

“‘குற்றமே தண்டனை’ படத்தை என்னுடைய தம்பிகள்தான் தயாரித்திருக்கிறார்கள். நான் மற்ற படங்கள் போல நடித்துவிட்டு வந்தேன். மணிகண்டன் முதல் பிரதி அடிப்படையில் பண்ணிக் கொடுத்திருப்பதால், இந்தப் படத்தில் எனக்குத் தயாரிப்பு அனுபவமே இல்லை” என்று சிரித்தார் விதார்த்.
‘குற்றமே தண்டனை’ மூலம் எப்படி மணிகண்டனோடு இணைந்தீர்கள்?
ஒரு நல்ல படம் பண்ணணும் என்று தோன்றியபோது மணிகண்டனைச் சந்தித்தேன். அப்போது ‘Wind’ என்ற குறும்படத்தின் டிவிடியைக் கொடுத்தார். அதைப் பார்த்து மிரண்டுபோய், ‘கண்டிப்பாக நாம் ஒரு படம் பண்றோம்’ என்று அட்வான்ஸ் கொடுத்தேன். நான் நடித்துக்கொண்டிருந்த படங்களை முடித்துவிட்டு வருவதற்குள் அவருக்கு ‘காக்கா முட்டை’ கமிட்டாகிவிட்டது. ‘காக்கா முட்டை’யைப் பார்த்துவிட்டு ‘குற்றமே தண்டனை’ பண்ணவில்லை. முதல் படமே எங்கள் நிறுவனத்துக்காகச் செய்திருக்க வேண்டியது தள்ளிப்போய்விட்டது, அவ்வளவுதான்.
படம் ஒரு க்ரைம் த்ரில்லர். த்ரில்லர் படம் என்றால் ஒரு வரையறை இருக்கும். அது எதுவுமே இந்தப் படத்தில் கிடையாது. யதார்த்தம் மீறாமல், பார்ப்பவர்களுக்கு ஒரு புதிய அனுபவம் கிடைக்கும் வகையில் மணிகண்டன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.
மணிகண்டன் இயக்கத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி…
படம் பண்ண ஒப்பந்தம் பண்ணும்போது, “நீங்கள் சொல்வதை நான் செய்வேன், நானாக எதையும் செய்ய மாட்டேன்” என்றேன். என்னுடைய முந்தைய படங்களில் நானாக ஒன்று பண்ணுவேன். அது இயக்குநர்களுக்குப் பிடித்திருந்தால் ஏற்றுக்கொள்வார்கள். “நீங்கள் பண்ணுங்கள். எனக்கு எது தேவை, தேவையில்லை என்பதை நான் முடிவு செய்துகொள்கிறேன்” என்றார் மணிகண்டன்.
இந்தப் படத்தில் நடித்த அனைவருமே கதையைத் தெளிவாகப் புரிந்துவைத்திருக்க வேண்டும் என்று முழுக் கதையும் அடங்கிய புத்தகத்தை என்னிடம் கொடுத்துவிட்டார். படப்பிடிப்புத் தளத்தில் எந்த நடிகரையும் அவர் டென்ஷனாக்க மாட்டார். முடிந்த அளவுக்கு அந்தப் பாத்திரத்தை உள்வாங்கி, அதன் மூலம் வரும் நடிப்பைப் பெற்றுக்கொள்ள முயல்வார். அது ஒரு பெரிய அனுபவம். நான் பணியாற்றிய இயக்குநர்களில் எனக்கு ரொம்பவும் பிடித்த இயக்குநர் மணிகண்டன்.
‘குரங்கு பொம்மை’, ‘ஒரு கிடாரியின் கருணை மனு’ என உங்களது அடுத்த படங்களின் தலைப்பெல்லாம் வித்தியாசமாக இருக்கிறதே…
தலைப்புகள் மட்டுமல்ல, படங்களும் வித்தியாசமானவைதான். தானாக எனக்கு அப்படி அமைந்துவிடுகிறது. அதுவும், மணிகண்டன் படத்தில் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களாக வருவது சந்தோஷமாக இருக்கிறது. ‘குற்றமே தண்டனை’ வெளியீட்டுக்குப் பிறகு, நல்ல கதைகளோடு இயக்குநர்கள் என்னைத் தேடுவார்கள் என நினைக்கிறேன்.
‘குரங்கு பொம்மை’யில் பாரதிராஜாவுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
அவருடைய இயக்கத்தில் நடித்துவிட மாட்டோமா என்று எப்போதுமே எனக்கு ஒரு ஏக்கமுண்டு. அவரோடு நடித்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். அந்தக் காலத்திலேயே நடிகனுக்கு அழகு முக்கியமில்லை என்ற அடிப்படையில் கதைகளை உருவாக்கி வெற்றி கண்டவர். ‘குரங்கு பொம்மை’யில் அவருக்கு மகனாக நடித்திருக்கிறேன். கமல், ரஜினி போன்ற பெரிய கலைஞர்களையெல்லாம் இயக்கிய அனுபவங்களையெல்லாம் பகிர்ந்துகொண்டார். டப்பிங்கின்போது படத்தைப் பார்த்துவிட்டு என்னைக் கட்டிப்பிடித்துப் பாராட்டியது ரொம்ப மகிழ்ச்சி. “என்னடா இவ்வளவு யதார்த்தமான நடிகனாக இருக்குறியே! நீ நடித்ததே தெரிய வில்லை. அவ்வளவு லைவா இருக்கு” என்றார்.
‘சண்டக்கோழி’, 'கொக்கி’, ‘லீ’, ‘குருவி’ போன்ற படங்களில் துணை நடிகராக இருந்துவிட்டு, நாயகனாக ஆகியிருக்கிறீர்கள். இந்த மாற்றம் எப்படி இருக்கிறது?
இதைப் பெரிய மாற்றமாக நான் பார்க்கவில்லை. அந்தப் படங்களில் நடித்ததை நான் மறைக்கிறேன் என்று பலர் என்னிடம் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, நாயகனாக நடித்துக்கொண்டிருந்தபோது ‘ஜன்னல் ஓரம்’ படத்தில் வில்லனாக நடித்தேன். எனக்குப் படமில்லாமல் அதைப் பண்ணவில்லை. எனக்குப் பிடித்திருந்தால் என்ன பாத்திரம் வேண்டுமானாலும் பண்ணுவேன்.
‘வீரம்’ படத்துக்குப் பிறகு அஜித்தைச் சந்தித் தீர்களா? அவர் உங்களுக்கு அளித்த அறிவுரையில் நீங்கள் எதைக் கடைப்பிடிக்கிறீர்கள்?
‘வாங்குற சம்பளத்தில் ஒரு பகுதியை உனக்குப் பிடித்த கடவுளுக்கு ஏதாவது பண்ணணும். மற்றொரு பகுதியை கல்விக்கோ, ஏழைகளுக்கோ உதவி செய்ய வேண்டும்’ என்று அஜித் சார் சொல்லியிருக்கிறார். அதை நான் பின்பற்றிவருகிறேன். அவருடைய எண் இருந்தாலும், தொந்தரவு பண்ணக் கூடாது என்பதால் போன் பண்ண மாட்டேன். ஆனால், அவர் அடிக்கடி போன் பண்ணுவார்.
நடிப்புக்குப் பயிற்சி எடுத்துக்கொண்டு சினிமாவுக்குள் வந்தவர் நீங்கள். இன்று பல புதுமுக நடிகர்கள் எங்குமே நடிப்பைக் கற்றுக்கொள்ளாமல் வருகிறார்களே?
அப்படி வருபவர்களும் வெற்றியடைகிறார்கள். அதற்கு இயக்குநர்கள்தான் காரணம். இன்றைக்கு வரும் இயக்குநர்கள் ரொம்பவும் திறமை வாய்ந்தவர்கள். இன்றைக்கு வரும் புதுமுக நடிகர்களும் நிறைய படங்கள் பார்த்த அனுபவத்தில் நடிக்க வருகிறார்கள். அது ஒரு படத்துக்கு மட்டுமே உதவியாக இருக்கும். கண்டிப்பாக அனைத்துக்குமே ஒரு பயிற்சி தேவை. இயக்குநராக ஆக வேண்டும் என்றால் உதவி இயக்குநராகப் பணிபுரிகிறார்கள், குறும்படம் எடுத்துப் பழகிக்கொள்கிறார்கள். இன்றைக்கு கமல் சாரே படப்பிடிப்புக்கு முன்பு பயிற்சி எடுத்துக்கொள்கிறார். நிறைய இடங்களில் பயிற்சி மிகவும் முக்கியம் என்று வலியுறுத்தியிருக்கிறார் அவர். புதியவர்களும் கண்டிப்பாகப் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது என் கருத்து.
திருமண வாழ்க்கை எப்படியிருக்கிறது… மனைவி என்ன சொல்கிறார்?
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. தற்போது வருகிற படங்களிலெல்லாம் என்னுடைய கெட்டப், உடை எல்லாம் புதிதாகத் தெரியும். அதற்குக் காரணம் என் மனைவிதான். நான் தேர்வு செய்யும் படங்களும் வித்தியாசமாக இருக்கின்றன. என் மனைவி உலக சினிமா ஆர்வலர் என்பதால், அவர் சொல்லும் விஷயங்களில் பலவற்றையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். திருமணம் என்னை மாற்றியிருக்கிறது என்றுதான் சொல்வேன்.