டு ரொம்ப நல்லா வந்திருக்கு. எவ்ளோ செலவானாலும் பரவாயில்லை. பெரிய செட்டா போட்டு அந்த டான்ஸை எடுங்க’’ என்றார். எப்போதுமே நான் செட் போடுவதற்கு முன்னால் நமக்கு பொருத்தமான செட் எதுவும் ஸ்டுடியோவுக்குள்ள இருக்கா? என்று ஒருமுறை சுற்றிப் பார்ப்பேன். அப்படி நானும் கலை இயக்குநர் சலமும், கேமராமேன் பாபுவும் ஸ்டுடியோவுக்குள் இருந்த செட்டுகளைப் பார்த்தோம்.

ஒரு ஃப்ளோரில் கன்னட படத்துக் காக ராஜ தர்பார் வடிவில் ஒரு அரண் மனை செட் இருந்தது. அது ஒரு சரித் திர படத்துக்காக போடப்பட்டது. எங் களுக்குத் தேவை ஹோட்டல் பின்னணி. ‘எப்படி இந்த அரண்மனை செட்டை பயன்படுத்த முடியும்’ என்று நானும், பாபுவும் யோசித்துக்கொண்டிருந்தோம். கலை இயக்குநர் சலம், ‘‘அந்த செட்டை பைவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி வித் தியாசமா நான் மாத்துறேன்’’ன்னு சொன் னார். அந்த விஷயத்தை சரவணன் சாரிடம் கொண்டுபோனோம்.

சலம் அவர்கள், ‘‘என் மீது நம்பிக்கை வைத்து அனுமதி கொடுங்க. நான் மாற்றிக் காட்டுறேன்’’ என்று சரவணன் சாரிடம் சொன்னார். அவர் ஒப்புக்கொண்டார். அந்த அரண்மனை செட்டை மாற்றி, அதுக்குள்ளேயே 5 செட்டுகள் இருப்பது போல அமைத்து, ஹோட் டலைப் பின்னணியாக வைத்து விளக்கு அலங்காரங்களை எல்லாம் வண்ணமயமாக செய்து அசத்திவிட்டார். கன்னட செட் என்பது மறைந்து, ஏவி.எம் போட்ட பிரம்மாண்டமான ஹோட்டல் செட் என்றாகிவிட்டது. இதற்கு காரணம் ஆர்ட் டைரக்டர் சலம்.

‘ஹேப்பி நியூ இயர்’ பாட்டில் கமல் மோட்டர் சைக்கிளில் வந்தபடி நடனம் ஆடுவது, ஸ்கேட்டிங்கில் சுழன்றுவந்து நடனம் ஆடுவது, நடனக் குழுவினரோடு பல கோணங்களில் நடனம் ஆடுவது போன்று கமலின் நடனத் திறமையை முழுவதுமாக வெளிக்கொண்டு வந் தோம். ஹைதராபாத் போய் ஒரு பெரிய ‘சாண்டிலியர்’ வாங்கி வந்து அந்த செட்டின் நடுவில் கட்டியிருந் தோம். அதில் கமல் தொங்கிக் கொண்டு நடனம் ஆடி வருகிற காட்சியைப் பல கோணங்களில், பல ஷாட்டுகளில் எடுக்க நாங்கள் முடிவு செய்திருந்தோம். அப்போது கமல் என்னிடம் வந்து, ‘‘நான் சாண்டிலியரில் தொங்கிக்கொண்டு நடனம் ஆடும் காட்சியை பல ஷாட்டுகளில், கட் செய்து கட் செய்து எடுத்தால் சரியாக அமையாது. அதை ஒரே ஷாட்டில் எடுத்தால் விறுவிறுப்பாக இருக்கும்’’ என்றார். அவர் கூறியபடி ஒரே ஷாட்டில் அந்தக் காட்சியை எடுத்தோம். அவரது நடனம் மிக அருமையாக அமைந்தது. தியேட்டரில் மக்களின் கைத் தட்டலும் ஆர்ப்பரிக்கிற மாதிரி அமைந்தது.

கமல் எதையும் ஆராய்ந்து நுணுக்கமாகத்தான் சொல்வார். இந்தக் கைத் தட்டலை அவருக்குரியதாக்கு கிறேன். அதைப் போல இந்தப் பாட்டில் முக்கியமான ஒரு ஷாட்டை கடைசியாக எடுக்கலாம் என்று விட்டு வைத்திருந்தேன். ‘‘அந்த ஷட்டை எப்போ எடுக்கப் போறீங்க?’’ என்று கமல கேட்டுக்கொண்டே இருந்தார். அந்த ஷாட் என்ன என்பதை வரும் வாரம் சொல்கிறேனே.

- இன்னும் படம் பார்ப்போம்…

படங்கள் உதவி: ஞானம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in